நூல் அறிமுகம்

தூரிகைப்போராளி

மதிமலர்

பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து அதன் விழுதுகளையும் வேர்களையும் காண்பித்து இயற்கைதான் எனக்கு ஓவியப்பயிற்சி அளித்தது என்கிறார் ஓவியர் புகழேந்தி. அவர் பற்றிய எரியும் வண்ணங்கள் என்கிற ஆவண ஒளிப்பதிவு குறுவட்டு இப்படித்தான் ஆரம்பிக்கிறது. தான் பிறந்து வளர்ந்த தும்பத்திக் கோட்டை கிராமத்தை ஒரு புகழ்வாய்ந்த ஓவியராக அவர் திரும்பிப்பார்க்கும் காட்சிகள் அழகாக படம்பிடிக்கப் பட்டிருக்கின்றன.

பங்குனி உத்திரத் திருவிழா முடிந்து அலங்காரத்துடன் இருக்கும் ஊர்த் தேரை வரைந்து பயிற்சி எடுத்துள்ளேன் என்று அவர் சொல் கையில் வருகிற அந்தத்தேர் மிக அழகு. வயல்கள், பனைமரங்கள், செம்பழுப்பு நிறத்தில் வரிசையாக அணிவகுக்கும் புகழேந்தியின் புகழ்பெற்ற ஓவியங்கள் என்று தொடர்ந்து வரும் காட்சிகளுக்கு இடையே நல்லகண்ணு, வைகோ, ராமதாஸ் பழ.நெடுமாறன், அப்துரகுமான், சீமான், திருமாவளவன், சுபவீ, பாலுமகேந்திரா, சத்யராஜ், தியாகு, வீரசந்தானம், இன்குலாப், மு.ராமசாமி எனப் பிரபலங்கள் புகழேந்தியின் ஓவியப் பயணம் பற்றிப் பேசுகிறார்கள்.

ஓர் ஓவியத்தை  ஓவியன் படைக்கையில் அந்த ஓவியனையும் அந்த ஓவியம் படைத்துவிடுகிறது என்கிறது பின்னணியில் ஒலிக்கும் தியாகுவின் குரல். குஜராத் பூகம்பம், அர்மீனிய பூகம்பம், தென் ஆப்பிரிக்கப் போராட்டம், சாதி ஒடுக்குமுறைகள், ஈழப்போராட்டம் என்று அவலங்களை வரைந்தவர் புகழேந்தி. ஈழ மண்ணுக்குச் சென்று ஓவியக் காட்சிகளை நடத்தியதையும் இந்த குறுந்தகட்டில் அவர் பதிவுசெய்கிறார்.  சுமார் 25 ஆண்டுகளாக தூரிகைப் போராளியாக வாழ்ந்துவரும் இவர் குறித்த இந்த படத்தை இயக்குநர் மகேந்திரனின் மேற்பார்வையில் ஜான் இயக்கியிருக்கிறார். வழக்கமான ஆவணப்படங்களின் பாணியில் அல்லாமல் சுவாரசியமாக இருப்பது இதன் சிறப்பாகும்.

இயக்குநர் மகேந்திரன் மேற்பார்வையில்

இயக்கம்: ஜான்

எதிர்க்குரல்

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏன் என்கிற அடிப்படை கேள்வியோடும் அழகான, தெளிவான ஒளிப்பதிவுக் காட்சிகளுடனும் ஆரம்பிக்கிறது முடிவின் ஆரம்பம் என்கிற இந்த ஆவணப்படம். கோவையைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் சிவா இயக்கியுள்ள இப்படம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் குறைபாடுகளை கேள்விக்குள்ளாக்குவதுடன் அணு மின்சாரமே வேண்டாம் என்கிற இறுதிக் கருத்தை ஆணித்தரமான காட்சிகளுடன் முன்வைக்கிறது. தமிழ்நாடு மின்பொறியாளர் அமைப்பின் தலைவர் சா.காந்தி, மாநிலத்தில் இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களை சரிசெய்தாலே கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பதை இப்படத்தில் விளக்குகிறார். கூடங்குளம் மின் நிலையம் தன் சொந்த உபயோகத்துக்கு 200 மெகாவாட் பயன்படுத்திக்கொண்டு மீதி 600 மெகாவாட்தான் வெளியே தரும். அதிலும் 46 சதவிகிதம்தான் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் என்ற தகவலை இந்த ஆவணப்படம் சொல்கிற போது இதற்கா இவ்வளவு கோடிகள், செலவு என்று தோன்றுகிறது. கல்பாக்கம் அணு உலையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், அங்கு பணி புரிந்து புற்றுநோயால் இறந்த ஒருவரின் மகளின் பேட்டி என்றெல்லாம் விரிந்துசெல்லும் இந்த ஆவணப்படத்தில் பேசும் சுப. உதயகுமாரன் கூடங்குளம் அணுமின்நிலைய திட்ட இயக்குநராக இருந்த எஸ்.கே.அகர்வால் புற்றுநோயால் இறந்து அந்த தகவல் மறைக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்து இறந்ததாக செய்தி வெளிவந்ததைச் சொல்கிறார். கூடங்குள அணுமின் நிலைய சிலிண்டரில் குறைபாடு என விஞ்ஞானி வி.டி. பத்மநாபன் கூறுகையில் பல்வேறு விதிமுறைகள், அமைவிடத்தகுதிகளை மீறி இது அமைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் மருத்துவர் புகழேந்தி.  உலகெங்கும் நடந்த அணு உலை விபத் துக்கள் பற்றிய காட்சிகளும் இதில் தொகுக்கப் பட்டிருப்பது இயக்குநர் மற்றும் அவரது குழுவினரின் கடும் உழைப்பைக் காண்பிக்கிறது. அணு சக்திக்கு எதிரான வலுவான படம் இது.

வெளியீடு: உலக மனிதாபிமான கழகம், 9994232711