நூல் அறிமுகம்

மக்களோடு மக்களாக

மதிமலர்

குன்னம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கர் எழுதியிருக்கும் நூல் இது. ஈர்ப்பான நடையில் சிறுகதைகளுக்கு உரிய சுவாரசிய பாணியில் எழுதி இருக்கிறார்.

சிவசங்கரின் உயர்ந்த மனதையும், அவரது திராவிட இயக்க கொள்கைகள் பற்றிய புரிதலையும் விளக்கும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. பல இடங்களில் அடக்கியே வாசித்திருக்கிறார். அஞ்சலிக்குறிப்புகள் நெகிழ்வாக இருக்கின்றன. தமிழக அரசியலுக்கே உரிய சில தனிப்பட்ட அம்சங்கள் இந்த நூலில் தென்படவில்லை என்பது ஆச்சரியம். ரஜினிகாந்த், எஸ்.பி.பி. பிறந்த நாள் வாழ்த்துக்கட்டுரைகள் முதல் சிறுமி மதுமிதாவின் தொலைபேசி அழைப்பு வரை நிஜமாகவே மக்களோடு நிற்கிறார் சிவசங்கர்!

மக்களோடு நான், எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வின் உணர்வும் பகிர்வும், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பல் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை,

சென்னை-14 பேச: 044-42009601

எழுத்தே வாழ்வு

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் வரலாற்றை சாகித்ய அகாதெமிக்காக தொகுத்துள்ளார் கழனியூரன். ‘நான் சந்தித்த எழுத்தாளர்களில் மிகவும் சுயமரியாதை உடைய எழுத்தாளர் வல்லிக்கண்ணன், இலக்கியத்திற்கு வாழ்க்கைப்பட்டதால் இவர் இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்கிறார்’ என்பது ஜெயகாந்தன் வல்லிக்கண்ணன் பற்றி எழுதிய குறிப்பு.  எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர் இவர் என்பதிலிருந்து பல்வேறு தகவல்களை இந்நூல் தருகிறது.

சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.

சாகித்திய அகாதெமி விருது, தமிழ் வளர்ச்சி துறை விருது மற்றும் கலைஞர் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ள இலக்கிய முன்னோடியின் வாழ்வு ஒரு நடுத்தர வர்க்க நவீனத் தமிழ் வாழ்வாக இருந்துள்ளது.

இந்திய இலக்கியச் சிற்பிகள்- வல்லிக்கண்ணன், கழனியூரன். வெளியீடு: சாகித்ய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை- 18

நினைவுக்குறிப்பு

‘கள்ளப்பாளையத்தின் கருவேலங்காடுகளிலும் கண்ணூரின் முந்திரித் தோப்புகளிலும் மாறி மாறி வளர்ந்ததால் நினைவுகளில் இருமொழிப் பதிவுகள் உள்ள மிருகமானேன் நான்”- என்கிற ஸ்ரீபதி பத்மநாபாவின் மலையாளக்கரையோரம் என்கிற இந்நூல் அழகான நினைவுக்குறிப்பாக மலர்ந்துள்ளது.  தாத்ரிக்குட்டி என்னும் சாதனம் என்கிற கட்டுரையில் இருக்கும் ‘ஸ்மார்த்த விசாரம்’ விவகாரமும் அதன் கடைசியில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும் பேராச்சரியத்தை உண்டுபண்ணுகின்றன. கேரளத்தில் உள்ள காசர் கோட்டில் பதிவு செய்யப்பட்டு, பாலக்காட்டில் அலுவலகம் தொடங்கி ஆரம்பிக்கப்படும் லாட்டரி சீட்டு கம்பெனியில் நூலாசிரியரின் அனுபவம் பயங்கர விறுவிறுப்பு. குடித்துவிட்டு வருவேன்; ஆனாலும் பிடிக்கமுடியாது என்று போலீஸுக்கே சவால் விடுகையில் குறும்பு கொப்பளிக்கிறது.

மலையாளக்கரையோரம், ஸ்ரீபதி பத்மநாபா, வெளியீடு: புதுஎழுத்து, 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம்- 635112 பேச:9842647101 விலை: ரூ 90

ஒளிப்பாடம்

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒளி எனும் மொழி. இப்புத்தகத்தில் ஒளிப்பதிவுத் தொழில்நுட்பங்களை எளிய தமிழ்நடையில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பழைய தொழில் நுட்பங்களைசொல்லிக்கொண்டே இன்றைய டிஜிட்டல் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துகிறார். சின்ன சின்ன நுட்பங்களை கூட தெளிவாக விளக்கியுள்ளார். அதற்கு சில படங்களின் காட்சிளை கொண்டு தெளிவு படுத்துகிறார். சினிமா உருவாகும் விதம், டிஜிட்டல் சினிமா, ஒளிப்பதிவு கருவிகள், ஒளிப்பதிவு தொழில் நுட்பம், கேமரா தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள் ஆகிய தலைப்புகளில்  விளக்கமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.லென்ஸுகள், விளக்குகள், ஒளி அமைப்பு, காமிரா கோணங்கள் என பலவற்றை சொந்த அனுபவம் சார்ந்து எழுதியிருப்பதால் சுலபமாகவும் எளிமையாகவும் உள்ளது. ஒளிப்பதிவு மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

ஒளி எனும் மொழி, ஆம்ஸ்ட்ராங், வெளியீடு:

பேசாமொழி, 30 ஏ, கல்கி நகர், கொட்டிவாக்கம்,  சென்னை -41 விலை: ரூ 250.