பத்திரிகையாளர் மாலன் பல்வேறு கட்டங்களில் எழுதிய இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் கயல் பருகிய கடல் என்ற இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘மெல்லிய சுழிப்புகளோடு நீரோட்டமாக செல்லும் நிதானமான நடையழகையும், உயரத்திலிருந்து ஆழத்தில் பாய்ந்து அலகில் மீனோடு எழும் மீன்கொத்திபோன்ற பார்வைக் கூர்மையையும் இக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன’ என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் முன்னுரையில் குறிப்பிடுவது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை வாசிப்பவர்கள் உணர்வர்.
இதுவரை சிறுகதை என்கிற முதல் கட்டுரையில் தமிழ் சிறுகதையின் வரலாற்றை பாரதியில் ஆரம்பித்து ஒவ்வொரு காலகட்டத்துக்கும் இருவர் வீதம் பாரதி- வவேசு ஐயர், புதுமைப்பித்தன்- கல்கி, ஜெயகாந்தன்- தி.ஜா,. அசோகமித்திரன்- சுஜாதா என வகைப்படுத்தி விவரிக்கிறார். தமிழின் முதல்சிறுகதை வவேசு ஐயரின் குளத்தங்கரை ஆலமரம் அல்ல பாரதி 1911-ல் எழுதிய ஆறில் ஒரு பங்கு என்கிற மாலன், அது அரசால் தடை செய்யப்பட்டது என்ற தகவலைத் தந்து இந்தியாவிலேயே முதலில் தடை செய்யப்பட்டது தமிழின் முதல் சிறுகதை தான் என்று அழுத்தம் தருகின்றார். ஹைகூ கவிதைகள் மற்றும் ஜென் மரபு பற்றிய நல்ல புரிதலை உருவாக்கும் கட்டுரை, கயல் பருகிய கடல் என்ற தலைப்பிலான தமிழகத்துக்கு வெளியிலான இலக்கியப் படைப்புகள் பற்றிய கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகள் முக்கியமானவை. பாரதியைப் பற்றி நான்கைந்து அரிய கட்டுரைகளும் உள்ளன. எழுத்தாளர் ஜெயமோகனுடன் கலாச்சாரம் பற்றி 2002-ல் திண்ணை இதழில் நடத்திய விவாதமும் உள்ளது.
கயல்பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண்- 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர்,
சென்னை- 17. பேச:044-2436243 விலை: ரூ 130
ஒரு வாசகனாக அல்ல, ஒரு மாணவனாகவே இந்நூலைப் படித்து தமிழ்சினிமாவின் இன்றைய சூழலைக் குறித்த புதுப்புது உண்மைகளைத் தெரிந்துகொண்டேன் - இது தமிழ்சினிமாவில் புதுப்பாதை போட்ட மாபெரும் இயக்குநர் மகேந்திரன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது. இந்த வரிகளே தனஞ்ஜெயனின் இந்நூலைப் பற்றி தெளிவாக விளக்கிவிடுகின்றன. வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள் என்ற இந்நூலில் தற்கால திரைப்படத்துறை பற்றிய பல்வேறு விவரங்கள் பற்றி ஆழமாக எழுதியுள்ளார். இன்றைக்கு நல்ல படம் என்று பெயர் பெற்றால் மட்டும்போதாது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்று பெயர் பெற்றால்தான் நான்கு வாரங்களாவது ஓடும் . இதுபோன்ற கருத்துக்களை யுடிவி நிறுவனம் சார்பாக பல படங்களைத் தயாரித்த தன் அனுபவத்தில் இருந்து அவர் எழுதுகிறார் என்பதுதான் முக்கியம். படத்தின் டிக்கெட் விலை, எது நல்ல திரைக்கதை? , யார் ஆடியன்ஸ்?, படத்தின் பட்ஜெட் அதில் விளம்பரச் செலவு போன்ற விஷயங்களை எல்லாம் சுவாரசியமாகத் தருகிறது இந்நூல்.
வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்! கோ. தனஞ்ஜெயன், வெளியீடு: தி இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை -2 விலை: ரூ 250
இந்திரா பார்த்தசாரதி எழுதிய முதல் நாடகமான மழை 1970-ல் புதுதில்லியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் நடித்த எஸ்.கே.எஸ். மணிக்கு அது மிக முக்கியமான நிகழ்வு. ‘அந்நாடகம் தில்லிமாநில அரசின் அனைத்திந்திய நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. அதைவிட மகத்தான பரிசாகிய மணியின் திருமணம் நிகழ்வதற்கும் அது காரணமாக இருந்தது’ என்கிறார் இந்திரா பார்த்தசாரதி. அன்று மணியாக இருந்து இன்று பாரதிமணியாக இருப்பவரின் புள்ளிகள் கோடுகள் கோலங்கள் நூலில் பெருமளவு காலத்தைப் பிரதிபலிக்கும் ரசமான சம்பவங்கள் இருக்கின்றன. பாரதிமணியின் சுய அனுபவம் சார்ந்த கட்டுரைகள் ஒரு திருப்திகரமான வாழ்க்கையின் பக்கங்கள். அவர் ஒரு சாகசமான வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார். புதுடெல்லியில் அதிகார மட்டங்களில் நிகழ்த்திய செயல்பாடுகளை எவ்வளவு சொல்லமுடியுமோ அந்த அளவுக்கு மட்டும் இந்நூலில் உள்ள கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார். சுவாரசியம்.
புள்ளிகள் கோடுகள் கோலங்கள்- பாரதிமணி, வம்சி புக்ஸ் 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 606 601 பேச: 9445870995 விலை: ரூ 550
சென்னை என்கிற பெரு நகரத்துக்கு வரும் கிராமத்து ஏழை இளைஞர்களின் கதையே பருக்கை என்கிற இந்நாவல். அரசு விடுதியில் தங்கி, முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்கள் மூலமாக சென்னையில் உள்ள அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் சித்திரத்தை சொல்ல முயல்கிறார் நாவலாசிரியர்.
இவர்களுக்கு காசு சம்பாதிக்க ஒரே வாய்ப்பாக இருப்பது கேட்டரிங் எனப்படும் திருமண விருந்துகளில் உணவு பரிமாறச் செல்வதே. அரசு விடுதிகளில் இருந்து புறப்பட்டு பஸ் ஏறி பசித்த வயிறுடன் சென்று பரிமாறிவிட்டு இரவில் கிடைக்கும் மீந்துபோன சாப்பாட்டை சாப்பிடும் அனுபவம் பெரும்பாலான பக்கங்களில் போதும் போதுமென நிரம்பிக்கிடக்கிறது.
‘பணக்காரன் எல்லாமே கட்சியிலதான் இருக்கான். கட்சியில இருக்கவன் எல்லாம் பணக்காரனாத்தான் இருக்கான்’ என்பது போன்ற அந்த வயசுக்கேற்ற உலகப்புரிதல்களுடன் பயணம் செய்கிறது இந்நாவல். அடுத்தமுறை கல்யாண வீடுகளில் சாப்பிடுகையில் நமக்குப் பரிமாறும் இளைஞனின் முகத்தை உற்றுக் கவனிக்காமல் இருக்க இயலாது!
பருக்கை, வீரபாண்டியன், வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், பழைய எண் 96, ஜெ.பிளாக், நல்வரவுத் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை 106. பேச: 9382853646 விலை: ரூ 160
முல்லையின் கவிதைகள்
பழநிபாரதி தமிழ்நிலங்களின் கவிஞர். முல்லை எனப்படும் காடு சார்ந்த நிலம் குறித்த அவர் கவிதைகள் முக்கியமானவை’ என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம் என்கிற பழநிபாரதியின் புதிய கவிதைத் தொகுப்பு அடர்ந்து செழித்தகாடு போல் பரவிக்கிடக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் மரபின் மணம் வீசுகின்றது.
வீரத்தைச் சூதுவென்ற
உன் பறம்புமலையில்
நீ பாடிய
வேங்கைகள் இல்லை
வேங்கை மரங்களும் இல்லை
வேங்கை மலர்களை உண்ணும்
மான்களும் இல்லை - ‘கபில நிலா’ என்ற தலைப்பில் உள்ள கவிதையில் வரும் இதுபோன்ற வரிகளின் பின்னால் ஒளிந்துகிடக்கும் ஆழ்ந்த சோகப்பெருமூச்சு உணர்வுகளை மீட்டுகிறது.
செத்துக்கிடக்கிறது ஒரு பறவை
உயிருள்ளதைப் போல் அசைகின்றன
காற்றில்
அதன்
மெல்லிய இறகுகள் - இந்த கவிதைமூலம் பழநிபாரதி எழுதிச்செல்லும் செறிவான நினைவுகள் போல் பல சித்திரங்கள் இந்த தொகுப்பில் நிரம்பியிருக்கின்றன. நின்று ஆர்ப்பாட்டமின்றிப் பெய்யும் மழையைப் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தருகின்றன பல கவிதைகள்.
ஆழ்ந்த மரபிலிருந்து கிளைத்த அரிய நவீனக் கவிஞராக ஒவ்வொரு சொல்லிலும் பழநிபாரதி நிலைபெறுகிறார்.
சூரியனுக்குக் கீழ் ஒரு வெள்ளைக் காகிதம், பழநிபாரதி,
குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை -17. பேச: 044-24353742
அதிர்வுகள் :
மரணம், காதல், வலி, துயரம், பால்ய நினைவுகள் என பல்வேறு உணர்வுகளின் அதிர்வுகளைக் கவிதைகளாக்கிப் படைத்திருக்கிறார் பூங்குழலி வீரன். நிழல்படங்களைப் போலத்தான் கவிதையும் என்கிற பூங்குழலி தன்னைக் கடந்துபோன காலத்தைத்தான் கவிதைகளில் கிடத்தியிருப்பதாகக் கூறுகிறார். அண்ணனின் மரணத்தை தந்தையின் மரணத்தைக்கூறும் கவிதைகள் உயிரோட்டத்துடன் இருக்கின்றன. நாயொன்று இறந்தது குறித்த கவிதை குழந்தை சொல்லும் கதையைக் கேட்டு குழந்தையாக மாறிவிடும் பெரியோர்களைப் பற்றிச் சொல்வதாக இருப்பினும் ஒவ்வொரு முறை படிக்கையிலும் ஒவ்வொரு அதிர்வைத் தருவதாக இருக்கிறது. நவீன கவிதை அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப வாசிப்பனுவத்தைத் தரக்கூடியது. இந்த இயல்புடன் கூடிய பல்வேறு கவிதைகள் உள்ளன. உதாரணத்துக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரணம் என்ற கவிதையைச் சொல்லலாம்.
நிகழ்தலும் நிகழ்தல் நிமித்தமும்,
பூங்குழலி வீரன்,
வல்லினம் பதிப்பகம், மலேசியா. பேச: 6-0163194
ஏற்கெனவே பழங்குடிகளின் மொழியில் ஒடியன் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவரான லட்சுமணனின் இரண்டாவது படைப்பு சப்பெ கொகாலு. கோவையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர்களின் மொழியில் உலவிவரும் கதைப்பாடல்களைத் திரட்டியதுடன் ஒவ்வொரு பாடலையும் சிறு கதைவடிவிலும் வடித்திருக்கிறார். முதல் கதையிலேயே கௌரவக்கொலை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. மல்லி என்ற பழங்குடிப் பெண்ணை காதலித்து மணக்கும் பொன்னானை அவனுடைய ஏழு சகோதரர்கள் காட்டுக்குள் பன்றி வேட்டைக்கு அழைத்துப்போய் பாறைக்குள் புதைக்கிறார்கள்.
சேவலை பிடித்துப்போன நாட்டுக்காரன் ஒருவனிடமிருந்து அதை மீட்டும்வரும் இளைஞனைப் பற்றிய புனைவு மிக அருமையான சிறுகதை. ‘மூப்பன் சாய்க்கரி’ என்ற கதையில் காயம்பட்ட கடமானை மீட்டு அது குட்டி ஈன்றிருப்பதை அறிந்து அதற்கு மருத்துவம் பார்த்து,‘நீ போய் பொழத்தா..’ என்று அனுப்பி வைக்கிறது வேட்டைக்கார குடிகளின் ஈரமான மனசு. இயற்கையைச் சுரண்டாத வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் நிரம்பியிருக்கின்றன.
சப்பெ கொகாலு, லட்சுமணன்,
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 98
பேச: 26251968 / விலை: ரூ 225/
பரந்த மனசுக்காரன் விழுந்து வணங்குகிறேன்
சித்த நேரம் சொறிந்து விடுங்கள் ராஜா. -இதுபோன்ற சுவாரசியமான வரிகள் கொண்டது இத்தொகுப்பு. கவிஞன் ஒருவன் கலைஞனாகவும் இருக்கையில் அவனுக்கு உலகை தன் கலைசார்ந்த மொழியில் கவிதையாக வடித்துவிடும் வல்லமை வாய்க்கிறது. கூத்துப்பள்ளி நடத்திவரும் தவசிக் கருப்பசாமி என்ற ஹரிகிருஷ்ணனின் முதல் கவிதை நூல் இது. நையாண்டியும் எள்ளலும் துள்ளி விளையாடும் சந்த மொழியில் புகுந்து விளையாடியிருக்கிறார். கூத்தாடிகளின் உலகில் புழங்கும் புராணப் பாத்திரங்கள் கரைபுரண்டு ஓடும் கவிதைகள் ஒவ்வொன்றும் கடைசியில் நனவுலகுக்கு வந்து எதார்த்தத்தின் சுவரை முட்டுகின்றன. புதிய மொழி; புதிய உலகு. நூல் வடிவமைப்பும் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.
அழிபசி, / தவசிக்கருப்பு சாமி, வெளியீடு: மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம், 636 453 பேச: 98946 05371
விலை ரூ 80/