திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு.ஐயரால் நடத்தப்பட்ட குருகுலத்தில் பிராமணர், பிராமணரல்லாத மாணவரிடையே கடைப்பிடிக்கப் பட்ட சாதி ஏற்றத்தாழ்வு 1924-ஆம் ஆண்டு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் பிற புரவலர்களிடம் நிதி திரட்டி நடத்தப்பட்ட இந்த குருகுலத்தில் சமத்துவத்தைக் கொண்டுவர வரதராஜுலு நாயுடு, பெரியார் முதலியவர்கள் போராடினர். பத்திரிகைகள், பொதுமேடைகள், காந்தியிடம் புகார் என்று பல்வேறு கட்டங்களில் இந்த பிரச்னை விவாதிக்கப்பட்டது. பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறுவதற்கும் அதைத் தொடர்ந்து திராவிட அரசியல் எழுச்சி பெறுவதற்கும் இந்த சம்பவம் மிக முக்கியமான காரணம் ஆயிற்று. அந்த காலகட்டத்தில் சுதேசமித்திரன், தி இந்து, குமரன், ஊழியன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் வ.வே.சு ஐயரை எதிர்த்தும் ஆதரித்தும் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்து பலரும் கருத்துகளை வெளியிட்டனர். தேசியக் கல்வியை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த குருகுலத்துக்கு முதலாண்டுச் செலவு 10,200 ரூபாய் ஆகும் என்று தோராய திட்டசெலவைத் தயாரித்த வ.வே.சு.ஐயருக்கு 10,000 ரூபாய் காங்கிரஸ் கட்சி தருவதாக ஒப்புக்கொண்டு பெரியார் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது 5000 ரூபாய் வழங்கப்பட்டது. அது அல்லாமல் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் நிதி வழங்கினர். குருகுலத்தில் ஏற்றத்தாழ்வு காட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பலரும் இந்த சாதிய நடைமுறைகளை மாற்றச்சொல்லிக் கேட்கையில் வ.வே.சு ஐயர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே நிதியைத் திருப்பித் தரும்படி கேட்கப்படுகிறது. அதற்கும் அவர் ஒப்புகொள்ளாமல் குருகுலப் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறார். இந்த வாத பிரதிவாதங்களைத் திரட்டித் தொகுத்து மிக முக்கியமான ஆவணமாக நூலாசிரியர் பழ. அதியமான் பல்லாண்டு உழைப்பைச் செலுத்தி அளித்துள்ளார். பலராலும் கவனத்தில் கொள்ளப்படாத பல ஆவணங்களையும் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அரிய படங்களும் பின்னிணைப்புகளுமாக சேரன்மாதேவி குருகுலப் பிரச்னை பற்றிய முழு ஆய்வுத் தொகுப்பாக இதைக் கருதலாம். திராவிட இயக்க ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கவனத்தில் கொள்ளவேண்டிய நூல்.
சேரன்மாதேவி
குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
பழ.அதியமான், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோயில் 629001. விலை ரூ 275
‘தாய்ப்பால் இங்கே
கசக்கிறது’ என்ற இந்த தொகுப்பில் 19 சிறுகதை களை பதிவு செய்திருக்கிறார் சுரபி விஜயா செல்வராஜ். ’உள்ளே..’ என வரிசையாக சொல்லப்படும் இவற்றில் புத்தகத்தின் தலைப்பில் உள்ள ‘தாய்ப்பால் இங்கே கசக்கிறது’ என்ற டைட்டிலை தேடாதீர்கள். இருக்காது. உள்ளீடாக இந்தக் கதைகளில் பெரும்பாலும் அம்மாக்களின் துயரங்கள், பாச பிணைப்பு, இழந்து போன வாழ்க்கை போன்றவைதான் அதிகமாக இருக்கின்றன. அதனாலோ என்னவோ தாய்ப்பால் இங்கே கசக்கிறது!
‘அம்மாவுக்கு இனி டாக்டர் தேவையில்லை’ என்ற ஒரு கதையே இதற்கு உதாரணம். அதுபோல் அமராவதி நதி அமரராகிவிட்ட காலக் கொடுமையை பிரசார தொனியிலேயே சொல்கின்றன ‘கரைந்த லட்சியங்கள்!’, ‘பிரணவ மந்திரம்’ போன்ற கதைகள்.
கிராம மண்ணிலேயே பிறந்து வளர்ந்து அதன் ஒவ்வொரு நிமிடத்தையும்
ரசித்து, குதூகலப்பட்டு பின்னர் வெம்பி, ஆவேசப்பட்டு, இழந்துபோன அதன் ஆன்மாவின் வறுமையைக் கண்டு கண்ணீர்விட்டு கொங்கு மொழியின் கொச்சையோடு படைத்திருக்கிறார் விஜயா.
தாய்ப்பால் இங்கே கசக்கிறது, சுரபி விஜயா செல்வராஜ், விஜயா பதிப்பகம், 20 ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001,
பேச: 0422 - 2382614 / 2385614 விலை: ரூ.80
தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த ‘மறுபடியும்.’
விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக
சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், மருமகளை ரணப்படுத்தி
சாவின் அணைப்புக்காக காத்திருக்கும் மாமியார்கள்.. அற்ப தொகையை கடனாக வாங்கிக்கொண்டு சாமர்த்தியமாக ஏமாற்றும் நண்பர்கள், கைக்காசை இழந்து லட்சிய வேள்வியில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் சிற்றிதழ் நடத்தும் மதுபாலன்கள்... இப்படி தினுசு தினுசான மனிதர்கள் இங்கே அலைகிறார்கள்.
ஈரம் கொண்ட மனதையும், மனிதாபிமானம் சுமக்கும் இலக்கையும், சிநேகத்தால் அரவணைக்கும் எழுதுகோலையும் வைத்துக்கொண்டு கோலங்கள் போட்டிருக்கிறார் கனகராஜன். பெரும்பாலும் ஒரே அச்சில் சுழலும் கோலங்கள்!
மறுபடியும், கனகராஜன், எதிர்வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு,பொள்ளாச்சி - 642002.
பேச: 04259 - 226012, 98650 05084.விலை: ரூபாய் 70.
ஜென் என்றால் என்ன? அதன் வரலாறு என்ன? அதைப் பயில்வது எப்படி? அதன் தத்துவம் எப்படிப்பட்டது போன்ற விவரங்களை ஆரம்பகட்ட நிலையினருக்கு சொல்லும் நூல் இது. இதன் சிறப்பியல்பு மிகவும் எளிமையான மொழியில் அழகான படங்களுடன் இது எழுதப்பட்டுள்ளது என்பதுதான். ஜூடித் பிளாக்ஸ்டோன், ஸோரஜோசிபோவிச் என்ற இரு அமெரிக்கர்களும் ஜென் பௌத்தம் பயின்றவர்கள். இவர்கள் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்காக எழுதிய இந்நூலை சேஷையா ரவி தமிழில் மொழி பெயர்த்துள்ளார். போதிதர்மர் சீனத்துக்குச் சென்று போதித்த பௌத்த தியான முறையே ஜென். ஜென் என்பது படித்து புரிந்துகொள்ள இயலாத ஒன்று. இதை ஆழ்ந்த பயிற்சியின் மூலமே உணரமுடியும். நம் அகப்பார்வையை விழிக்க வைத்தல், அன்றாட வாழ்வு முழுவதும் மாற்றம் பெறுதல், திறன்களைக் குவித்தல் போன்றவற்றை வலியுறுத்தும் ஜென் பௌத்த மதத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை வளர்த்தெடுக்கக் கூடியது. இந்நூலின் கடைசிப் பக்கம் வழி என்ன? என்று கேட்டு நட என்று பதில் சொல்கிறது. இதுதான் ஜென்.
ஜென் தொடக்க நிலையினருக்கு, தமிழில்: சேஷையா ரவி வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை,
புத்தா நத்தம்- 621310. பேச: 04332273444
அழகு முத்துக்கோன், பூலித்தேவர், ஹைதர் அலி, வேலு நாச்சியார், தீரன் சின்ன மலை, கட்டபொம்மன், திப்பு சுல்தான், ஜான்சி ராணி, வாஞ்சிநாதன், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சிஎன்று நீளும் தேசபக்தர்களின் வீரம் செறிந்த வரலாறு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுபோன்ற நூல்கள் இருந்தாலும் நூலாசிரியர் தகவல் களைப் பதிவு செய்வதில் ஆழ்ந்த கவனத்தையும் வரலாற்றுப் பார்வையையும் கொண்டவர் என்பதால் இந்த நூல் சிறப்பாக வந்துள்ளது. பூலித்தேவன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார் என்னும் இந்நூல் அவர் சங்கரன்கோவிலில் ஜோதியில் கலந்ததாக சொல்லப்படும் கதைப்பாடலையும் பதிவு செய்கிறது. பகத்சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நூல் அவரது உடல் அரைகுறை மயக்கத்திலேயே ரகசியமாகக் கொண்டு செல்லப்பட்டு வெள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு உடல் எரியூட்டப் பட்டது என்கிற தகவலையும் கூறுகிறது.
இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாய்ட்ஸ் சாலை, ராயப்பேட்டை,
சென்னை-14 போன்: 044-42009603 விலை ரூ.150