நூல் அறிமுகம்

புதிய களமும் பார்வையும்

மதிமலர்

காலச்சித்தன் எழுதி இருக்கும் பத்துக்  கதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளில் இருக்கும் பொதுமைப்பண்பு, மானுடத்தின் மீது எழுத்தாளருக்கு இருக்கும் மகத்தான நம்பிக்கையாகத்தான் படுகிறது. சமூகத்தில் மிகக் கீழான அடுக்கில் தள்ளப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின்  விதியை மாற்றி அமைக்கின்றன இக்கதைகள். மோசமாகத் தோன்றும் மனிதர்களின் குணாம்சங்களும் ஏதோ ஒரு சம்பவத்தில் மாறி அமைகின்றன. உதாரணத்துக்கு, அப்பாவின் கையில் ஒரு வாளி இருந்தது கதை. அதில் வரும் நீதிபதி, எல்லா அரசு அதிகாரிகளையும்போல்தான்  நடந்து கொள்கிறார். ஆனால், நீதிமன்றத்தில் அவர் மீது மனிதக் கழிவை ஒரு குற்றவாளி எறிந்துவிடும் நிலையில், கதையில் வரும் இளைஞன் அருவருப்பையும் பொறுத்துக்கொண்டு அவரைக் கழுவி ஆசுவாசப்படுத்துகிறான். இதைத் தொடர்ந்து அந்த இளம் கீழ்நிலைப் பணியாளன் மீதி நீதிபதியின் பார்வை மாறிவிடுகிறது. சாதியின் பேரால் அவனை இழிவுபடுத்துவதை விடுத்து, அவனது கனவான வழக்கறிஞர் படிப்பைப் படிக்க உதவுகிறார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை, அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் அமைந்துள்ளன. பிணை என்ற கதையில் போலியான ஷ்யூரிட்டிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி பிணை பெற்றுத்தருகிறான் மருது.  பிணை நடவடிக்கைகளை எளிமையாக விவரிக்கும் இக்கதையில், ஆதரவற்ற பாட்டி ஒருத்திக்கு ஆதரவுக்கரம் நீட்டுகையில், நீதிமன்றங்களை விட உயர்ந்துவிடுகிறான் மருது!

சாதிப் பிரச்னை உள்ள ஊரில் பள்ளிக்கு வேலை செய்ய வந்த இளம் ஆசிரியரின் கதையும் பிஞ்சு மனங்களில் சாதியம் இல்லை என்ற உயர்ந்த எண்ணத்தையே விதைக்கிறது. தீக்காய வார்டில் வேலை செய்யும் அலங்காரம், தன் மகளின் தற்கொலை எண்ணத்தை அந்த வார்டுக்கு அழைத்துவந்து போக்குகிற கதை, இத்தொகுப்பில் மிக அலாதியானது.

தலைப்புக் கதையான காணித் தேக்கு, இளவரசன் - திவ்யா  சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனினும் இதுவும் நம்பிக்கையான முடிவை விதைக்கிறது.

புதிய களத்தை புதிய பார்வைகளை நம்பிக்கையுடன் அறிமுகப்படுத்துவதாலே இந்தத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.

காணித் தேக்கு,  காலச்சித்தன், வெளியீடு: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9-வதுஅவென்யூ, அசோக் நகர், சென்னை-83. பேச: 044- 24896979. விலை: ரூ. 200/-

குழந்தைக்காக

தலைப்பு சொல்வதுபோலவே இந்த நூல் குழந்தைகளைப் பற்றி, அதுவும் மையநீரோட்டத்தில் இருந்து விடுபட்டிருக்கும் குழந்தைகளைப் பற்றியே பேசுகிறது. இருளர் குடியிருப்பு, மாநில எல்லைப்புற கிராமங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், மலைப்பகுதிகள் இவற்றைச்

சேர்ந்த குழந்தைகள் எதிர்கொள்ளும் கற்றல் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, தீர்வுகளைத் தேடுகிறது. இந்த நூலில் பல வித்தியாசமான குழந்தைகளைக் காணமுடிகிறது, ஆசிரியரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும், தாத்தா என்றழைத்து இயல்பில் மாற்றம் அடையும் மாணவன், நூலாசிரியரை சித்தப்பா, மாமா, அப்பா என அழைத்து கடிதம் எழுதும் குழந்தைகள், நலமற்ற அக்காவைப் பேணும் மாணவன் என பலர் நெஞ்சைத் தொடுகின்றனர். குழந்தைகளுக்கான பாலியல் சமத்துவம், பாலியல் உரிமை போன்ற சிக்கலான

அம்சங்களை நூலில் தொடுகிறார், இனியன்.  இவரைப் போன்ற தன்னலமற்ற செயல்பாட்டாளர்களை நம் சமூகம் இன்னும் விரிவாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விடுபட்டவர்கள்- இவர்களும் குழந்தைகள்தான்! &இனியன்,

வெளியீடு: நாடற்றோர் பதிப்பகம், 16, வேங்கடசாமி சாலை கிழக்கு,

இரத்தினசபாபதிபுரம், கோவை-02.

பேச: 9443536779. விலை:ரூ 140/-

தரையில் முளைத்த குறுவாள்!

பெண்ணாக இல்லாத

பெருமகிழ்ச்சியை

கல்லானபோதுதான் உணர்ந்திருந்தாள்

அகலிகை!

&பாலபாரதியின் கவிதைகள் பேசும் பெண்ணியத்தை

மேற்சொன்ன வரிகளே தெளிவாக உணர்த்திவிடுகின்றன. அரசியலும் சமூகமும் போட்டிருக்கும் முட்டுக்

கட்டைகளை சின்னச்சின்ன வரிகளில் உணர்த்திச் செல்கிறார், அவர்.

குழந்தைகளின் உலகில் நுழைந்து அவர்களின் வாழ்வை எழுதி இருக்கும் கவிதைகள் கவனிக்க வைக்கின்றன.

அதிகாரம்

இரண்டு இடங்களில்தான் உள்ளது

ஒன்று திருக்குறளில்

இன்னொன்று பொதுக்குழுவில்!

-என்ற கவிதை வரிகளை , நிச்சயம் ஒரு தேர்ந்த அரசியல்வாதியால் மட்டுமே எழுத முடியும். அறுகம்புல்லைப் போல வளையவும் முடியும்;  தரையில் முளைத்த குறுவாளாகவும் இருக்கமுடியும் என்கிற பாலபாரதியின் கவிதைகளில் எளிமையும் மக்களுக்கான குரலும் கலந்திருக்கிறது.

பாலபாரதி கவிதைகள்,

வெளியீடு: நம் பதிப்பகம், 26/2, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை-93 பேச: 9566110745. விலை: ரூ. 170/-

எளியோர் வாழ்க்கை

சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் செந்தமிழினியன், தன்னுரையில்

சொல்லி இருப்பதுபோல் அவரது அறுபது ஆண்டு வாழ்க்கையில் சந்தித்த சிலரின் கதைகளை இங்கே எழுத்தில் வடித்துள்ளார். காசாம்பு என்ற முதல் கதை, வயோதிகத்தில் தவிக்கும் உறவுகளற்ற பாட்டியின் கதை. சில மாதங்கள் வைத்துப் பார்த்துக் கொண்ட சக்திவேலும் கடைசியில் ஒரு தூரத்து உறவின் வீட்டு வாசலில் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போகும் மனதை நெகிழவைக்கும் கதை.

 சாத்தகி, பரஞ்சோதி என வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட கதைகளும் உண்டு. எளிய கிராமத்து மக்களின் போராட்ட வாழ்வைப் படம்பிடிக்கும் தொகுப்பு இது.

பிருந்தாஜினி - செந்தமிழினியன்,

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், 6, மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை,  கே.கே. நகர் மேற்கு,  சென்னை-78. பேச:  044-48557525 விலை: ரூ.120/-

வாசிப்பின் ருசி!

சுவாரசியமான பதினைந்து சிறுகதைகள் மூலம் நடுத்தர, மேல் நடுத்தர வர்க்க உறவு நிலைகளை, உணர்வுகளை, நடை-றைகளைச் சொல்லி இருக்கிறார், கோ.ஒளிவண்ணன். காயத்ரி மாமியும் பர்மா ஊஞ்சலும் என்கிற முதல் சிறுகதையிலேயே மனிதர்களுக்கு இடையிலான அன்பை, அதில் உருவாகும் இனிமையான சிக்கல்களைப் பதிவு செய்கிறார். அன்பரசியின் கைபேசி கதை, ஓர் ஆசிரியையின் உயர்ந்த மனதை மிகநெகிழ்வாகப் படம்  பிடிக்கிறது. அழகிய குறும்படமாக எடுப்பதற்குத் தகுதியான கதை. உயர்வான, வித்தியாசமான, துணிச்சலான மனிதர்களையே இவரது இந்தத் தொகுப்பு முழுக்க நாம் தரிசிக்கிறோம். தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகிற ஒருவனுக்கு ஒரு பெண் பாடம் புகட்டுவதைச்  சொல்லும் ‘தண்டனை' என்கிற சிறுகதையை இத்தொகுப்பில் உள்ள கதைகளுள் சிறந்தவற்றில் ஒன்றாகச் சொல்லலாம். காதல் தோல்விக்கு தற்கொலை தீர்வல்ல என்கிற இக்கதை வாசிப்பில் பூரண திருப்தியை அளிக்கிறது. இந்த முழுத்தொகுப்புமே வாசிப்பின்பத்தை வாரி வழங்குகிறது!

கோ.ஒளிவண்ணன் சிறுகதைகள், எழிலினி பதிப்பகம்,15ஏ, முதல்மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை-8. பேச:9840696574. விலை: ரூ.350/-

ஜூன், 2021