நூல் அறிமுகம்

மேலெழும் வரலாறு

மதிமலர்

சக்கிலியர்கள் எனப்படும் அருந்ததியினரைப் பற்றிய வரலாறு என்பது அவர்கள் நாயக்கர் காலப் படையெடுப்பின்போது அவர்களுடன் வந்தவர்கள்தான் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் பேசும் தெலுங்குமொழி என்பது ஏற்கெனவே ஒடுக்கப்பட்டு உழல்பவர்களை மேலும் ஒதுக்கி வைக்கவே செய்கிறது. இந்த வரலாறு என்பது இட்டுக்கட்டப்பட்டது. சக்கிலியர் என்பவர்கள் இந்த  மண்ணைச் சேர்ந்தவர்களே என்று அடித்துச் சொல்லும் விதத்தில் கல்வெட்டுச் சான்றுகளுடன் சக்கிலியர் வரலாறு என்ற இந்நூலை எழுதி உள்ளார் ம.மதிவண்ணன். சக்கிலியர் என்ற பெயரால் இன்று அறியப்படுகிறவர்கள் இம்மண்ணில் ஏற்கெனவே வாணர்கள், வாணகோவரையர்கள், வாணாதிராயர்கள் என்று அறியப்பட்டவர்கள். அவர்களின் பூர்வவீகத் தாயகம் என்பது தமிழகத்தின் வட எல்லையாகிய அருவா நாடும் அருவா வடதலைநாடும் ஆகும். இம்மண்ணில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தெலுங்கையும் தமிழையும் பாவித்து வாழ்கிறவர்கள் அவர்கள்.வாணர்கள் ஆட்சி பூர்விகத்தில் வட தமிழகத்தில் இருந்து தொடங்கி பாண்டி நாட்டுக்கு இடப்பெயர்வடைந்து முடிவடைந்துள்ளது என்பதையும் அவர் நிறுவுகிறார்.  களப்பிரர்கள் என்று சொல்லப்படும் ஆட்சியாளர்கள் கூட சக்கிலியர்களின் பூர்வீகக் குடியினராக இருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சக்கிலியன் கோட்டை, சக்கிலியன் ஏரி, சக்கிலியன் கோபுரம், சக்கிலிய மன்னர்கள், படைத் தளபதிகள், கோவில் கல்வெட்டுகள் படை ராஜா சிலைகள் என்று ஏராளமாகச் சுட்டிக்காட்டி சக்கிலியர் என்று இன்று ஒடுக்கப்படுகிறவர்கள் அன்று ஆட்சியாளர்களாக இருந்திருக்கிறார்கள். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய தளபதியாக இருந்த ஒருவர் சக்கிலியரே என்றும் சொல்கிறார் மதிவண்ணன். செல்வாக்குடன் வாழ்ந்த வாணர்கள் எனப்படும் சக்கிலியர்கள் அச்சுதராயன் காலத்தில் உருவான நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் செல்வாக்கை இழந்தனர். சமூக அடுக்கில் படிப்படியாக தள்ளப்பட்டு கீழ்நிலை அடைந்தனர் என்கிறது இந்நூல்.

விஸ்வநாத நாயக்கன் காலத்தில் படைவீரர்களுக்கு செருப்பு தைக்க ஆந்திராவில் இருந்து அழைத்துவந்தவர்களே சக்கிலியர் என ஆய்வாளர் நா. வானமாமலை கூறியதை இந்நூல்  முழுக்க கண்டிப்பதை நாம் பார்க்க முடிகிறது. நாயக்கர் ஆட்சியில் அதிகாரம் பிடுங்கப்பட்டு, வெள்ளையர் ஆட்சியில் மேலும் ஒடுக்கப்பட்டவர்களாக சக்கிலியர் ஆனார்கள். தென் தமிழகத்தில் பூலித்தேவன் கட்டபொம்மன் காலகட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்ட அருந்ததியர் சமூகத் தளபதிகளின் பெயர்களைப் பட்டியிடுகிறார் நூலாசிரியர்.

இழிவுக்குத் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் மறைக்கப்பட்ட வரலாறு இந்நூலில் மெலெழுந்துவருவதாகக் கொள்ளலாம். பழங்காலத் தமிழகம் கேரளத்தின் கோழிக்கோடு, கர்நாடகத்தின் பகுதிகள், சித்தூர் வரை இருந்தது எனக் கொள்ளப்படுகையில் இம்மக்களையும் தமிழர்களாகவே கொள்ளவேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

சக்கிலியர் வரலாறு, ம.மதிவண்ணன், வெளியீடு: கருப்புப் பிரதிகள் - வெள்ளைக் குதிரை, சென்னை முகவரி:

பி 55, பப்புமஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை -5 பேச: 9444272500 விலை ரூ:350

நீரால் ஆனது

மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கையமைப்பு மிக பலவீனமாக இருக்கிறது. இந்நிலையில் அங்கு மேற்கொள்ளப்படும் மனிதச் செயல்பாடுகளால் நிலச்சரிவுகள் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன.  இந்த மலைத்தொடரைக் காக்கவேண்டியது இன்றைக்கு மிக அவசியமானதாகும். இதன் அடிப்படையில் பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமயிலான குழு இந்த மலைத்தொடரைப் பாதுகாப்பதற்கான ஆய்வறிக்கையை 2011 ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் வழங்கியது. இந்த ஆய்வறிக்கையின் தமிழாக்கமே நீர்க்கோபுரம் என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. சுமார் 50க்கும் மேற்பட்ட நீர் நிலைகள் தோன்றக்கூடிய இடமாக இந்த மலைத்தொடர் உள்ளது என்பதால் இந்நூலுக்கு நீர்க்கோபுரம் எனப் பெயர் வைத்திருப்பது சரியான ஒன்றுதான். வல்லுநர் குழு மிகக்கடுமையான நடைமுறைகளைப் பரிந்துரைத்துள்ளதாக இதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுப் பேரழிவுகள், இந்த அறிக்கை மேல் கூடுதல் கவனம் செலுத்த வைத்துள்ளன. நடுவண் அரசாலும் இந்த  மலைத்தொடர் அமைந்துள்ள ஆறு மாநிலங்களாலும் புறக்கணிக்கப்பட்ட அறிக்கை இதுவாகும். இந்த அறிக்கை அங்கே 64 விழுக்காடு இடங்களில் வளர்ச்சிப் பணிகளைத் தடை செய்தது. ஆனால் இந்த அறிக்கையை ஆராய அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 37 விழுக்காடாக இந்த வளர்ச்சிப்பணி தடை செய்யப்பட்ட இடங்களைக் குறைத்தது. அதுவும்கூட ஏற்கப்படவில்லை. தற்சமயம் சுற்றுச்சூழலின் மீது அக்கறையுள்ள அனைவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் இந்த நீர்க்கோபுரம்.

நீர்க்கோபுரம், பேராசிரியர் மாதவ் காட்கில் ஆய்வறிக்கை, தமிழிலும் க. சுபகுணம், உயிர் பதிப்பகம், எண் 4, 5வது தெரு, சக்தி  கணபதி நகர், திருவொற்றியூர், சென்னை-600019 விலை ரூ350 பேச:9840364783

தாவிச்செல்லும் குறிப்புகள்

இளம் மாணவர்களையும் போட்டித் தேர்வு ஆர்வலர்களையும் கண்டு உரையாடி வழிகாட்டி வருபவர் டாக்டர் சங்கரசரவணன். பல ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்றுநராக பலராலும் அணுகப்படும் திறன் படைத்தவர். அவர் எழுதியவற்றுள் 118 குறுங்கட்டுரைகள் மட்டும் தொகுக்கப்பட்டு வைகறை வாசகன் பதிவுகள் என்ற பெயரில் விகடன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழ் இலக்கியத்திலும் பொது அறிவிலும் அவருக்கு இருக்கும் ஆர்வமும் அறிவும் இந்த குறுங்கட்டுரைகளில் பளிச்சிடக் காணலாம். குறிப்பாக 2கே கிட்ஸ் என அழைக்கப்படும் இளம் பிள்ளைகளுக்குத்தான் இந்த நூல் என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிறார். கலைச்சொற்களில் தொடங்கி குறளில் திளைத்து, இந்திய வரலாற்றில் மூழ்கி, போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டி, இடையிடையே சொந்தக் கதைகளையும்  எளிமையாகப் பேசி, ஒரு நண்பனைப் போல் இந்த நூலின் பக்கங்களில்  ச.ச. இருக்கிறார். சிலப்பதிகாரச் சிறப்புகள் என்று சில கட்டுரைகள், தான் சந்தித்த பெரிய மனிதர்கள் பற்றிய இனிமையான நினைவுக்குறிப்புகள். போட்டித் தேர்வுப் பயிற்றுநராக தன் அனுபவங்கள், சின்னச் சின்னதாய் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள், ஆங்காங்கே கேலியும் கிண்டலும் தூவி எழுதப்பட்ட வரிகள் என்று 2கே கிட்ஸ்கள் படிக்கவும் 60 ப்ளஸ் ஆட்கள்வரை அசைபோடவுமாக எழுதப்பட்ட நூலாக இருக்கிறது. 352 பக்கங்களும் ஏதோ ஒருவிதத்தில் வாசிப்பவர்களுக்கு புதிய தகவலொன்றைத் தருவதாக இருப்பதே இதன் சிறப்பு.

வைகறை வாசகன் பதிவுகள், டாக்டர் சங்கர சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்னாசாலை, சென்னை 600002, விலை:ரூ.375

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram