நூல் அறிமுகம்

காயம்பட்ட பூமி

மதிமலர்

இலங்கையில் நடந்த போருக்குப் பின்னால் அங்கே பயணம் செய்து பலரையும் சந்தித்து எழுதப்பட்ட நூல். அவர்களின் கதைகள் மூலம் அந்நாட்டின் தற்போதைய நிலையைச் சொல்கிறார் ஆசிரியர் சமந்த் சுப்பிரமணியன்.

எதிரெதிர் கொள்கைகளை உடைய அரசியல்வாதிகளான புத்த பிக்குகளைச் சந்தித்து எழுதியிருக்கும் கட்டுரையில் “எதிரியின் மனிதத் தன்மையை அலட்சியம் செய்யுங்கள்.

சண்டைபோடுவது எளிதாகவும், நியாயமாகவும்,சிரமம் இல்லாமலும் ஆகிவிடும். போர்முனையில் எவ்வளவோ  உளரீதியான தந்திரங்கள் பயன்படுகின்றன. நம் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ள நாம் சொல்லிக்கொள்ளும் நியாயங்கள் கூட அதில் ஒன்றுதானே” என்று கேட்கிறார் சமந்த்.

சமிதா என்கிற பிக்குதான் 1992-ல் முதல்முதலாக தேர்தலில் நின்று வென்றவர். இடதுசாரிக் கொள்கை உடைய பௌத்தத் துறவி. தமிழர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் போர் தீர்வாகாது என்கிறகொள்கை உடையவர். ஆனால் இவர் தோற்கடிக்கப்பட்டு ஜதிகா ஹெல உருமயா என்ற பௌத்த துறவிகளின் கட்சி எழுகிறது. இக்கட்சிகளின் நிறுவனர்களில் ஒருவரான ஒமல்பே சோபிதாவையும் சந்திக்கிறார் சமந்த்.

‘தமிழர்கள் இங்கே பூர்வ குடிகளல்ல’என்கிறவரிடம் மகாவம்சத்தின்படியே 2000 ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்கிறார்களே என்று கேட்கிறார் நூலாசிரியர். “நாங்கள் தான் இந்நாட்டின் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள். ஆகவே இது சிங்களர் நாடு” என்கிறார் பிக்கு. பிரபாகரனின் முன்னாள் சகாவான ராகவன், இலங்கை ராணுவத்தில் மேஜர் ஜெனரலாகப் பணியாற்றி 98’ல் ஓய்வுபெற்ற தமிழ் அதிகாரி, இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், முள்ளிவாய்க்காலில் பலகாரக்கடை வைத்திருப்பவர், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என பல முகங்கள் மூலமாக இலங்கையின் பிரச்னையை அணுகியிருக்கிறார்   இது அவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடடிண் ஈடிதிடிஞீஞுஞீ ஐண்டூச்ணஞீ நூலின் தமிழாக்கம்.

இலங்கை, பிளந்துகிடக்கும் தீவு,

கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14. பேச:42009603. விலை: ரூ 160.

இவர் வழி தனி வழி!

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை புத்தகத்தை   (Playing It My Way)  என் வழி தனி வழி என்ற பெயரில் தமிழில் நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்த்துள்ளார். கிரிக்கெட் கடவுள் தன் வாழ்க்கையைப் பற்றி தானே சொல்லும் இப்புத்தகம் சுவாரசியமானது. இளவயதில் கிரிக்கெட் பயிற்சிக்கு ஒரே ஒரு மேற்சட்டையும் முழுக்கால் சட்டையும் மட்டுமே அவரிடம் இருந்தது. அதையே மதிய உணவருந்தும் வேளையிலும், இரவிலும் இரண்டு முறை துவைத்து காயவைத்துப்  பயிற்சிக்கு அணிந்து செல்கிறார் சச்சின். பயிற்சியாளர் ரமாகாந்த் ஆச்ரேக்கர் உதவி இல்லாமல் ஒரு சிறந்த கிரிக்கெட்வீரனாகத்தான் உருவாகியிருக்க முடியாது என்கிற சச்சின், சிறுவயதில் மாங்காய் திருடியது, சிவாஜி பார்க்கில் விளையாடும்போது கண்ணிற்கு கீழ் அடிபட்டது, வினோத் காம்ளியுடனான நட்பு என்று பல  நினைவுகளை ஈரத்துடன் பகிர்ந்துகொள்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கிரிக்கெட் ஆடிய சச்சினின் வெளிப்படையான சுயசரிதை இந்நூல். வாசிக்கையில் அவருடைய கிரிக்கெட் வாழ்வுடன் சேர்ந்து நாமும் பயணிப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர், என் வழி தனி வழி,

தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 42, மால்வியா நகர், போபால் 462003. பேச: 7299999709, விலை ரூ 495

படைப்புலகம்:

வார இதழொன்றில் பணியாற்றியபோது எழுத்தாளர் ஆர்.சூடாமணியிடம் வாசகியாக அறிமுகமாகி நெருங்கிப் பழகியவர் கே.பாரதி. சூடாமணியின் படைப்புலகை சொல்லுக்குள் ஈரம் என்ற என்ற பெயரில் நயம்பாராட்டும் அழகான நூலாகப் படைத்திருக்கிறார். சூடாமணியின் சிறுகதைகளில் வரும் உலகம் மென்மையானதாக இருக்கிறது. அதில் வரும் பெண்கள், அவர்களின் உறவுச் சிக்கல்கள், அவர்கள் பேசும் பெண்ணிலை, உளவியல், அக்கதைகளில் வரும் ஆண்கள் என பல்வேறு பாத்திரங்களையும் கதைகளையும் பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தைத் தந்துள்ளார் பாரதி. கணவன் இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளும் ஒரு பெண் தன் கணவனுடன் வீட்டுக்குவருகிறாள். அவளது சிறு மகனுக்கும் புதிய கணவனுக்கும் இடையில் உறவு மலர்வதை அழகாகச் சித்திரிக்கும் இரண்டாவது அப்பா (1980) சிறுகதை ஒன்றே போதும் சூடாமணியின் மேன்மையைச் சொல்வதற்கு. பாலியல், உளவியல் பேசும் நுட்பமான கதைகள் பற்றியும் எழுதியுள்ளார் பாரதி. நூலின் இறுதியில் பல்வேறு எழுத்தாளர்கள் சூடாமணியின் படைப்புலகம் பற்றி எழுதிருக்கும் கருத்துகளையும் தொகுத்துள்ளார். இந்நூல் சூடாமணியின் படைப்புலகுக்குள் நம்மை இட்டுச் செல்லும் அழகிய தோரணவாயில்.

 சொல்லுக்குள் ஈரம் ஆர்.சூடாமணியின் படைப்புலகம், கே.பாரதி, வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை -17 பேச: 24342810 விலை: ரூ 75

ஆவுளி முதல் ஆற்றுக்குதிரை வரை!

பல்வேறு சூழல்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கும், அழிந்துபோன மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் நீர்வாழ், நிலவாழ் பாலூட்டும் விலங்குகள் பற்றி ‘கானுயிர்’ மாத இதழில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு. கானுயிர் ஆசிரியரான முகமது அலி இந்நூலைத் தொகுத்துள்ளார்.

 சமூகத்தை பற்றிய சாடலை மென்மையாகச் சொல்வதில் முகமது அலியின் முத்திரை தெரிகிறது. காலம் காலமாக நம்பி வரும் தவறான பார்வைகளை (உ.ம் கவரிமான் என்பது மான் இனத்தை சார்ந்தது இல்லை)  உடைக்கும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இயற்கை சூழியலை சீண்டினால் அது நம்மிடம் எதிர்வினை ஆற்றும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார். மனிதனுக்கும் நீர் யானைக்கும் போட்டி வைத்தால் யார் ஜெயிப்பார்கள்?  இனவிருத்திக்காலங்களில் காட்டெருமை என்ன மாதிரி ஒலி எழுப்பும்? தேவாங்கு என்ன சாப்பிடும்? இதுபோன்ற  தகவல்களை விலங்குகளை நேசிப்போரும், விலங்குகளை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் களஞ்சியம் இந்த நூல். சூழியல் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

பாலூட்டிகளின் கதைகள் , தொகுப்பாசிரியர் : ச.முகமது அலி, வெளியீடு : இயற்கை வரலாறு அறக்கட்டளை, அம்பராம்பாளையம்,  பொள்ளாச்சி - 642 103, 9894140750. விலை: ரூ.200

புதுச்சேரி போராட்டம்!

புதுச்சேரி அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டாக 1979 அமைந்துள்ளது. 78-ன் கடைசியில் அங்கு ஆண்ட அதிமுக அரசு,  ஏகப்பட்ட குளறுபடிகளுக்குப் பின் தமிழக முதல்வர் எம்ஜிஆருடன்  பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆலோசனை நடத்தியபின் கலைக்கப்பட்டது. அப்பகுதியை தமிழகத்துடன் இணைப்பது என்று மத்தியில் ஆண்ட மொரார்ஜி தேசாய் தலைமையிலான  ஜனதா அரசு முடிவெடுத்தது. தமிழகத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் மருந்து கசப்பாக இருந்தாலும் விழுங்கத்தான் வேண்டும் என்று சொல்ல, புதுவை மக்கள் கொதித்தெழுந்தார்கள். இந்த போராட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும்தான் இந்த நூலில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.  அந்தஆண்டு குடியரசு தினத் தன்று, மக்கள் அதை முழுவதுமாகப் புறக்கணித்தனர். இது பத்திரிகையாளர் திருமாவேலன் முன்னுரையில் கூறியிருப்பதுபோல், ‘ புதுவையின் கற்பைக் காக்கும் போராட்டம்’. இப்போராட்டத்தில் காவல் அரண்களாக நின்றவர்களின் வாக்குமூலங்களைப் பெற்று இந்நூலை எழுதி இருக்கிறார் ஆசிரியர். இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வென்றபோது முதல்வர் ஆன டி.ராமச்சந்திரன், அந்த காலகட்டத்தில் அதிமுக சார்பாக எம்பியாகவும் ஜனதா கூட்டணி அரசில் அதிமுக சார்பில் அமைச்சராகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்த பாலா பழனூர் ஆகியோரின் கருத்துகளும் இந்நூலில் உள்ளன. அரசியலை விட்டு விலகிவிட்ட பாலா பழனூர், ‘ நான் என்றைக்குமே புதுச்சேரிக்கும் புதுச்சேரி மக்களுக்கும் விரோதமாக இருந்ததில்லை’ என்று கொடுக்கும் தன்னிலை விளக்கம் வரலாற்றின் இன்னொரு பக்கம். இந்த போராட்டம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில அரசின் அரசியல் வரலாற்றையும் விளக்கமாக எழுதி உள்ளார் பாண்டியன். புதுவை மக்களின் தனித்த கலாசாரத்தை விளக்கும் அருமையான முன்னுரையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன்.

ஊரடங்கு உத்தரவு / புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு,

பி என் எஸ் பாண்டியன் வெர்சோ பேஜஸ்,

எண் 30, ஏர்போர்ட் சாலை, முத்துலிங்கம் பேட்டை, புதுச்சேரி 605008, பேச:9894660669. விலை: ரூ 200