நூல் அறிமுகம்

பொருளின் பொருள்

மதிமலர்

 பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப்பணியில்... தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார், கவிஞர் இசாக்.

நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம்போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளியசொற்களால்

‘‘கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்

காணப் போகிற மகிழ்ச்சி

எனக்குள்

ரசித்து ரசித்து

வாங்கிய பொம்மைகளோடு

காத்திருக்கிறேன்

நெடுநேரமாக

வீடு நுழைந்த முகம் கண்டு

தொட்டுக் கொஞ்சி மகிழ

நெருங்குகையில்

‘‘யாரும்மா... இவங்க...?''

என்கிறாள்

மழலை மொழியில்

என் மகள்'' - எனக் குழந்தை மொழியில் சொல்லிவிடுகிறார் கவிஞர்.

தமிழ்ச் சமூகத்தின் வாழ்வில் நகர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் பொருளாதாரத் தேக்கத்தின் தீர்வாக புலம்பெயர்ந்து உழைக்கும் நிலையை மிகச் சாதாரணமாக எதிர்கொள்ளும் எளிய மக்களின் குரலாக இத்தொகுப்பின் கவிதைகள் பேசுகின்றன.

பணியாளர்களின் வயிற்றெரிச்சலில் அரங்கேறும் முதலாளிகளின் ‘‘வள்ளல் தன்மை'' எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான ‘‘தேச ஒற்றுமையாக'' இருப்பது போன்ற உழைப்பின் வர்க்கபேத நிலைகளையும் எளிமையான கவிதைகளாக்கியிருக்கிறார்.

வெளிநாடு சென்றவனின் மாடி வீட்டைக் கண்டு பெருமூச்சு விட்டவர்களின் இதயம் பெருவலியை சுமக்கச்செய்யும் வகையில் உண்மையும் இயல்பும் கலந்த கவிதைகளால் இந்நூல் பின்னப்பட்டிருக்கிறது.

மணல் உரையாடல், கவிதைகள் ஆசிரியர் : இசாக், வெளியீடு, தமிழ் அலை, சென்னை. பேச: 9486838801   விலை ரூ.150                     - - - இளம்பிறை

நீரும் நெருப்பும்

சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத்

தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு

வண்டிகள் ஆகியவற்றின்

சித்திரங்களும் தாரளமாகப் புழங்கி அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய அந்த கிராமங்களுக்குக் கொண்டு செல்கின்றன. இந்த நாவலில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு உள்ளே

செல்லும் ஆசிரியர் கீழ்வெண்மணி சம்பவத்தை முன்வைத்து நிஜமான பாத்திரங்களையே உள்ளே உலவவிட்டு புன்னகைக்கிறார். 1967 டிசம்பர் 25 ஆம் தேதி நடந்த அந்த கோரச்சம்பவத்தை நோக்கி இந்நாவல் நகர்ந்தாலும் அக்கால அரசியல், நில உடைமை, விவசாயக் கூலிகளின் வாழ்க்கை ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது.

தாளடி, சீனிவாசன் நடராஜன்,

தேநீர் பதிப்பகம், 24/1, மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை, 635851

பேச: 9080909600, விலை ரூ. 230.

அபார ருசி

கதைகளை அபாரமான கலையழகோடு சொல்கிற திறன் வாய்த்திருக்கும் எழுத்தாளர் பாரதிபாலனின் 12 சிறுகதைகள் மூங்கில் பூக்கும் தனிமை என்ற பெயரில் தொகுப்பாக வெளியாகி இருக்கின்றன. தலைப்புச் சிறுகதையாக இருக்கும் மூங்கில் பூக்கும் தனிமையில் வரும் சந்தானகிருஷ்ணன் போன்ற பேராசிரியர்களை நாம் எல்லோரும் கடந்துவந்திருக்கலாம். இக்கதையில்தான் எத்தனை கோணங்களுக்கு இடம் இருக்கிறது என்பதை யோசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. சந்தானகிருஷ்ணனால் ஃபெயில் ஆக்கப்பட்ட ஒரு மாணவன், பிற்காலத்தில் வாழ்க்கையில் உயர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பேராசிரியரை தினமும் சென்று கவனித்துக் கொள்கிறான். ஒரு சாதாரண கேள்விக்குக்கூட பதில்சொல்ல முடியாத மாணவன் என்று அவனை அவமதித்த பேராசிரியரால் முதுமையிலும் நோயின் கொடுமையிலும் மருத்துவர் கேட்கும் சாதாரண கேள்விக்கும் கூட பதில் சொல்ல முடியாமல் போகிறது. இந்த கதையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் உணர்வுகள் முக்கியமானவை.  இந்த மாணவனை அடையாளம் தெரிகிறதா என்று கேட்கும்போது பேராசிரியரின் கண்ணில் வழியும் ஒரு துளி கண்ணீர். தனிமையில் மருத்துவமனையில் காத்திருக்கும் பேராசிரியர் மனைவியின் நெகிழ்ச்சி, தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக விழையும் மாணவனால் இறுதிவரை பட்டம் பெறமுடியாமல் போவது என பல்வேறு இழைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இத்தொகுப்பின் சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் பல இழைகள் பின்னிப் பிணைந்திருப்பதை, மனித உறவுகளின் சிக்கல்கள், பெண்களின் மனது, தகப்பன்கள் மகன்கள் மீது காட்டும் பாசம், ஏமாற்றம் என பல அம்சங்களை மனதுக்கு நெருக்கமான மொழியில் அபார ருசியான நடையில் வாசிக்க முடியும்.

மூங்கில் பூக்கும் தனிமை, பாரதிபாலன்,

வெளியீடு: நற்றிணை, 45, சாய்கவின்ஸ் குமரன் அடுக்ககம், ஸ்ரீதேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணாநகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், சென்னை&77 பேச: 044&79067606 விலை:ரூ 150

ஊரும் தெருவும்

இமையம் எழுதியிருக்கும் புதிய குறுநாவல் ‘வாழ்க வாழ்க' இன்று வழக்கமாகிப் போயிருக்கும் அன்றாட அரசியலின் அழுகலை சமூக சூழலின் பின்னணியில் பேசுகிறது. தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்று நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு கலந்து கொள்ள செல்லும் பெண்களின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். காசு கொடுத்து கூட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வெங்கடேச பெருமாள் போன்ற பாத்திரங்கள் அன்றாடம் நாம் கடந்து செல்பவைதான்.  கடுமையான கூட்டத்தின் நடுவே மாட்டித் தவிக்கும் பெண்களின்

சிரமங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் எழுத்தாளர். மொட்டை வெயிலில் உட்கார நாற்காலிக்கு  பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘‘ஊரான் ஊட்டு நாற்காலியில் செத்த நேரம் உட்காருவதற்கு ஜனங்க எம்மா அடிச்சுகிடுது? எம்எல்ஏ வா மந்திரியா இருக்கின்றவன் ஏன் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்க மாட்டான்?'' என்கிறாள் ஒரு பெண்.  ஊர் விட்டு ஊர் வந்து அரசியல் கூட்டம் கேட்க வந்திருந்தாலும் சாதி அங்கும் துரத்துகிறது. ‘' நானும் உங்க ஊரு தான்'' என்கிற பெண்ணை, ‘‘ நீ ஊரு இல்ல பறத்தெரு'' என்று துரத்தி அடிக்கிறார்கள். பெண்களின் வார்த்தையில் அரசியல்வாதிகளின் அத்தனை வேடங்களும் அனாயாசமாகத் தெறிக்கின்றன.  இமையம் எதையும் பூசி மெழுகாமல் அப்படியே எழுதி இருக்கிறார் என்பதுதான் இங்கு முக்கியம்.  பிரியாணிக்குப் பதிலாக குஸ்காவை மட்டும் தந்து  ஏமாற்றும் அரசியல்வாதிகளும் வெயிலில் காய்ந்து மயங்கி விழும் பெண்களுமாக ஒரு பொதுக் கூட்டத்தின் சூழலில் நாமும் அமர்ந்திருக்கும் உணர்வை எளிதாக உருவாக்கி திகைக்க வைக்கிறார் இமையம். சமகால அரசியலை அப்பட்டமாக உரித்து முன்வைக்கிறது இக்குறுநாவல்.

வாழ்க, வாழ்க - இமையம்,

வெளியீடு: க்ரியா, புதிய எண் 2, பழைய எண் 25, 17வது கிழக்குத்தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை,&41 விலை ரூ. 125