திடீரென சிறுநீரகம் செயலிழக்கும் பள்ளிச் சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இமையத்தின் புதிய நாவலான ‘இப்போது உயிரோடிருக்கிறேன்'. இந்த நாவலின் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கையை நோக்கி நம்மை அழைத்துச்செல்கிறார் இமையம்.
தமிழரசன் என்னும் பள்ளிச்சிறுவனின் வாழ்க்கையை ஒரே நாளில் புரட்டிப்போட்டுவிடுகிறது சிறுநீரகச் செயலிழப்பு. தாயும் தந்தையும் கிடைக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு தங்கள் கிராமத்திலிருந்து
சென்னைக்கு வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து, அவனுக்கு சிகிச்சை பார்க்கிறார்கள். வாரத்துக்கு இரண்டுமுறை டயாலிசிஸ் செய்யவேண்டும். வாழ்க்கை முழுக்க அதுதான் அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
காடு காணியை விற்றாவது பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்கும் அப்பா, இந்த பெருநிறுவன மருத்துவமனையின் பகாசுரப்பசிக்கு தீனி போட்டுக்கொண்டே இருக்கிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்பதால் அம்மாவின் சிறுநீரகத்தைப் பையனுக்கு வைக்க, பதின்மூன்று மருத்துவர்களின் கருத்துகள், அதன் பின்னர் தாசில்தார், மாவட்ட நீதிபதியின் கையெழுத்து, இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு என்று எல்லா இடங்களும் அலைந்து ஒப்புதல் வாங்கி இந்த மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடிக்கிறார்கள். இதற்கான அலைச்சல், அதிகாரப் புறக்கணிப்புகள், பணம் பிடுங்கல்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது சொரெல் என்கிறது. பத்து லட்ச ரூபாய் செலவழித்து கடைசியில் தமிழரசனுக்கு அறுவை சிகிச்சை முடிகிறது. அதன் பிறகு அந்த உறுப்பை அவன் உடல் ஏற்றுக்கொண்டதா என்ற கேள்விக்குறியுடன் முடிவடையும் நாவல் நமக்குள் ஏராளமான கேள்விகளைத் தூண்டி விடுவதாக முடிவடைகிறது.
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகு இல்லை என்பதை நிரூபிப்பது போல் நாவல் முழுக்க பணம் ஆறாக செலவழித்தால்தான் வாழமுடிகிறது. டயாலிசிஸ் செய்வதற்காகவும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காகவும் இவ்வளவு பேர் காத்திருக்கிறார்களா என்பது மலைக்கச் செய்வதாக இருக்கிறது. டயாலிசிஸ் அறையில்
சாவதும் இயல்பாக இருக்கிறது. பணம் இல்லை அதனால் செத்துவிட்டார் என்கிறார் ஒரு நர்ஸ். உலகில் பணம் இல்லையென்றால் சாகவேண்டியதுதான். அந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கில் செலவழித்து பையனுக்கு பல்லை சுத்தம் செய்கிறார்கள். அப்பா அதே இடத்தில் 20 ரூபாய்க்கு பல்லை எடுக்கும் சிகிச்சையைச் செய்துகொள்கிறார். இது மட்டும்தான் லாபம் என்று அவர் பெருமூச்சுவிடுவது பரிதாபம்.
சிறுநீரக நோய், அதற்கான சிகிச்சை போன்றவற்றைப் பற்றிப்பேசும் நாவல்தான் என்றாலும் அதற்கொரு மானுட முகத்தைக்கொடுத்ததுடன் எளிமையான நடையில் விறுவிறுவெனச் செல்லும்விதத்தில் எழுதி இருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தத்தமது மருத்துவமனை அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருவதுடன், சக மனிதனை அன்புடன் நோக்கவைக்கும் பார்வையும் இந்நாவல் தரும். அதே சமயம் ஒவ்வொருவருக்கும் இக்கதையால் அடிவயிறு கலங்குமோ இல்லையோ சிறுநீரகம் பற்றிய பார்வை மாறும் என்பது நிச்சயம்.
இப்போது உயிருடன் இருக்கிறேன், இமையம், வெளியீடு: க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர் சென்னை - 41, பேச 7299905950 விலை ரூ. 345.00
நம்மை நாமே மன்னிப்போம்!
மிட்ச் ஆல்பம் ஓர் ஊடகவியலாளராக நிற்கமுடியாத அளவுக்கு வேலைகளில் மூழ்கி வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கும் நேரம். அப்போது தான் கல்லூரியில் படிக்கும்போது அன்பு காட்டி நெருங்கிப் பழகிய பேராசிரியர் மோரி என்பவரைச் சந்திக்கிறார். அவருடன் மிட்ச் ஆல்பம் தொடர்ந்து செலவழிக்கும் நேரங்கள் எல்லாம் வாழ்க்கைப் பாடங்களாக அமைகின்றன. நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மோரி, விரைவில் இறந்துவிடுவோம் என்று அறிந்த நிலையிலும் உற்சாகத்துடன் இருக்கிறார். வாழ்க்கை என்பது கொடுப்பது மட்டும்தான் என்று பாடம் சொல்கிறார். நான் என்னை மன்னித்துவிட்டேன்; பிறரையும் மன்னித்துவிட்டேன் என்கிறார். தன்னைத் தானே தன் தவறுகளுக்காக மன்னித்துவிடவேண்டும் என்கிற அற்புதமான பாடம் கிடைக்கிறது. பேராசிரியர் மோரியின் உற்சாகம் எல்லோருக்கும் இருந்தால் உலகமே சொர்க்கமாக மாறிவிடும் எனத் தோன்றும் அளவுக்கு அவர் மகிழ்வாக இருக்கிறார். எல்லோரும் வாசிக்கவேண்டிய புத்தகம். நாகலட்சுமி சண்முகம் சரளமான நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்ட செவ்வாய்க்கிழமைகள், மிட்ச் ஆல்பம், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், வெளியீடு: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால். விலை ரூ 299
காந்தியின் கணக்கு
கப்பலோட்டி சிறை சென்ற வ.உ.சி. விடுதலை ஆனபிறகு வறுமையில் வாடினார். அப்போது அவருக்கு உதவ தென்னாப்பிரிக்க தமிழர்களிடம் நிதி திரட்டப்பட்டது. அந்த தொகையில் ஒரு பகுதியாக 347 ரூபாய் 1916-இல் காந்தி மூலமாக வந்தும் சேர்ந்தது. ஆனால் இந்த பணம் வஉசிக்குத் தரப்படவில்லை என்றொரு விவாதம் எழுந்திருந்தது. வஉசி - காந்தி இடையிலான கடிதப்போக்குவரத்தைக் கண்டெடுக்கும் ஆய்வாளர் வேங்கடாசலபதி, பணம் வுசிக்குக் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார். பணம் கொடுக்கப்-பட்டதா என்பதை விட இரண்டு பெரும் மனிதர்களின் தன்னலமில்லா குணங்களை இந்த கடிதப்போக்குவரத்து தெளிவுபடுத்துகிறது. இதிலும் ஒரு கடிதத்தை காந்தி தமிழில் எழுதி அனுப்பி இருக்கிறார். இந்தக் கடிதப்போக்குவரத்துகள் 1915இல் நடந்துள்ளன. வஉசி எழுதியது எட்டு; காந்தி எழுதியது பதினொன்று. இந்த கடிதங்களையும் அவற்றுக்கு விரிவான முன்னுரையையும் எழுதி இந்நூலை தொகுத்துள்ளார் நூலாசிரியர். இரண்டு கப்பல்களை வாங்கும் அளவுக்கு
செல்வாக்காக இருந்த வ.உ.சி. வறுமையில் வாடியதைக் கண்டு வருந்துவதா? தமிழகத்து தமிழர் எல்லாம் கைவிட்ட நிலையில் கடல் கடந்து தென்னாப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருந்து தமிழர்கள் பணம் அனுப்பியதை எண்ணி மகிழ்வதா? இடையில் ஒரு தொகைக்காக காந்தியிடம் அல்லாடியதை எண்ணி மனம் குமுறுவதா? சில கடிதங்களை வாசிக்கையில் கண்ணீர் மல்கும் அளவுக்கு ஆழ்ந்த உணர்ச்சி எழும். ‘கடந்த இரண்டாண்டுகாலமாக சில தென்னாப்பிரிக்க நண்பர்கள் தயவே என்னையும் என் குடும்பத்தையும் காத்துவருகிறது'& இது வ உசி எழுதிய கடிதத்தில் ஒருவரி. சிறு நூல்தான். ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்கவேண்டிய நூல்.
வ.உ.சி.யும் காந்தியும் - 347 ரூபாய் 12 அணா - ஆ.இரா.வேங்கடாசலபதி, வெளியீடு: காலச்சுவடு, 669.கேபி சாலை, நாகர்கோவில் - 629001, விலை - ரூ 140
மண்ணும் மனிதர்களும்
எதார்த்தவாத எழுத்தில் அழகான வாழ்க்கை சரிதமாக எழுந்துநிற்கிறது, பனையடி நாவல். அரியலூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கையைச் சொல்லும் இக்கதை, மாடுகளும் பனைமரங்களும் கடலைக்காடுகளும் பம்பு செட்டுகளுமாக விவசாயம் என்னும் சூதாட்டத்துடன் போராடிக்கொண்டிருக்கும் நம் மக்களைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் என்ற சிறுவனை அவனது பள்ளிப்படிப்பிலிருந்து, வேளாண்மைப் படிப்பு வரை பின் தொடரும் கதை, அவனது ஐஏஎஸ் கனவையும் அதில் பலமுறை போராடி அவன் வெல்வதையும் படம் பிடிக்கிறது. வேளாண் துறையில் வேலை கிடைத்ததுடன் தமிழ் சும்மா இருந்திருக்கலாம். அதையும் தாண்டிச் செல்லவேண்டும் என தொடர் உழைப்பை மேற்கொள்கிறான். வறட்சி வந்தாலும் மனம் கலங்காமல் அடுத்த பருவத்தில் கடலை விதைக்கத் தயாராகும் தன் கிராமத்து விவசாயிகள் போல. புழுதிபடிந்த கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து, கல்வி கற்று மேல்நிலைக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களை இந்நாவலில் கண்டுகொள்ளலாம்.
பனையடி, இரா.செல்வம், வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 - பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600050 பேச: 044 -26251968, விலை ரூ.200.
பிப்ரவரி, 2022