நூல் அறிமுகம்

விரியும் அக உலகம்

மதிமலர்

ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்கு பிந்தைய குடும்ப நிகழ்வுகள் என ஒரு நுட்பமான உலகை அறிமுகம் செய்கிறது இத்தொகுப்பு. பெண்களின் அக உலகை ஓர் ஆணின் நோக்கிலிருந்து அறிமுகம் செய்யும் கதைகளாக பெரும்பாலும் இருக்கின்றன. கன்னடம் பேசும் பிராமண வகுப்பைச் சேர்ந்த பாத்திரங்கள் பெரும்பாலான கதைகளில் இடம்பெறுகின்றன. திருச்செந்தூர் கோயிலில் காணாமல் போன தன் வடிவுப் பெரியம்மையை பல்லாண்டு கழித்துக் காண்பவன், அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புவதும் அதில் ஏற்படும் சஞ்சலங்களும், அந்த அம்மை இறுதியில் எடுக்கும் முடிவும் இத்தொகுப்பில் இருக்கும் சிறந்த கதைகளில் ஒன்றாக ‘அலை’ என்ற அக்கதையை முன்னிறுத்துகின்றன. ’கோயில் வாசலில் ஈசல்கள் போல தொப்பைகளுக்குப் பின்னால் ஐயர்கள் ஓடிவந்தனர்’ என்பது போன்ற வரிகளுக்கு இத்தொகுப்பில் பஞ்சமே இல்லை. வசியம் என்ற சிறுகதை சுவாரசியமாகவும் நுட்பமாகவும் உள்ளது. சிவாஜி வாயிலே ஜிலேபி கதை சிரிக்க வைக்கிறது.

கதைகளில் எல்லாவற்றையும் ஹரன் பிரசன்னா வெளிப்படையாகச் சொல்வதில்லை. பலவற்றை வாசகனே உய்த்துணருமாறும் எழுதி உள்ளார். இத்தொகுப்பில் உள்ள எந்த கதையையும் புறக்கணிக்க இயலாது என்றே கூற வேண்டி இருக்கிறது. சிறந்த சிறுகதைகள் நிரம்பிய தொகுப்பு.

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், 24 கற்பகம் அபார்ட்மெண்ட்ஸ், கால்வாய் சாலை, மைலாப்பூர், சென்னை 4. பேச:99403 24179 விலை ரூ 300

கவியின் பெருமூச்சு

கவிதையும் கத்தரிக்காயும் என்ற கவிஞர் விக்கிரமாதித்தனின் கவிதைத் தொகுப்பில் 1990-ல் இருந்து 2010 வரை பல்வேறு இலக்கிய சிற்றிதழ்கள், பேரிதழ்களில் வெளிவந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. எளிமையான நீரோடை போன்ற கவிதைகள். நம்பிக்கையும் அவநம்பிக்கையுமாக மாறிமாறி பிரதிபலித்துச் செல்கிற காலக்கண்ணாடி. சமகாலத்தின் முகங்களை விமர்சிக்கவும் வியக்கவும் செய்கிற மொழியின் ஜாலம்.

தென்னை வளர்த்தால்

துட்டுமேல் துட்டு

தமிழ்க்கவிதை வளர்த்தால்

ததிங்கிணத்தோம் தாளம்தான் - என்று 1990-இல் எழுதும் கவிஞர்,

கத்தரிக்காய்க்குத் தரும் மரியாதையை

கவிதைக்கும் கொடுத்தால்

குறைந்தா போய்விடுவீர்கள்

தமிழ்ப்பெருங்குடி மக்களே- என்கிறார் 2010-இல். தமிழ்ச்சமூகத்தில்  மாறாதிருப்பது கவிஞன் மீதான புறக்கணிப்புதானோ?

நக்கீரன் வெளியீடான இத்தொகுப்பின் இறுதியில்கவிஞரைப் பற்றிகுறிப்பு வருகிறது. அதில் அவர் பார்த்த வேலைகளின் பட்டியல் அவரது கவிதைபோலவே சுவராசியம். அதில் ஒன்று ஜலகன்னி - தம்போலா- வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர்!

கவிதையும் கத்தரிக்காயும், விக்ரமாதித்யன், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14.

பேச: 044-43993029 விலை ரூ 90.

புரட்சியாளனின் இறுதி நாட்கள்

ஆங்கிலத்தில் வெளிவந்த பொலிவியன்  டைரி என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சி இயக்க வீரரான சே குவேராவின் கடைசிக் கட்ட போராட்டமான பொலிவிய விடுதலைப் போராட்டத்தை (1966 ஆம் நவம்பர் முதல் 1967 அக்டோபர் வரை) அவர் தன் கைப்பட எழுதிய நாட்குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்.

அர்ஜென்டினாவின் ரொசாரியா நகரில் 1928-ல் பிறந்து பின்னர் மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி கியுபா புரட்சியில் சே பங்குகொண்டது அனைத்தும் புரட்சிகர வரலாற்றுக் காவியமாக உலகில் பலரால் கொண்டாடப்படுகின்றன. உணர்ச்சிகரமான மொழியில் அமைந்த இந்நூல் மொழிபெயர்ப்பு லகுவாக உள்ளது.

எர்னஸ்டோ சே குவேரா - பொலிவியன் டைரி- தமிழில் என். ராமச்சந்திரன், வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17 பேச: 044- 24332682, விலை ரூ 220

மருந்தென வேண்டாவாம்

தன்னுடலைக் குறித்த புரிதலும் வணிக மருத்துவத்தை நிராகரித்தலும் இயற்கையைச் சார்ந்திருந்தலும் மிகப்பெரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை என்கிறார் நூலாசிரியர் போப்பு முன்னுரையில். இயற்கை மருத்துவம், மாற்று மருத்துவ ஆர்வலர் இவர். உடலோடு பேசுங்கள் என்பதுதான் இந்த நூலின் ஆதார சுருதி. உடலில் தொந்தரவுகள் இருக்கும்போது ஒரு பத்துநிமிடம் கூடுதலாகக் குளியுங்கள் என்பதில் ஆரம்பித்து நடை மேற்கொள்வதை விட ஓர் ஆரோக்கியமான நண்பன் கிடையாது என்று சொல்லி விளங்க வைப்பதுவரை போப்பு உற்ற நண்பன் போல் தன் அனுபவங்களைச்  சொல்கிறார்.

மனித உடல் பற்றிய ஒருவித புரிதலை உண்டு செய்கிறார். நோயைக்கண்டு அஞ்ச வேண்டாம். அது ஆற்றலைப் பெருக்க வந்த ஒரு சோதனைக் களம் என்கிறார். அமெரிக்க மருத்துவர் லிண்டாவின் கருத்துகள், காந்தியின் சத்தியசோதனை போன்றவற்றிலிருந்து கற்றுக்கொண்டவற்றை இந்நூலில் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். உடல்பற்றிய புரிதலுக்காக வாசிக்கவேண்டிய நூல்.

என் உடல் என் மூலதனம், போப்பு, சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர்,

சென்னை 83. பேச: 044-24896979.  / விலை ரூ 90.

சாவுற வெளயாட்டு

ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப்பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ.

இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. ‘இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல. அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வௌயாட்டுல சேத்துக்க மாட்டேன்னுதான் சொன்னா. சாவுற வௌயாட்டு. இந்த ஆட்டத்தில செகண்ட் ஷோ கெடயாது’ என்று ஆரம்பத்திலேயே அவன் சொல்லிவிடுகிற போதும், அதிகம் அலட்டிக்கொள்ளாத, எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிகளைக் கொட்டாத அப்பெண் பாத்திரம் அவனை இம்சிக்கிறாள்.

என்னதான் அவளுடன் உறவு கொண்டு, அவள் காலால் சொல்லும் வேலைகளை தலையால் மேற்கொண்டு முடித்தாலும் அவளது உள்ளத்தில் எந்த இடத்தையும் பெற்றுவிட முடியாமல் அவன் தவியாய் தவித்துப்போகிறான். அவளுக்காகவே கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து, கடைசியில் அவள் இன்னொருவனுடனும் உறவுப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கையில் உடைந்து சுக்குநூறாகிப்போகும் நிலையில் அவனது உணர்வுகள் பெரும் நீர்வீழ்ச்சியாக கொட்டுகின்றன. இந்த படுமோசமான மனநிலையில் அவனைப் புரிந்துகொள்கிற சகோதரிகள்,அம்மா ஆகிய உறவுகள் அவனை அணுகும் விதம் கண்ணீரை வரவழைக்கிறது.  தான் கண்மூடித்தனமாக நேசிக்கும் பெண்ணின் துரோகத்தை எண்ணி மருகி, அவளைக் கொலை செய்ய எத்தனிக்கும் தருணத்துக்கும் அவளை மன்னிக்கும் தருணத்துக்கும் இடையில் நிகழும் ரசவாதம் எல்லோருக்கும் நிகழ்ந்தால் உலகில் பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். நடுதமிழகத்தின் பேச்சு மொழியில் இமையம் வடித்திருக்கும் இந்த நெடுங்கதை அவரது படைப்புகள் அனைத்திலிருந்தும் வேறுபட்ட களத்தில் இயங்குகிறது.

எங்கதெ, இமையம், க்ரியா, புது எண் 2, பழைய எண்25, 17-வது கிழக்குத் தெரு,  காமராஜர் நகர்,  திருவான்மியூர், சென்னை 41, பேச:7299905950 விலை ரூ 110