நூல் அறிமுகம்

இருட்டறையில் ஓர் ஒளிவிளக்கு

மதிமலர்

வழக்குரைஞர் தொழில் பற்றி யாருக்காவது கசப்பான எண்ணம் இருக்குமாயின்  எண்ணம் இந்நூலைப் படிக்கையில் அது மாறிவிடும். இது ஓய்வுபெற்ற நீதிபதி ‘ஜெய்பீம் நாயகன்' எழுதியிருக்கும்  சுயசரிதை.

குறிப்பாக மனித உரிமை வழக்குகளில் சந்துரு தீவிரமாக ஈடுபட்டு நீதியையும் உரிமைகளையும் நிலைநாட்டி இருப்பதைப் படிக்கும்போது சிலிர்க்கிறது. அதே சமயம் இந்த வழக்குகளில் பெருந்தொகையை பாதிக்கப்பட்டவர்கள் அளிக்க முன்வரும்போது அதில் ஒரு ரூபாயும் வாங்க மாட்டேன் என மறுத்துவிடுகிறார். நம் காலத்தில் நம்முடன் இப்படி ஒரு மனிதரா என  லட்சியவாதத்தால் உந்தப்படும் இந்த மாமனிதரைப் பற்றி சிலநிமிடங்களாவது நல்லவிதமாக நினைத்துக்கொள்ளாமல் இருக்கவே முடியாது.

எத்தனையோ குற்றங்கள், மர்மங்கள் ஆகியவற்றைப் பற்றி நாவல்களில் படித்திருக்கலாம். ஆனால் இந்த நூல்முழுக்க, ஒரு வழக்கறிஞர் எண்ணற்ற குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஈடுபடுவதைப் பற்றியும் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது பற்றியுமான சம்பவங்களின் தொகுப்பாக இருப்பதால் மிக சுவாரசியமாக இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் புகழ்பெற்ற மனித உரிமைச் சம்பவங்களைப் பட்டியலிட்டால் அதில் பெரும்பாலானவற்றில் சந்துரு தொடர்பில் இருந்திருக்கிறார்.

சிதம்பரம் உதயகுமார் மரணத்தில் இருந்து ராஜிவ் கொலையாளிகள் வழக்குகள், தடா, பொடா சட்ட வழக்குகள் எல்லாவற்றிலும் வழக்கறிஞர் சந்துரு இருக்கிறார்.

இந்தப் போராளி வழக்கறிஞர் பின்னர் நீதிபதி ஆகிறார். சந்துருவுக்கு  நெருங்கியவர்கள் இது ஒருவிதத்தில் நீதிக்கான சட்டப் போராட்டத்துக்கு இழப்பு என்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் சந்துருவுக்கு இழப்புதான்.  ஆனால் நீதிபதியாக சந்துரு வழங்கியிருக்கும் தீர்ப்புகளைப் பார்க்கும்போது இந்த முடிவும் ஒருவிதத்தில் சரியெனத் தோன்றுகிறது.  அவர் நீதிபதி ஆன கதையையும் இந்த நூலில் படிக்கலாம். முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் எப்படி ‘குசேலன்‘ ஆகி சந்துருவை நீதிபதியாக்குமாறு கோரினார் என்பது உணர்ச்சிகரமான சம்பவம். அதுமட்டுமா சந்துரு நீதிபதி ஆவதற்கு எவ்வளவு திரைமறைவு எதிர்ப்புகள்.. எப்படி அவை முறியடிக்கப்பட்டன என்பதெல்லாம் இந்நூலில் பதிவாகி உள்ளன.

சந்துரு மார்க்சிய பின்னணி கொண்டவர். தொழிலாளர்களுக்கு வாதாடியவர். பெரியாரின் கருத்துகளை உணர்ந்தவர்.

கல்லூரியில் இளங்கலை தாவரவியல்  படிக்கும் போது நடந்த சம்பவம் ஒன்றைப் பகிர்கிறார்:

 டார்வினின் பரிணாமக் கொள்கையை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள் என ஆசிரியர் கேட்க, கை தூக்கியவர் ஒரே ஒருவர்தான். அது சந்துரு மட்டுமே. அறிவியல் படித்தாலும் அறிவியல் மனப்பான்மை ஊட்டப்படாத சூழல். அந்த வகுப்பில் ஒரு தனியனாக இருந்ததுபோல் நீதிபதியாக இருந்தபோது சந்துரு தனியனாக உணர்ந்திருப்பார். அவர் நீதிபதியாகப் பணிபுரிகையில் அவருக்கு தீவிரமான அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்படுகிறது. அச்சமயம் அவரை வந்து பார்த்த சக நீதிபதிகள் சுமார் பத்து பேர் மட்டுமே. அப்போது 47 பேர் அங்கே பணிபுரிந்துகொண்டிருந்தனர். சந்துரு எந்த வருத்தமும் இன்றிதான் பதிவு செய்கிறார். ஆனால் நமக்குத்தான் வருத்தம் ஏற்படுகிறது.

மனித உரிமை ஆணையத்துக்கு மறுவாழ்வு என்றொரு கட்டுரை இதில் உள்ளது. தற்போது போலீஸ் பெண் எஸ்.பி. ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உயரதிகாரி ராஜேஷ்தாஸ் சம்பந்தப்பட்ட பழைய வழக்கொன்றில் மனித உரிமை ஆணையம் அவரிடமிருந்து 5 லட்சரூபாய் வசூலிக்கவேண்டும் என உத்தரவிடுகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் பெற்ற தீர்ப்பு மனித உரிமை ஆணையப்பரிந்துரைகள் அரசைக் கட்டுப்படுத்தாது என்கிறது. இதிலிருந்து முரண்பட்ட தீர்ப்பை சந்துரு பல வழக்குகளில் வழங்குகிறார். இறுதியில் பத்தாண்டுகள் கழித்து மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சந்துருவின் தீர்ப்பே சரியானது என்கிறது. இந்த பத்தாண்டுகளில் மனித உரிமை ஆணையத்தை முடக்கியது சரியா?

சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு நூல் ஒன்றை பரிசளிக்க விரும்பினால் இந்நூலை முதலிடத்தில் வைக்கவேண்டும். இளைஞர்கள் உத்வேகம் பெற நிச்சயம் இது வழிகாட்டும்.

நானும் நீதிபதி ஆனேன்,

கே. சந்துரு,

அருஞ்சொல் வெளியீடு, சென்னை.

பேச: 6380153325,  விலை: ரூ 500

பஞ்சத்தின் கொடிய கரங்கள்

வங்கத்தில் 1940களில் தலைவிரித்தாடிய பஞ்சத்தைப் பற்றிய வங்காள நாவல் இது. புகழ்பெற்ற வங்க நாவலாசிரியர் பிபூதிபூஷண்  மாதப்பத்திரிகை ஒன்றில் 1944-&46 வரை இதைத் தொடராக எழுதியிருக்கிறார். இந்நாவலை சத்யஜித்ராய் திரையிலும் காட்டியிருக்கிறார். இதுதான் சேதுபதி அருணாசலம் உழைப்பில் தமிழில் வந்துள்ளது. மெல்ல மெல்ல ஒரு கிராமத்தை  பஞ்சம் சூழ்வதைக் காண்பிக்கிறது இந்நாவல். படிக்கப்படிக்க நமக்குள்ளும் அடிவயிற்றில் அச்சம் திரள்வதை உணரமுடியும்.

என்ன காசு கொடுத்தாலும் அரிசி வாங்க முடியாத சூழல் உருவாக, அந்த கிராமத்தினர் படும் பாட்டை இது விவரிக்கிறது. கடும் பட்டினியால், குளங்களிலும் காட்டுப்பகுதிகளிலும் கிடைப்பவற்றைத் தேடி அலைகிறார்கள். குழந்தைகுட்டிகளுடன் நாட்கணக்கில் சாப்பிட ஏதும் கிடைக்காத குடும்பங்கள்... அரிசி கிடைக்காமல் வெறும் பருப்புகள்,கீரைகள், கிழங்குகளை உண்ண ஆரம்பித்து பின் அதுவும் கிடைக்காமல் போய்... அவலம் சூழ்கிறது.

மகிழ்ச்சியாகத் தொடங்கும் கங்காசரணின் வாழ்க்கை, அவனது மனைவி அனங்கா, இரண்டு குழந்தைகளுடன் நகர்கிறது. அரிசி மூட்டைகளை பிரிட்டிஷ் அரசே பறித்துக்கொண்டு,செயற்கையாக உருவாகும் பஞ்சம் பற்றி ஆங்காங்கே வரும் உரையாடல்கள் உணர்த்துகின்றன. பசியுடன் வீடு தேடி வருகிறவர்களுக்கு இருப்பதைக்கொடுத்துவிட்டு பட்டினி கிடக்கும் அனங்காவின் பாத்திரப்படைப்பு மிக அபூர்வமானது.

நாவலின் இறுதிக்கட்டத்தில் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியால் சாகக்கிடக்கும் மோத்தி என்கிற ஒரு பெண் கங்காசரணின் வீட்டருகே விழுந்துகிடக்கிறாள். வீட்டில் இருக்கும் உணவில்கொஞ்சம் கொண்டுபோய் கொடுக்கிறார்கள். அவளால் சாப்பிட முடிவதில்லை. உயிர்பிரிந்துவிடுகிறது.

மோத்தி தாழ்த்தப்பட்ட சாதிப்பெண். அனங்காவுடையது பிராமணக்குடும்பம். அந்த கால சாதிய கட்டமைப்புகள் கடுமையாக இருந்தாலும் சாகக்கிடக்கும் மோத்தி, மழையில் நனைவாளே என்று அவளை வீட்டுக்குத் தூக்கிவருமாறு குழந்தைகளுக்கு சொல்லும் இடத்தில் அனங்கா, உயர்ந்து மனதில் பதிந்துவிடுகிறாள்.

பஞ்சம் என்றால் எப்படி இருக்கும் என்று இக்காலத்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது இந்நாவலின் வரிகளில் வாழ்கிறது. வங்க மொழி, ஆங்கிலம் இரண்டின் வழியாகவும் எளிமையான தமிழில் வங்கத்தின் வாழ்வியலைப்புரிந்து மொழிபெயர்த்திருத்திருக்கும் சேதுபதி பாராட்டுக்-குரியவர்.

நெருங்கிவரும் இடியோசை, பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா, தமிழில்: சேதுபதி அருணாச்சலம், வெளியீடு: சுவாசம் பதிப்பகம், 52/2, பி.எஸ்.மகால் அருகில், பொன்மார், சென்னை, தமிழ்நாடு-

600127, பேச: 8148066645 விலை ரூ:220

படைப்பாக்கம் மதிப்பீடு

நம் காலத்தில் வாழும் சமூக வரலாற்று ஆய்வாளர்களில் முக்கியமானவர் ஆ.இரா. வேங்கடாசலபதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. வ.உ.சி., புதுமைப்பித்தன் பாரதியார், உ.வே.சா., பெரியார் போன்ற தமிழகத்தின் பேராளுமைகள் பற்றி அவர் அளித்து ஆய்வுகள், இலக்கிய ஆக்கங்கள், பதிப்புகள் மிக முக்கியமானவை. அவருடைய ஐம்பது அகவை நிறைவை ஒட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விழாவில் வாசிக்கப் பட்ட கட்டுரைகள் சலபதி-50 தொடரும் பயணம் என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதில் அவருடைய படைப்பாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள், அவருடைய ஆளுமைத்திறன் பற்றிய கண்ணோட்டங்கள் இடம்பெற்றுள்ளன. சலபதி, தன்னுடைய 20 வயதிற்குள்ளேயே இலங்கைக் கவிஞரான சேரன் கவிதைகள், பாரதிதாசனின் அமைதிநாடகம், ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், உலகக் கவிஞன் பாப்லோ நெருடாவை தமிழிலும் மொழி பெயர்த்தவர். இப்படித் தொடங்கிய அவரது நுழைவை, நன்கறிந்த நண்பர்கள், சக பயணிகள் பேசும் நூலாக இது அமைந்துள்ளது. இந்நூலுக்கு பழ.அதியமான் எழுதியிருக்கும் முன்னுரை மிகமிக அபூர்வமாக எப்போதாவது ‘அமைகிற‘ அதிசயக் கட்டுரைகளில் ஒன்றாகக் கொள்ளவேண்டியது.

சலபதி- 50, தொடரும் பயணம், பதிப்பு: பழ.அதியமான், தொகுப்பு: ப.சரவணன் -கிருஷ்ண பிரபு வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. விலை, ரூ. 225.

செப்டம்பர், 2022