‘எனவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும்வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனை கொடுக்கமுடியுமோ அவ்வளவையும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை இத்துடன் முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள்கிறேன்’ - இப்படி நீதிமன்றத்தில் 1938 ஆண்டு இந்தி எதிர்ப்புக்காகக் கைது செய்யப்பட்டபோது முழங்கினார் பெரியார். இந்தத் துணிச்சல் தான் கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் வரலாற்றைத் தீர்மானித்தது என்பதை சுப.வீ எழுதி வெளியாகி இருக்கும் சுயமரியாதை- ஒரு நூற்றாண்டின் சொல் என்ற நூல் விவரிக்கிறது. சுயமரியாதை இயக்கம் தொடங்கி பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள், அக்காலச் சமூகச் சூழல், அவருடன் இணைந்தும் எதிர்த்தும் நின்றவர்கள், பொதுவுடைமை இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையில் இருந்த உறவுச்சிக்கல் என்று பல்வேறு விஷயங்களை சுப.வீ தன் ஆழமான பார்வையில் விளக்குகிறார்.
சுயமரியாதை ஒரு நூற்றாண்டின் சொல், சுப.வீரபாண்டியன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14 பேச:4399000 விலை: ரூ100
‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும்’
என்கிறது காவிரியின் புகழ் பாடும் பட்டினப்பாலைப் பாடல். ஆனால் மத்திய அரசு காவிரிப் பாசன நிலங்களில் மீத்தேன் வாயு எடுக்க அனுமதி கொடுத்து
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு நசுக்க முயல்வதை விரிவாக விளக்கும் நூல் இது. தமிழக மக்களின் சுய உரிமையும், இயற்கை வளங்கள் மீதான இறையாண்மையும் பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் நூலாசிரியருக்கு இருக்கும் அக்கறை பாராட்டப்படவேண்டியதும் தமிழர்களாகிய நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதுமாகும்.ஏற்கனவே தமிழக ஆறுகள் கணக்கில்லாமல் மணல் அள்ளப்பட்டு சூறையாடப்படுகின்றன. தாது மணல் கொள்ளை, கூடங்குளம் அணு மின் நிலையம்,கடற்கரைகள் ஆக்கிரமிப்பு, நியூட்ரினோ திட்டம் என தமிழகம் அடுக்கடுக் கான சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களால் சூழப்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
மீத்தேன் அகதிகள் : பேராசிரியர் த.செயராமன். வெளியீடு : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு. 19/2, சேந்தங்குடி வடக்குத் தெரு, ஆனதாண்டவபுரம் சாலை, மயிலாடுதுறை-609001.
அலைபேசி : 9842007371/9443395550
எழுத்தாளர் என்.சொக்கனின் மாணவர்களுக்கான தமிழ் என்ற இந்நூல் நல்ல தமிழ் எழுத இனிய வழிகாட்டியாக உள்ளது. வழக்கமாக தவறு நேரும்
சொற்களைச் சுட்டிக்காட்டி திருத்துவதுடன் நில்லாமல் தமிழின் இனிமை, அதன் சுவை, அதன் வரலாறு போன்றவற்றையும் அழகான சம்பவங்கள் மூலம் சுருக்கமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்
சொக்கன். திருக்குறள் அச்சிடப்பட்டது, ஆங்கிலேயரிடம் கம்பரைப் பற்றி மாணவர் சூரியநாராயண சாஸ்திரி எடுத்துச்சொல்லி விளங்க வைத்தது, முரசுக்கட்டிலில் உறங்கிய மோசிகீரனார், செம்மொழி என்பது ஏன்? உள்ளிட்ட ஏராளமான சுவையான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகிறார். 100 கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கணத்தையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்க வைக்கும் அழகான நூல்.
மாணவர்களுக்கான தமிழ்,
என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் கட்டடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14 விலை ரூ:200 பேச: 044- 42009603
இறந்துபோன தந்தையின் உடல் வீட்டிலிருக்கிறது. அங்கிருந்து மகன்களின் பார்வையில் கதை விரிகிறது. தந்தைøப் பற்றிய நினைவுகளைத்தான் மகன்கள் அசைபோடுகிறார்கள். சிலோனில் வேலைக்குப்போயிருந்த தந்தை குடும்பத்துக்கு எதுவும் அனுப்புவதில்லை. அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஒரு மகன் நான் போய் பார்த்துவிட்டு அங்கே வேலை தேடிக்கொள்கிறேன் என்று சிலோனுக்குச் செல் கிறான். தந்தையின் அலுவலகத்தில் தங்குகிறான். அங்கே அவருக்கு இன்னொரு மனைவி இருக்கிறார் என்று தெரிகிறது. சில நாட்கள் இருந்துவிட்டு ஏதுவும் பேசாது ஊருக்குத் திரும்பி விடுகிறான். இங்கே காத்திருக்கும் அம்மாவிடம் ஒரு பேச்சும் சொல்வதில்லை. அப்பாவின் உடல் சிதையில் ஏற்றப்பட்ட பின் அவரது பெட்டியை உடைத்து சிலோன் தொடர்பு பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று தேடுகிறார்கள். எதுவும் கிடைப்பதில்லை. தந்தையை ஹிப்போகிரட் என்று கோபத்துடன் சொல்கிறான் ஒரு மகன். “எனக்காக அப்பா ஒருபோதும் துக்கப்பட்டிருக்கமாட்டார். துக்கப்பட்ட அப்பாவை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று நினைத்துக்கொள்கிறான். நாவலின் இறுதியில் கிளம்பிச்செல்லும் இன்னொரு மகன். யாருமே அறியாமல் தந்தையின் நினைவில் அவனுக்குள்ளொரு கேவல். மரணம் பற்றியும் உறவுகள் பற்றியும் இவற்றுக்கு இடையிலான மௌனம், வலி ஆகியவற்றை எதார்த்தமாகச் சொல்லிப்போகிறது இந்த இறுதியாத்திரை.
காலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கண் முன்னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்ததை எம்டிவி இந்த நாவலில் அப்படியே பதிவு செய்வதாக பின் அட்டைக் குறிப்பு சொல்கிறது. உண்மைதான்! ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் இந்நாவலின் பின்னே புகை மூட்டமாகப் படிந்திருக்கும் வாழ்க்கையின் கேள்விகளும் புதிர்களும் துலக்கம் பெறுவது சிறப்பு.
இறுதி யாத்திரை, எம் டி வாசுதேவன் நாயர்: தமிழில்: கேவி ஷைலஜா, வெளியீடு வம்சி பதிப்பகம், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 606601 பேச: 9445870995 விலை ரூ140
தூக்கமின்மை. நவீன வாழ்வு அதன் மனிதர்களுக்கு அளித்த பரிசு. கணந்தோறும் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் பிரச்சனையை அடித்தளமாகக்கொண்டது மாதவன் ஸ்ரீரங்கத்தின் இந்த நாவல். இது இவரது முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கமின்மையால் அவதிப்படும் ஒருவனின் குழப்பங்கள் நிறைந்த ஊசலாட்டங்களைத் தத்துவார்த்தப் பின்னணியில் அலசுகிறது இந்நாவல். தூக்கமின்மையைக் களைய நாவலின் நாயகனான சுந்தர் கனவுக்குள் பயணிக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஒரு சித்தர்.
சித்தரின் சொல் பற்றித் தூக்கமின்மையைக் கடக்க அவன் மேற்கொள்ளும் முயற்சிகளும் அது ஏற்படுத்தும் உப விளைவுகளும் சரளமான மொழியில் சொல்லப்படுகிறது. கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே ஊசலாடும் வாழ்க்கையையும் அதன் புதிர்த்தன்மையையும் நாவலில் எழுதப்பட்ட எல்லா வரிகளிலும் நாம் காண முடியும்.
ஒரே சமயத்தில் ஃபேண்டஸிக்கும், விஞ்ஞானப்புனைவிற்கும், நடைமுறைக்குமாக வாசிப்பவரை மாறிமாறிப் பயணிக்கவைக்கிறது இந்நாவல்.
கனவு ராட்டினம் - மாதவன் ஸ்ரீரங்கம். வெளியீடு : யாவரும் பதிப்பகம், பக்கங்கள் : 160, விலை : 140, , தொலைபேசி : 90424 61472 / 98416 43380