நூல் அறிமுகம்

உறவுகளின் புனைவுலகில்

மதிமலர்

மாசிலன் என்ற தாத்தாவின் சாவுக்குச் செல்லும் பேரனின் மனநிலையை விவரிக்கும் கதையில் தொடங்கும் இத்தொகுப்பு ஊருக்கு அம்மாவுடன் செல்லும் பேரன் தாத்தா வெட்டிய குளத்தை ரசிக்கும் ஆலரசு குளம் என்ற சிறுகதையில் முடிவடைகிறது. இந்த இரண்டு ஊர்திரும்புதல்களுக்கு இடையே சுரேஷ் பிரதீப்பின் சிறுகதை உலகம் நம்மை நோக்கி விரிந்துகிடக்கிறது.  தஞ்சைப் பகுதிக்கு உரிய வசைச்சொற்களும் உரையாடல்களும் நிறைந்த கதைகள். எல்லா கதைகளிலும் ஊரும் அங்கிருக்கும் உறவுகளின் ஏதோவொரு வகைப்பட்ட  உணர்வுகளும்தான். அம்மாவிடம் இருந்து தப்பி, புனேவுக்கு வேலை கிடைத்துப் போயும் அவளை மறக்கமுடியாத, மகள் பிறந்து அவளிடம் அம்மாவை ஒரு தருணத்தில் காணக்கூடிய பெண்ணின் கதையை ‘சொட்டுகள்’ சிறுகதையில் காணலாம். ஆனால் அம்மா என்ற நினைவு அவளுக்கு வழக்கமான பாச நினைவு அல்ல என்பது இந்த கதையை முக்கியமானதாக்குகிறது. சியாரா லியோனைச் சேர்ந்த பெண்ணுடன் உரையாடும் அகம் என்ற சிறுகதையும் குறிப்பிடத்தகுந்தது. மனிதர்களையும் அவர்களின் உறவுகளையும் ஆழமாக நோக்கும் சிறுகதைகளாக இவற்றை வகைப்படுத்தலாம். தனக்குள் நிகழ்ந்த திடுக்கிடல்களையே  இவ்வாறு சிறுகதைகளாக எழுதியிருப்பதாகக் குறிப்பிடும் சுரேஷ் பிரதீப் நம்பிக்கையின்மையில் இருந்து நம்பிக்கைக்கு தன் புனைவுலகு நகர்ந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

நாயகிகள் நாயகர்கள், சுரேஷ் பிரதீப்,  கிழக்கு பதிப்பகம், 177/103,  முதல் தளம், அம்பாள்  கட்டடம், லாயிட்ஸ் சாலை,  ராயப்பேட்டை, சென்னை-14 பேச: 044-42009603 விலை ரூ: 125.

கவி அனுபவம்

‘மின்மினிப் பூச்சிகளற்ற இரவை

ஈடு செய்ய முடிவதில்லை

நட்சத்திரங்களால்’ என்கிறது இத்தொகுப்பின் ஒரு கவிதை.

அன்றாட வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்கள், துக்கங்கள், துக்க வீட்டில் அழும் காதலியைக் கண்டு கொள்ளும் காதல், எப்போதாவது பெய்யும் மழை மீதான கவிக்கோபம், குருட்டுப் பிச்சைக் காரியின் உடலைக் கொத்தும் கண்கள், குழந்தைகளின் குழந்தைத் தன்மை மீதான வாஞ்சை, சொற்களை செலவழித்துவிட்டவனின் குரவளையை நெரிக்கும் மௌனம்,  தன்னிலை மீறும் வாழ்வின் யதார்த்தம் என தொகுப்பு முழுவதும் கவிதை அனுபவம் நிறைந்து கிடக்கின்றன. இரவு இல்லையென்றால் நட்சத்திரங்களை யாருக்குத் தெரியும் என்கிறார் கவிஞர். புற உலகின் சின்னஞ் சிறிய அசைவுகளும், உலகுக்கு அப்பாலான உலகம் மீது மனிதன் செலுத்தும் பார்வையும் சேர்ந்து ஒலிக்கும் சொற்கள் இவரது கவிதைகள் எனலாம். வாசிப்பதற்கு எளிமையாகத் தோன்றும் கவிதைகள் அர்த்தத்தில் கணம் பொருந்தியவை என்பதே இந்தத் தொகுப்பின் சிறப்பு.

சதுர பிரபஞ்சம்: கோ.வசந்தகுமாரன், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், எண்:6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை - 600 078 பேச: 044-6515 7525 / 87545 07070. விலை ரூ: 200

படைப்புலகு

தமிழ் இலக்கிய ஆளுமைகளை அவர்களின் எழுத்து வழியே அணுக முயற்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நகுலன், ப.சிங்காரம், லா.ச.ரா, எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஜி.நாகராஜன் என எழுதிய காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளுமைகளின் மீது வாசக வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது.  நகுலன் என்ற பெயர்க்காரணம், நகுலன் படைப்புகளின் அகவுலகப் பயணம், தத்துவ தரிசனம்,  சுயத்தை அழித்தல் பற்றிப் பேசும் நகுலனின் கவிதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பின் முக்கியமான ஒன்று. கடவுளுக்கு இந்த உலகில் இடமில்லை என்று அறிவித்த ப.சிங்காரம் நாவல்கள் பற்றிய கட்டுரை அவரை வாசிப்பதற்கான முதல் படி. நம் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளின் நுட்பங்கள் உணர வாசிப்பு அனுபவம் வேண்டும். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் வாசிப்பனுவம் மிளிரும் கட்டுரைகள். முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகளை எளிமையான நடையில் விமர்சிக்கிறது இந்தப் புத்தகம்.

புனைவு வெளி, நா.விச்வநாதன், வெளியீடு: பேசும் புதிய சக்தி, எண்: 29 ஏ, ஏ.என்.ஆர். காம்ப்ளக்ஸ், தெற்கு வீதி, திருவாரூர் - 610 001. பேச: 94439 73671 / 9750697943.விலை:ரூ.150

பணி வரலாறு

தமிழக காவல்துறையின்  ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளில் ஒருவரான வி.ஆர்.லட்சுமி நாராயணன் ஐபிஎஸ் பற்றிய நூல் இது. எமெர்ஜென்சிக்குப் பிறகு காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி இந்திரா காந்தியைப் பழிவாங்க விரும்பியது. அவர் மீது குற்றச்சாட்டுகளும் இருந்தன. ஒருநாள் அவர் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லியில் இருந்து ஹரியானாவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் டெல்லி எல்லையைத் தாண்டுமுன் ஒரு ரயில்வே கேட்டில் வாகனங்கள் நின்றபோது அதில் இருந்து  சாலையோரம் ஒரு கல்லில் அமர்ந்துவிட்டார். நான் வரமாட்டேன். வேண்டுமானால் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்த காவல்துறை அதிகாரி சிபிஐயில் இருந்த லட்சுமி நாராயணனே. இந்திரா சொல்வதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவரை மீண்டும் டெல்லிக்கே கொண்டுவந்தார் அவர். இதை சிபிஐயில் உள்ள  உயர் அதிகாரிகளே விரும்பவில்லை! இந்த கைது களேபரமாக முடிந்தது.  1980-ல் இந்திராவே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். லட்சுமி நாராயணன் சென்னைக்கு மாற்றப்பட்டு,  ஒரு டம்மி  பணியிடத்தில் அமர்த்தப்பட்டார். இதுபோன்ற பல்வேறு பணிக்கால சம்பவங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றி தமிழக டிஜிபியாக ஓய்வுபெற்ற லட்சுமி நாராயணன் பல பிரதமர்கள், பல முதலமைச்சர்களிடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இந்திய வரலாற்றில் முக்கிய வழக்குகளை விசாரித்தவர். அந்த வகையில் இந்த நூல் பல வரலாற்றுச் சம்பவங்களைத் தொட்டுப் பேசுகிறது.

நெஞ்சில் உரம் நேர்மைத்திறம் வி.ஆர். லட்சுமி நாராயணன் ஐபிஎஸ், பத்திரிகையாளர் திருமலை, வெளியீடு: சோக்கோ அறக்கட்டளை,  நீதிபதி பகவதி பவன், 143, ஏரிக்கரை சாலை,  கேகே நகர்,  மதுரை -625020 தொ.பேசி: 0452- 2580636 விலை: ரூ.200

உதிரி மனிதர்கள்

ஜீவன் பென்னியின் இரண்டாவது கவிதைத் தொகுதி அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள். அளவில் சிறியதும் பெரியதுமான இக்கவிதைகள் நகர வாழ்வின் உதிரி மனிதர்களைப்பற்றித்தான் அதிகம் பேசுகின்றன. நீள அகலங்களில் சிக்காது நகர வாழ்வின் கீழ் அடுக்குகளில் சுற்றித் திரியும் மனிதர்கள் தன் அழுக்குத் தோலுடன் நடமாடுகிறார்கள். உண்கிறார்கள், உணவகங்களில் கோப்பை கழுவுகிறார்கள். சீருடைக் காவலாளியாக சூரியனுக்குக் கீழே நிற்கிறார்கள்.  சமயங்களில் வெறுமனே ‘இருக்கிறார்கள்’. குழந்தையின் பொம்மை குட்டித் தோசைக்காக மௌனமாக காத்திருக்கிறது. நாற்கர சாலையின் கானலில் பஞ்சு மிட்டாய் உருகி வழிகிறது. ஓயாமல் வரவு செலவு பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளுக்கு தார்ச்சாலை மரணங்கள் பற்றிய குறுஞ் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனுப்புவதுதான் யார் என்று தெரியவில்லை.  இந்தத் தொகுப்பில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் அதன் நவீனம்தான்.  உள்ளடக்கத்தில் எளிமை கொண்ட கவிதைகள் கூட, கவனம் மிகுந்த மீள் வாசிப்பில் வேறு வேறு அர்த்தம் கொள்கின்றன. கொஞ்சம் மெனக்கெட்டால் வாசிப்பவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பனுபவம் காத்திருக்கிறது.

அளவில் மிகச் சிறியவை அக்கறுப்பு மீன்கள், ஜீவன் பென்னி, வெளியீடு: மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் -636 453 பேச: 98946 05371, விலை: ரூ.90