திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ பதுங்குகிறது. பாய்கிறது. வாய் பிளந்து கோபம் காட்டுகிறது. தரையில் உடல் உரசி வாழ்வின் சோம்பல் முறிக்கிறது. இருப்பின் துயரையும் அவலத்தையும் கண் மூலம் ஒளியேற்றிக் கருத்தேற்றுகிறது.
காட்சிகளின் அசைவுகள் தரும் ஆழங்களை கவிதைப் பொருளாக மாற்றி விடுகிறார் சீனு ராமசாமி. உண்மை வாழ்வின் இருள் சலசலப்பில் கேமராவை வைத்து சொற்களை அடுக்கி கவித்துவத்தின் கானகத்தில் வாசிப்பவனை தன்னந்தனியே விட்டுவிட்டு உள்ளூரப் புன்சிரிக்கிறார் அவர்.
காட்சிகளை விவரித்து, கவிதையை மகிழ வைக்கும் வடிவம் போன்ற பல உத்திகளோடு கவிதைகளை அடுக்கியிருக்கிறார் சீனு ராமசாமி. பெண் தாக பிம்பங்கள், ஆன்மீகச் சித்திரங்கள், இயற்கை வள நிசப்தங்கள், மன்றாடும் மனித ஓட்டத்தின் பொருமல்கள் என்று சொற்கள் சீனு ராமசாமியின் கவிதைகளில் தேடிக் களைக்காத நாகப் பாம்பாய் மூச்சிரைத்து விரைகின்றன.
இந்தக் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை, ‘தாய் ஒருத்தி’ கதையாய் விரிந்து கவிதையாய் முடிகிறது.
‘பேரலையில் உயரம் பார்த்து
….
கைவிடப்பட்ட தாயொருத்தி….
ஓடுபவர்களையும்
விரட்டுவதையும்
பார்த்தவாறு
எழுந்து நின்றாள்.
…..
அவை சக்தியற்று
திரும்பியிருக்கலாம்
அவளும்
அதற்குத்துணிந்திருந்தாள்
***
கேமரா கோணமும், கதை வடிவமுமாக விரிகிறது ‘நடு இரவில்’ என்ற கவிதை. ஒரு புளியமரம் என்ற உருவகம் இதில் வடிவெடுக்கிறது. வாழ்வின் மகிழ்வுகளையும் துயர்களையும் தாங்கி நிற்கும் மர வடிவம் பல கால மன நிலைகளைப் பதிவிட்டு அமைகிறது. வரலாற்று உணர்வுகளின் நிகழ்கால பரிமாண உருமாற்றங்களை அவற்றின் ஆழத்தின் பிணைப்போடு கவிதை வடிப்பதில் சீனு ராமசாமி தேர்ந்தவராக இருக்கிறார்.
***
‘சிறு ஓடையின் காலம்’ என்ற கவிதையில்
நாகத்தின்
மெலிந்த குட்டியொன்று
நீந்திக் கடக்கும்
சிறு ஓடையின் காலம்தான்
உன்னோடு நானிருந்தது
உயிரே…
என்று தொடங்கி
‘உன் முழு உடலில்
கசிந்த பலாச்சுளை
நறுமணத்தைப் பருகி
ஊர்ந்து உன்
பாதி இச்சையின்
பாதையில் குறுக்கிடும்
காட்டு மதயானைகளை
யென் செய்வேன்…’
என்று வரிகள் நீள்கின்றன.
ஆசைத் தேடலின் குரூர விஷ அமைதியை நசுங்கடிக்கும் நிதர்சனத்தின் அழுத்தத்தை இந்தக் கவிதை மனதில் விதைக்கிறது. உணர்வுத் தேடலின் படபடப்பை காலத்தின் சங்கிலிகளோடு பிணைத்து உருக வைக்கும் வடிவம் இதில் சாத்தியம் ஆகியிருக்கிறது.
நேரத்தின் அபத்தத்தை வரி வடிவில் பதிவிட்டுப் போகிறது, ‘நாள்’ என்ற கவிதை. காலமும், பொருளும் கவிதைகளில் மாறி மாறி இடங்களை உருவாக்கிக்கொள்கின்றன.
நிஜத்தைக் கனவால் அடுக்கும் உத்திகளும் தொடர்ந்து சீனு ராமசாமியின் கவிதைகளில் விரவிச் செல்கின்றன.
காமத் தேடலில் உள்ளுறையும் நிறம் அறியா ஆன்மீக வெறுமையின் அதிர்வை பல இடங்களில் சீனு ராமசாமியின் கவிதைகள் பதித்துச் செல்கின்றன.
‘ஒரு நொடி
தாமரை இலையின் நீர் நிழலில்
நீந்தும் சிறு மீனின் சிலிர்ப்பு
அவளுக்கு உண்டாகுமெனில்!
ஆளற்ற
இவ்வீட்டில்
பெண் தெய்வம் உண்டு…’
என்ற கவிதை (நினைவு பூ) மகிழ்வின் வலியை அசைத்துச் செல்கிறது.
‘ஆழ்மனம்’ என்ற கவிதை காமத்தின் தேடலில் ஒரு நகைச்சுவை வெடிப்பை நிகழ்த்தி உடல்களின் மீது வரையப்படும் மனப் பெயர்களை கூராக்கிச் சிரிக்கிறது. வாழ்வு முழுக்க மேற்கொண்ட ஆசைகளின் ஓட்டம் இறுதிக் கணத்தில் சிதறி சிதைவுண்டு போகும் மன அவலம் கவிதைகளில் தூக்கி நிற்கிறது.
‘தவம்’ போன்ற கவிதைகள் அசாதாரண பிம்பங்களை வடித்து மீள முடியாத துயரப் பின்னலில் வாசகனைத் தள்ளுகின்றன.
‘அருந்தவம் செய்
யோனி வழி காற்றைக் குடி
…
நீ கண்மூடி
லயித்த கணத்தில்
களவுபோன
அலைபேசியை
எப்படி மீட்பாய்?
நான் அங்கிருந்துதான்
உன்னைப் பின் தொடர்வேன்.’
என்று விரியும் கவிதை உடலும் இயந்திரமும் ஒன்றாகிச் சாகும் மன வெளியின் புதைப்பில் உயிர்ப்பித்த ஆறாத சொற்களின் ரணமாக பதிகின்றது.
மூளையின் இருளிலிருந்து தேடலைத் தொடங்கி படைப்பாக்கம் நிகழ்வதின் சமூகத் தொடர்பை ‘இயற்றல்’ கவிதை சொல்லிச் செல்கிறது.
நினைவுப் பரப்பில் நிலைகொண்டிருக்கும் வரலாற்றுப் படிமங்களை நினைவுபடுத்துவதாய், ‘கவிதை தாரகை’ கவிதை உள்ளது.
‘சில்க்
இன்னும் உயிரோடு இருக்கிறாள்
பாவம்
விஜயலெட்சுமிதான்
இறந்துவிட்டாள்’
என்ற கவிதையில் பெயர்கள் விரிக்கிற பிம்பங்கள் உணர்வின் வடிநிலங்களாக இருப்பதைக் காட்டுகிறது. பெயர்கள் இல்லா உலகில் மனச் சிதைவு பூண்டு நிறையும் ஆபத்தை சீனு ராமசாமியின் கவிதைகள் கீறிக் காட்டுகின்றன.
பொறியாய் நிறைந்திருக்கிற வாழ்வின் கூறுகளைக் காட்டுகிறது, ‘புலித்தடம்’ என்ற கவிதை.
‘ஒளிரும் உருவங்கள்’ கவிதையும்
‘இராமேஸ்வரம் கடலைப் பார்த்து
சதா குரைத்துக்கொண்டிருக்கிறது
ஒரு எல்லையோர ரோந்து நாய்…
…
வசிப்பிடமின்றிக் கடலில்
அலைந்து கொண்டிருக்கும்
உருவமற்ற
எம் மக்களை’
என்று எல்லையற்ற பிரபஞ்ச அனாதைத்தன்மையை குறியிட்டுக் காட்டுகிறது.
ஆழ்மனதிற்கும் ஆர்ப்பரிக்கும் ஆயாசங்களையும், அதிகாரக் கிளைகளால் எல்லையில் தள்ளப்படும் மன உணர்வுகளையும் பல்வேறு பிம்பங்களாக சீனு ராமசாமி கவிதையில் வடித்திருக்கிறார். வாழ்வின் அகன்ற திரையின் அசைவுகளை எப்போதும் கவிதைகளாகவே அவருடைய கண்களும் மனதும் பதித்துச் சென்றிருக்கின்றன என்பதற்கு இந்தக் கவிதைத் தொகுப்பு சாட்சியாக நிற்கிறது.
*************************
புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : சீனு ராமசாமி
பதிப்பகம் : டிஸ்கவரி பப்ஷிகேஷன்ஸ்
பக்கம் : 303
விலை : ரூ.330
தொடர்புக்கு: 09940446650
------------