நூல் அறிமுகம்

பெருங்கதையைத் திறக்கிற சாவிகள்

மதிமலர்

குமரகுருபரனின் கவிதை உலகம் சம்பாஷணைகளால் ஆனதாய் இருப்பது தற்செயலல்ல. பிரயத்தனம் கொஞ்சமும் இல்லாத சன்னதத்தின் வெளிப்பாடுகளை ஏதேனும் ஒரு கலையின் மூலமாய் வெளிப்படுத்துவது விடுபடுவதற்கான வழியாகலாம்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தொடங்குகிற இடத்தில் பெருங்கதையைத் திறக்கிற சாவியாகத் தோற்றமளிக்கின்றன. ‘பேய்கள் மிகவும் நேர்மையானவை’ என்று தொடங்குகிறது ஒரு கவிதை. இன்னொன்று ‘அரங்கங்கள் அற்ற நகருக்கு வந்திருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறது.‘எல்லோருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது’ என்பது இன்னும் ஒரு கவிதை.‘நிறைவாய் சொல்கிறேன்’ என்று சொல்லித் தொடங்கிக் கொள்கிறது இன்னொரு கவிதை.

  வாழ்வின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் பேசுவதை விட தனிமையின் அலைதல்களும் நனவு குறித்த தீவிரமான எதிர் மனோபாவமும் பரவலாகத் தொனிக்கின்றன. குமரகுருபரன் கடினச் சொற்களையோ முடுக்கித் திருப்பும் மொழிக் குறளிகளையோ கிஞ்சித்தும் முயலவில்லை. மாறாகத் தன் கவிதைகளிலிருந்து குடத்துளை வழியாக வேகமாய்த் தன்னை வெளியேற்றிக் கொள்ளும் நீர்மத்தின் முகாந்திரத்தோடு தன்னை வெளியேற்றிக் கொள்கிறார். இந்தத் தொகுப்பில் இருக்கும் ‘மெல்லும் விழிகள்’ மற்றும் ‘பிதாவின் கணக்கு‘,‘வழி தவறியவன்’ ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள். ‘கடைசி காரியங்கள்’ மற்றும் ‘அமைதியாக இருங்கள்’ ஆகிய கவிதைகள் ஆத்மாநாமின் ‘ஏதாவது செய்’ கவிதைக்கு மிக நெருக்கமாகத் தொனிப்பது குறிப்பிடத் தக்கது.

-ஆத்மார்த்தி

 

ஞானம் நுரைக்கும் போத்தல், குமரகுருபரன்,

கவிதைகள், ஆதிரை பதிப்பகம், 722, இந்திரா நகர், பேட்டை, திருநெல்வேலி-627010 பேச: 9159586363 . விலை ரூ 60

உடலே மர்மம்

இன்றைய எந்திர வாழ்வில் சாமானியனுக்கும் சரி, தொழில் சாம்ராஜ்யங்களைத் தாங்கி நிற்கும் கோடீஸ்வரனுக்கும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பளு மன அழுத்தம். வயிற்றுக்கான வேலை, குடும்ப அச்சின்  சக்கரத்தை முன்நகர்த்துவது, இவற்றைத் தாண்டி சமூகம் சொடுக்கும் சாட்டை அடிகள் போன்ற சவால்களால் இவர்களுக்கு நன்றாக தூக்கம், ஓய்வு கிடைப்பதில்லை; கிடைப்பதெல்லாம் துக்கம்தான். இந்த மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க போதை அல்லது தூக்க மாத்திரைகள் மூலம் ஒளிந்துகொள்ளும் இந்த மனிதர்களுக்கு உண்மையில் கிடைப்பது ஆரோக்கியமற்ற உடல்தான்.

இதை சமாளிக்க, மனதைக் கட்டுப்படுத்த ஒரே நிரந்தர நிவாரணி தியானம்தான் என்கிறார் ஓஷோ. தியானத்திற்கு ஒதுக்க நேரமோ வாய்ப்போ இருக்கவில்லை என்றால், தினமும் படுக்கைக் குப் போகும் முன்பு அல்லது காலை எழுந்தவுடன் பத்து நிமிடம், இருபது நிமிடங்களில் தியானத்தை ஈடுபடுங்கள். அது நிச்சயம் உங்கள் உடலை தளர வைக்கும், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாது, தீய பழக்கங்களை கைவிட வைக்கும் என மிக எளிமையாக ஓஷோ சொல்கிறார். முக்கியமாக அவர் சொல்வது உங்கள் மனம், உடல் முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் கவ்வியிருக்கும் கவசங்களைக் கழட்டுங்கள், மௌனத்தை ரசியுங்கள், மனதை ரசியுங்கள், நன்றாக சிரியுங்கள் என பல்வேறு உபாயங்களை சொல்கிறார் ஓஷோ.  கடவுளை வெளியே தேடாதீர்கள்; அது வெளியில் இல்லை. உங்களுக்குள்தான் இருக்கிறது. அதைக் கண்டெடுக்க இடையறாமல் போரிடுங்கள். இந்த விழிப்புணர்வு சட்டென்று உங்களுக்குக் கிடைக் காது. ஆனால் தேடிக் கொண்டே இருந்தால் அது உங்களுக்குள் தோன்றிவிடும் என சொல்கிறார் ஓஷோ. ‘இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மம் இந்த உடல்தான். இந்த மர்மம் நேசிக்கப்பட வேண்டும்’ என்று  சொல்லும் ஒளிந்திருப்பது ஒன்றல்ல என்ற இந்த நூல் ஓஷோ ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரும் வாசித்தறிய வேண்டியது.

ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17. விலை: ரூ.150. பேச:24332682.

சர்ச்சைத் தீவு

 ‘முடிந்தது’ என சொல்ல முடியாமல் மெகா சீரியல் போல் நீண்டுகொண்டே இருக்கும் கச்சத்தீவு பிரச்னை குறித்து பல்வேறு ஆய்வுகள் மூலம் ‘கச்சத்தீவை திரும்பப் பெற முடியும்’ என்ற சிறு நூல் மூலம் அடித்துச் சொல்கிறார் இதழியலாளர் ப.திருமலை.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் தீராத பிரச்னையாக தொடர்கிறது கச்சத்தீவு. குறிப்பாக, தமிழக தேர்தல் சமயத்தில், தமிழக எல்லா அரசியல்வாதிகளின் அடித்தொண்டையிலிருந்து, ‘கச்சத்தீவு தமிழகத்தின் சொத்து. இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்; அதை நாங்கள் மீட்போம்’ என முழங்குவார்கள். தேர்தல் மேகம் கலைந்ததும் கச்சத்தீவு மீண்டும் சர்ச்சைத்தீவாக தொடரும். இதுதான் இன்றைய எதார்த்தம்.

‘கி.பி.1480-ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ராமேஸ்வரம் போல் பல்வேறு தீவுகள் உருவாகின. அதில் ஒன்றுதான் கச்சத்தீவு (இதை ‘வாலி தீவு’ என்று 1974-ல் சொல்லியிருக்கிறார் அடல் பிகாரி வாஜ்பாய்). கி.பி.1605-ல் ராமநாதபுரத்தின் சேதுபதி அரச மரபை மதுரை நாயக்கர் மன்னர் ஏற்றுக் கொண்டார். அதில் 69 கடற்படை கிராமங்களும் குத்துக்கால் தீவு, குருசடித்தீவு, கச்சத்தீவு என பல தீவுகள் சேதுபதி அரச மரபுக்கு போய் சேர்ந்தன..’ என வரலாற்றின் இறந்துபோன பக்கங்களிலிருந்து தனது ஆய்வை ஆரம்பிக்கும் ப.திருமலை, தொடர்ந்து ஆங்கில ஆட்சியில் 1913-ம் ஆண்டு ராமநாதபுர ராஜாவுக்கு கச்சத்தீவை குத்தகையாக ஒப்பந்தம் போட்டதையும் சொல்கிறார்.

இலங்கை 1920-ம் ஆண்டிலிருந்து கச்சத் தீவு எங்களுக்கு சொந்த மானது என உரிமை கொண்டாட ஆரம்பித்தது. தமிழகத்தின் விருப்பம் இல்லாமலேயே 1974-ம் ஆண்டு அன்று இலங்கை அதிபராக இருந்த சிறிமாவோவிடம் இந்திய பிரதமர் இந்திராகாந்தி ஒப்பந்தம் போட்டு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அந்தப் பிரச்னை அனுமன் வால் போல் நீண்டுகொண்டே இருக்கிறது. கூடவே சர்ச்சையும், தமிழக மீனவர்களின் துயரங்களும் முடிவில்லாமல் போவதுதான் மாபெரும் வேதனை. இந்நூலில் கச்சத் தீவைத் திரும்பப்பெற முடியும் என சர்வதேச உதாரணங்களும் இடம் பெற்றுள்ளன.

கச்சத்தீவைத் திரும்பப் பெற முடியும்! ப.திருமலை

பாபுஜி நிலையம் வெளியீடு, 39அ4/ மரக்கடை சாலை, இராணித்தோட்டம், நாகர்கோவில் -629001. விலை: ரூ 30

உருகும் வாழ்க்கை

எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்துவிடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறு வென்று வந்திருக்கிறது.  கல்பனா, ஜான், சகுந்தலா, கமலக்கண்ணன் என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் தாண்டிய உணர்வுகள் இடம்பெறுகின்றன.

சகுந்தலாவுக்கு உதவி செய்யப்போய் இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் வேலையையும் இழந்து நடுத்தெருவில் எந்த குற்றமுமே செய்யாத கமலக்கண்ணன் நிற்கிறான். அப்போது கூட செருப்பால் தன்னைத் தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது அவனுக்கு.

சபலங்களும் ஆசாபாசங்களும், அச்சமும், சுயஇரக்கமும் கொண்ட சாதாரண மனிதன் அவன். சகுந்தலாவின் பாத்திரமோ பெரும் அச்சத்தை வாசிப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவது. பெற்ற இரு குழந்தைகளையும் எந்த சலனமும் இன்றி விற்றுவிடும் கோரம். அடிப்படையில் மனிதகுலத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னர் சுயநலமே இருப்பதாகச் சொல்வார்கள்.

சகுந்தலாவுக்கு அது எக்கச்சக்கமாகத் தூக்கிநிற்கிறது. அவள் மீது பாலியல் ஆசை இருப்பினும் கமலக்கண்ணன் அதை வெளிக்காட்ட முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் கட்டப்பட்ட ஒரு புழுவாக நிற்கிறான். கல்பனாவின் கதையோ இன்னும் மோசம். தன்னைக் காதலித்த ஜான் முன்னால் பாலியல்தொழிலாளியாக நின்று அவனை சுகப்படுத்தி, பின்னர் தான் ஒருபோதும் அவனைக் காதலித்தது இல்லை என விளக்கி விலகுகிறாள்.

வாமு கோமுவின் எழுத்தில் கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் வந்துவிழுவது சாதாரணம். ஆனால் அவற்றின் பின்னால் இருப்பது அபலையான பெண்களின் இரக்கத்துக்குரிய வாழ்க்கை.

சகுந்தலா வந்தாள், வா.மு.கோமு, வெளியீடு: நடுகல் பதிப்பகம், பார்வதி ரைஸ்மில் காம்பவுண்ட், மங்கலம் ரோடு, கேவிஆர் நகர், திருப்பூர்-4. பேச:9843941916. விலை ரூ 150