நூல் அறிமுகம்

பயணச் சுவடுகள்

மதிமலர்

தமிழின் முதல் பயணநூல் என்று அறிமுகப்படுத்தப்படும் இந்நூல் 150 ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் வட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பயணக்குறிப்புகளைக்  கொண்டுள்ளது. சே.ப.நரசிம்மலு நாயுடு வட இந்திய நகரங்கள் முழுக்க ஆங்கிலேயர் ஆட்சி நடந்த அந்த காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டதுடன் ஒவ்வொரு ஊரின் வரலாற்றுக் குறிப்புகளையும் இதில் விளக்கமாக எழுதியுள்ளார். இந்திய வரலாறு தெளிவாகத் துலங்காத அக்காலத்தில் அவர் ஓரளவுக்கு இவற்றை எழுதி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. 1885&ல் பம்பாயிலும் 1886&ஆம் ஆண்டில் கல்கத்தாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் சபைகளில் பங்கேற்க நரசிம்மலு நாயுடு வடநாடு சென்றுள்ளார். அந்த பயண அனுபவங்களைத் தொகுத்து 1889&ல் முதல் பதிப்பும் அதைத்திருத்தி 1913&ல் இரண்டாம் பதிப்பும் வெளியிட்டுள்ளார்.
சராசரியாக இல்லாமல் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துக் கொண்டாடுவது இந்த நூல் முழுக்க இவரது வழக்கமாக உள்ளது. அன்றைக்கு இருந்த சாதி மத வழக்கங்கள், ஆங்கில ஆட்சியை கேள்வி இன்றி ஏற்றல் போன்ற பின்னணியில் இருந்துதான் இவரது எழுத்தைப் பார்க்கவேண்டும். இந்நூலுக்கு சிறந்த ஒரு பதிப்புரையை எழுதி உள்ளார் இதன் பதிப்பாசிரியர் ந.முருகேசபாண்டியன். அது இந்நூலை வாசிப்பதற்குத் தேவையான தரவுகளை முன்கூட்டியே தருகிறது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முந்தைய வட இந்தியாவின்
சித்திரத்தை ஒரு திராவிட மனத்தின் மூலமாக இந்நூல் தமிழில் தருகிறது என்பதே முக்கியமானது.

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்,

சே. ப.நரசிம்மலு நாயுடு,

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,

கேகே நகர் மேற்கு,

சென்னை - 600078, பேச: 8754507070 விலை ரூ 600.

களஞ்சியத்தின் கதை

சின்ன  நூல்தான். 90 பக்கம்தான்.  தமிழில் முதன்முதலாக கலைக் களஞ்சியம் உருவான விதத்தை ஆ. இரா.வேங்கடாசலபதி ஒரு நாவலைப் போல் எழுதி இருக்கிறார். உலகிலுள்ள அனைத்து அறிவையும் திரட்டி பொருள்வாரியாக அகரவரிசையில் வழங்குவது என்சைக்ளோபீடியா எனப்படும் கலைக்களஞ்சியம். தமிழர்களின்  நூற்றாண்டுக் கனவான இந்த களஞ்சியம் எப்படி உருவானது? காங்கிரஸ் அரசியல்தலைவரான தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரின்  முன்னெடுப்பில் 7500 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக 1953& 1968 வரை இது வெளியாகி இருக்கிறது. இந்த பணியில் தலைமைப் பதிப்பாசிரியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் பெரியசாமி தூரன். முதலில் 18 லட்சரூபாய் ஆகும் என்று திட்டமிடப்பட்ட இந்த பணி, பிறகு பத்துலட்சரூபாய் என குறைக்கப்பட்டு அரசிடம் நிதிவேண்டப்பட்டது. பொதுமக்களிடம் நன்கொடை திரட்டப்படுகிறது. மத்திய அரசின் நிதியமைச்சராக இருந்த  சண்முகம் செட்டியார் மூலமாகவும் 3 லட்ச ரூபாய் நிதி பெறப்படுகிறது. இந்த நிதியெல்லாம் அரும்பாடு பட்டுத்தான் திரட்டுகிறார்கள். குறைந்த சம்பளத்தில் இந்த கலைகளஞ்சியக் குழு வேலை செய்கிறது. பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. 15 ஆண்டுகள் தலைமைப் பதிப்பாசிரியராக தூரன் பணிபுரிந்து இந்த வேலையை முடிக்கிறார்.

இந்த சிறுநூலை காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு வாசிக்க அளித்தேன். புரட்டியவர் அவினாசிலிங்கம் செட்டியாரின் பெயரைப் பார்த்ததும், ''இவர் எங்கள் காங்கிரஸ் கட்சிக் காரர்தான். தமிழுக்கு காங்கிரஸ் காரர்களும் தொண்டாற்றியிருக்கிறோம் தெரியுமா?'' என்று பெருமிதமும் ஆர்வமும் கொண்டார். அவசியமான பெருமைதான் அது!

தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை,

ஆ.இரா.வேங்கடாசலபதி,

வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிட், 669, கேபி சாலை, நாகர்கோவில் - 629001 விலை ரூ 75.

 ஒளியூட்டும் எழுத்து

சமூக சீர்கேடுகளை, தனி மனிதர், பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை அழுத்தமாகவும் விளக்கமாகவும் கூறும் கட்டுரைகளை எழுதி வருபவர் சமூக பத்திரிகையாளரான
ப. திருமலை. இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டு வெளியாகி உள்ளன. வேலை இல்லாத் திண்டாட்டம், மதுப்பிரச்னை, கழிவறை பிரச்னை, கைதிகளின் உரிமைகள் என எதுவும் திருமலையின் பார்வைக்குத் தப்புவதில்லை. விளிம்பு நிலையில் வாழ்வோர் குறித்து சட்டரீதியான பார்வையுடனும் கரிசனத்துடனும் எழுதப்பட்ட கட்டுரைகளும் நூலில் உள்ளன. கவிதை உறவு வழங்கும் பரிசு பெற்றது இந்நூல்

மண்மூடிப் போகும் மாண்புகள், ப.திருமலை,

வெளியீடு: பாவைமதி, 55, வ.உ.சி நகர், மார்கெட் தெரு,

தண்டையார்பேட்டை, சென்னை 81, பேச: 9444174272 விலை ரூ 150.

கனவுப் பாதை

உன்னுடைய கனவுகளை பின் தொடர்ந்து செல், அதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்று சொல்லும் ரசவாதி, எந்த நிலையிலும் கனவுகளை கைவிடாதே என்கிறது. இதயம் சொல்வதை கேட்டு பயணிக்கும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் துணை நிற்கும், வழி நடத்தும் என்பதை ரசவாதி உணர்த்துகிறது.

தமிழில் சரளமான நடையில் மொழிபெயர்த்திருக்கும் நாகலட்சுமி சண்முகம் இதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. பாவ்லொ கொய்லோவின் வாசகர்களின் விவாதங்களை மொழி பெயர்ப்பாளர் தேடி சில முக்கியமான சொற்களை எளிமையாகவும் அதன் அர்த்தம் மாறாமலும் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில்: நாகலட்சுமிசண்முகம்,

மஞ்சுள் பதிப்பகம், போபால். விலை ரூ.225

அவசர நிலையின் நிழலில்

1975 எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஆண்டு. வங்கியில் வேலை பார்க்கும் சிவசங்கரன் போத்தி என்ற கதாபாத்திரத்தின் வழியே எமர்ஜென்சி காலகட்டத்தை, சென்னை, அரசூர் மற்றும் தில்லி வழியாக சாமானிய மக்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை நகைச்சுவை ததும்பும் மொழியில்
சொல்லியிருக்கிறார் இரா.முருகன். எமர்ஜென்சி அரசியலை அதன் மையத்திலிருந்து பார்க்காமல் மக்களின் பார்வையிலிருந்து அதன் தாக்கத்தை
சொல்வதன் மூலமாக மையத்தை உணர்த்தியிருக்கிறார். நாவலுக்கு கிரேஸி மோகன் சாற்றுக்கவி வெண்பா எழுதியதாலோ என்னவோ நாவல் சில இடங்களில் புன்னகை பூக்கவும் பல இடங்களில் வெடித்து சிரிக்கவும் வைக்கிறது. வங்கிகளில் நடக்கும் நாடகத்திற்கான முன்னேற்பாட்டிலிருந்து நாடகமும் அதனைத் தொடர்ந்து வரும் காந்தி வாத்தியாரின் கல்யாண நிகழ்ச்சியும் முழு நீள
நகைச்சுவை படத்திற்கான ஸ்கிரிப்ட். ஆனால் அந்த சிரிப்பிற்கு பின்னால் இருப்பது அவலமான எமர்ஜென்சி வாழ்க்கை. எமர்ஜென்சியில் வங்கிகள் 'வழங்கிகளாகி' எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் கடன் தருகிறது. திரும்பி வருமா என்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. கடுமையான பத்திரிகை தணிக்கை, அரசுக்கு எதிராக யாரும் பேசக் கூட பயப்படும் நிலை என்று எமர்ஜென்சியின் கிடுக்கிப் பிடிகள் தெளிவாக மனதில் இறங்குகிறது.

 இரயில்கள் சரியான நேரத்திற்கு வருவதும் அரசு பணியாளர்கள் நேரத்திற்கு வேலைக்கு வருவதும் பதிவாகிறது. இது மட்டுமல்லாமல் ட்ரஷரியில் பணிபுரியும் பிரான்சிஸ் தங்கராஜ் என்கிற பாத்திரம் மீதான சாதிய காழ்ப்பு எமர்ஜென்சி பயத்தால் பதுங்கிக் கொள்வது அதன் இன்னொரு முகம். இது சாமான்யர்களின் நாவல். இவர்கள்  மேல் திணிக்கப்பட்ட எமர்ஜென்சி அவர்களின் வாழ்க்கையை என்றைக்கும் திரும்ப முடியாதவாறு மாற்றிப் போட்டதை 1975 தெளிவாக சொல்லி யிருக்கிறது.

1975, இரா.முருகன், கிழக்கு பதிப்பகம்,

177/103 அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை,

ராயப்பேட்டை,  சென்னை&14 பேச: 044& 42009603, விலை ரூ 450.

ஜூலை, 2019.