திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற ஊரில் இருந்த கோவிலைச் சுற்றி உள்ள தெருக்களில் நடப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை கோரி 1924&ல் நடத்தப்பட்ட சத்தியாகிரப் போராட்டத்தை முழுமையாக விவரிக்கிறது இந்நூல். தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் ஒரு குப்பை பொறுக்குபவனைப் போல்
(நூலாசிரியரின் மனைவிக்கு நன்றி) அலைந்துதான் இந்நூலுக்கான தரவுகளைத் தேடி எடுத்ததாக அதியமான் குறிப்பிடுகிறார். இந்த போராட்டம் தொடங்கியதுமுதல் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதற்கான நிகழ்வுகளை குறிப்பிட்டு எழுதி இருப்பதுதான் இந்நூலின் முக்கியத்துவம். அக்கால காவல்துறை குறிப்புகள், செய்தித்தாள் வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கும் ஒரு நிகழ்வை மறுகட்டமைப்பு செய்து நம்முன்னே உலவ விட்டிருக்கிறார் வரலாற்று ஆய்வாளரான அதியமான். வைக்கம் போராட்டம் என்றால் நாம் அறிந்திருப்பது தந்தை பெரியாரின் பங்களிப்புதான். இதுமட்டுமல்லாமல் காந்தியாரின் அணுகுமுறை, கேரளத்தலைவர்களின் அணுகுமுறை, கேரள மற்றும் தமிழக சத்தியாகிரகிகளின் பங்களிப்பு, தமிழ்நாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு, அகாலிகள் அங்கே உணவிட்டது, தமிழக மக்கள் போராட்டத்துக்காக பண உதவி செய்தது என எவ்வளவு தகவல்கள்...? தமிழத்தில் இருந்து கலந்துகொண்ட சத்தியாகிரகிகளின் பட்டியலைப் பார்த்தால் சென்னையில் இருந்து ஒருவர் கால்நடையாக நடந்தே சென்று வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டிருப்பது தெரியவருகிறது. கேரளத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாக நடத்தப்பட்டபோது பெரியார் கடுங்காவல் கைதியாக நடத்தப்பட்டமை இதில் அதிர்ச்சியை அளிக்கிறது. இருமுறை பெரியார் அங்கே கைது செய்யப்படுகிறார். திருவாங்கூர் ராஜ குடும்பத்துக்கு பெரியார் அணுக்கமானவர் என்பதால் ஆரம்பத்தில் அவர் கைது செய்யப்படாமை அவருக்கு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி வலுப்படுத்த உதவுகிறது. ஆனால் அதன் பரிசாக அவர் விலங்குபூட்டி சிறையில் அடைக்கப்படுகிறார். காலில் இரும்புச்சங்கிலி, கழுத்தில் மரத்தாலி. சிறையில் 74 நாட்கள்; வெளியே 67 நாட்கள் என அவரது போராட்டம் நீள்கிறது. ஈரோட்டில் இருந்து ஐந்து பெண்கள் தடையை மீறிப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். அவர்களில் ஒருவர் பெரியாரின் துணைவியார் நாகம்மையார். ஒருகட்டத்தில் மன்னர் இறக்க, ராணியுடன் காந்தியார் நடத்தும் பேச்சுவார்த்தையில் கோவில் நுழைவு வேண்டாம்; தெருக்கள் நுழையும் உரிமை மட்டும் அளித்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. காந்தி பெரியாரிடம் கலந்துபேசுகிறார். இப்போதைக்கு இதுவே போதுமென சமயோசிதமாக பெரியார் ஒப்புக்கொள்கிறார். இப்போராட்டத்தில் உள்ளும் புறமுமாக நடக்கும் வைதிகர்கள், ஈழவர்கள், சத்தி &யாகிரகிகள், பிரிட்டிஷ் அரசு, திருவாங்கூர் அரசு, காந்தியாரின் வழிகாட்டல் போன்ற பல அம்சங்களை அப்படியே கொடுப்பதன் மூலம் ஒரு விரிவான காட்சியை அதியமான் அளித்துள்ளார். இதற்குப் பிறகும் பெரியார் தம் மனைவியாருடன் வைக்கத்துக்கு இன்பச்சுற்றுலா சென்றார் என்று சொல்பவர்களும் நம் ஊரில் இருப்பார்கள். பெரியார் காலத்திலேயே அவரது பங்களிப்பு புகைமூட்டத்தில் மறைக்கப்பட்டநிலையில் இப்போதைய நிலை குறித்து யார் என்ன சொல்லமுடியும்? கேரளர்களிடையே கூட வைக்கம் போராட்டம் குறித்து இப்படியொரு விரிவான தொகுப்பு இல்லாத நிலையில் நூலாசிரியரின் இந்த பங்களிப்பு முக்கியமானது. 648 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலையும் மலிவானதே.
வைக்கம் போராட்டம், பழ.அதியமான்,
வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. விலை ரூ 325.
மலேசியாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் ஏறக்குறைய எழுபதாண்டு வாழ்க்கையை முன்னும் பின்னுமாக பின்னிச் சொல்கிறது ம. நவீனின் பேய்ச்சி நாவல். பெண்கள் தெய்வமாகவும், யட்சியாகவும் நாவலில் விரவிக் கிடக்கிறார்கள். காத்தாயி என்ற பேய்ச்சியிடமிருந்து மகன் ராமசாமியைக் காப்பாற்ற ஊரை விட்டு வெளியேறி மலேசியா வந்து சேரும் கோப்பேரன், குடும்பமாக கப்பலேறி தகப்பனை இழந்து கரையிறங்கும் ஓலம்மா என்று முதல் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வை அவர்கள் குடி கொண்ட நிலத்தோடு, அழகாக விவரித்திருக்கிறது பேய்ச்சி. முதலில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள், செம்பனையில் வேலை செய்ய முடியாமல் அதிலிருந்து ஒதுங்குவதும் கடுமையான அப்பணி இந்தோனேஷிய தொழிலாளர்கள் கைக்கு செல்வது அதில் சீன முதலாளிகளின் ஆதிக்கம் என்று அன்றைய காலகட்டத்தைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அளிக்கிறார் நவீன்.
ஓலம்மா என்ற உறுதியான பெண் நாவலின் மையமாக தாங்கிப் பிடிக்கிறாள். ஓலம்மாவின் கணவன் மணியம் அவர்கள் வசிக்கும் கம்பத்தில் மெல்ல தலைவனாக உருவெடுக்கிறார். தன்னுடைய சாதி இழிவிலிருந்து வெளிவரத் துடிப்பவர், அதற்காக சிலம்பத்தையும் வலுவான உடலையும் ஆயுதமாக்குகிறார். தைப்பூச திருவிழா சமயத்தில் விஷ சாராயத்தினால் 14 பேர் மரணமடைகிறார்கள். இதை ஒட்டி பேய்ச்சியாக மாறும் ஓலம்மாவின் ருத்ர தாண்டவம் கதையின் முக்கியமான பகுதி. பெண் தெய்வமாக தன்னுடைய குலத்தைக் காக்கிறாள், சில சமயம் பேய்ச்சியாக மாறி அழிக்கவும் செய்கிறாள் என்கிற மைய சரடில் காத்தாயியின் பெருங்கோபத்திற்கு மட்டும் காரணத்தைச் சொல்லாமல் வாசகனின் கற்பனைக்கே விட்டு விடுகிறார் நாவலாசிரியர்.
மீகொராங் உணவு, பூனியாங் காடு என்று புதிய புதிய சொற்களையும் நாம் பார்த்திராத மலேசிய நிலத்தையும் அதன் வாழ்கையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பதில் பேய்ச்சி வெற்றிபெற்றிருக்கிறது
பேய்ச்சி, ம.நவீன், வெளியீடு யாவரும் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு: 9042461472, 9841643380 விலை: ரூ 300
தமிழ்மகள் என்று பாரதி குறிப்பிடும் ஔவை பற்றி ஞானச்செல்வன் கவிதை நடையில் எழுதி இருக்கும் நூல். சங்க இலக்கியம் தொடங்கி விநாயகர் அகவல், நீதி நூல்கள், தனிப்பாடல்கள் எழுதிய ஔவை வரை நான்கு ஔவைகள் உள்ளனர் என்கிற நூலாசிரியர் ஔவை என்றால் தெய்வப் பெண் என்று பொருள். தாய், தமக்கை என்றும் பொருளுண்டு. எனவே பொதுவாக ஔவை என மக்கள் அழைத்திட்டனர் என்கிறார். அதியமான் நெடுமான் அஞ்சியுடனான நட்பு, அவன் அளிக்கும் கள், நெல்லிக்கனி என விரிக்கும் நூலாசிரியர் அதியமான மரணத்துக்குப் பின் ஔவை எழுதிய பாட்டைச் சொல்லி, தந்தையே என அழைக்கும் ஔவையை சிலர் அதியமானின் காதலி என எழுதி வைத்துள்ளனர் அது சரியோ என மனம் நோகக் கேட்கிறார். இக்கவிதைகள் இனிய உதயம் இதழில் மரபுக் கவிதைத் தொடராக வெளிவந்தவை.
ஔவை போற்றுதும், கவிக்கோ ஞானச்செல்வன், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600104 விலை ரூ 75 எண்: 044-25361039
மகாபாரதத்தில் நம் அனைவரையும் கவர்ந்த துன்பியல் பாத்திரம் கர்ணன். மராத்திய எழுத்தாளரான சிவாஜி சாவந்த், கர்ணனின் கதையை வித்தியாசமான கோணத்தில் எழுதி உள்ளார். இந்நூல் தமிழிலும் நாகலட்சுமி சண்முகம் அவர்களின் எளிமையான மொழிபெயர்ப்பில் லகுவான வாசிப்பனுபவம் தரும் விதத்தில் வெளியாகி உள்ளது. இதில் வரும் ஒர் காட்சியை மட்டும் பார்க்கலாம்.
சகுனியுடன் தருமன் சூதாட்டம் ஆடுகையில் திரௌபதியையும் கடைசியாக வைத்திழக்கிறான். திரௌபதி அரசவைக்கு இழுத்துவரப்பட்டு துகிலுரியும் காட்சியில் அவள் ஒவ்வொரு அரசபிரமுகரிடமும் தன்னைக் காக்கும்படிக் கதறுகிறாள். கர்ணன் மனம் கொந்தளிக்க அவளைக் காப்பாற்றத்துடிக்கிறான். அவன் முன்னே வரும் திரௌபதி, ஒருவார்த்தை கூட அவனிடம் கோராமல் கடக்கிறாள். தன்னை ஏன் தவிர்க்கிறாள்? சத்திரியப் பெண்ணான அவள் சூதனாகிய தன்னிடம் எதையும் கேட்க விரும்பவில்லையா என குமையும் கர்ணன்,அந்த கோபத்தில் நிலைமீறி திரௌபதியை இகழ்கிறான். இந்நூல் கர்ணன், குந்தி, துரியோதனன், கர்ணனின் மனைவி விருசாலி, அவனது தம்பி ஷோன், கிருஷ்ணர் ஆகியோரின் பார்வையில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளது. கொந்தளிக்கும் உணர்வுக்காட்சிகளில் நிரம்பி வழியும் படைப்பு இதுவாகும்.
கர்ணன் -காலத்தை வென்றவன், மராத்தி மூலம்: சிவாஜி சாவந்த், தமிழில் நாகலட்சுமி சண்முகம், வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால். விலை: ரூ 899