நூல் அறிமுகம்

கவிதைப் பேரனுபவம்

Staff Writer

சொற்களின் மீதான களைப்பில்

உறங்க நினைத்தவனை

உறங்கவிடவில்லை படிமம்

ஒரு கனவு போல

அவனுக்குள் விழித்திருந்தது

அது

கவிஞனைத் தூங்கவிடாமல் செய்யும் படிமம் தான் வாசகனில் உறங்கிக்கொண்டிருக்கும் கவிமனதையும் எழுப்பிவிடுகிறது. ‘படிமங்கள் உறங்குவதில்லை‘ பழநிபாரதியின் புதிய கவிதைத்தொகுப்பு. கடிகாரத்தையும் காலத்தையும் பிணைத்து 12 கவிதைகளை அளித்துள்ளார். வாசிக்கையில் நேரம் ஓடுவதே தெரிவதில்லை.

நீங்கள்

கவனிக்கலாம்

கவனிக்காமல் போகலாம்

எல்லாரையும்

எல்லாவற்றையும்

கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது

காலம் இந்த கவிதை அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அளவுக்கு காலத்தால் பதிவுசெய்யப்படக்கூடும்.

கடற்கன்னி குறித்த ஒரு கவிதையில்

‘கால்களற்ற நான் அவள்

உடல் முழுதும்

ஊர்ந்துகொண்டே இருந்தேன்‘ என்கிறபோது அந்த வரிகளில் இருக்கும் முரண்களில் தடுக்கி விழுகிறோம்.

‘இந்தச்சுடர்

காற்றில்

இவ்வளவு அலைக்கழியுமென்றால்

இருளிலேயே

இருந்திருப்பேன்.‘ எளிமையான படிமங்களும் அரிய அனுபவத்தைச் சுட்டும்.

கொரோனா தொற்றின் காலக்கட்டத்தில் மெரினா கடற்கரையைப் பார்த்து எழுதப்பட்டிருக்கும் கவிதை பேரனுபவமாகப் பதிவாகிறது.

நீலங்கூடி நிற்கிறது/ மெரினா கடல் - என அக்கவிதை முடிகையில் நெஞ்சில் ஈட்டி பாய்கிறது.

அணிந்துரையில் கவிஞர் கலாப்ரியா குறிப்பிட்டுள்ளது போல 64 பக்கங்களில் பிரமாண்டமான ஒரு படிமக்கூத்து!

படிமங்கள் உறங்குவதில்லை, பழநிபாரதி, கொன்றை வெளியீடு, விற்பனை உரிமை தமிழ்வெளி, 1, பாரதிதாசன் தெரு, சீனிவாச நகர், மலையம்பாக்கம், சென்னை 600122, விலை ரூ.100

- அ. சீனிவாசன்

படக்கதை வடிவில் அரசியல் வரலாறு

தென்னிந்திய நல உரிமை சங்கம், நீதிக்கட்சி, சுயமரியாதைக் கழகம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என திராவிடர் இயக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை அழகிய ஓவியக் கதை வடிவில் இந்நூலில் தந்திருக்கிறார்கள். நீதிக் கட்சி ஆட்சியை விவரிக்கும் முதல் பாகம் வைக்கம் போராட்டத்தில் பெரியார் நுழைவதுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் பெரியாரின் போராட்டங்களை காங்கிரஸுடன் ஏற்படும் முரண்பாட்டை, சுயமரியாதை இயக்கத்தை என ஓவியக்கதை வடிவில் கொண்டு செல்கிறார்கள். அண்ணா நுழைந்து, திருவாரூரில் கமலாலயக் கரையில் ஒரு சிறுவன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் இரண்டாவது பாகமும் முடிவடைந்திருக்கிறது. புதிய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதுதான் நூலின் நோக்கம். காட்சிகளை அழகாக சொக்கலிங்கம் வரைய, வரலாற்றை மிக சுருக்கமாக எளிய வசனங்கள் மூலம் கொண்டு செல்கிறார் கோவி. லெனின். திராவிட இயக்க வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் உதவிகரமாக இருக்கும்.

திராவிடத்தால் வாழ்கிறோம் 1, 2. எழுத்து கோவி: லெனின், ஓவியம்: கி.சொக்கலிங்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், திமுக இளைஞர் அணி, அன்பகம், 614, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018

விலை ரூ 250 பேச: 044 - 24349970

சூதாட்டம் அல்ல

பங்குச்சந்தை பற்றிய முழுமையான அதேசமயம் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட பத்தகம் இது. பங்குச்சந்தைகள் குறித்த நிபுணரும் தமிழில் பரவலாக இது பற்றி வாசிக்கப்படுகிற நூல்களை எழுதிவருமான சோம வள்ளியப்பனின் புதிய நூல் இது. பங்குச் சந்தையை எப்படி அணுகவேண்டும் என்று ஆரம்ப நிலை ஆட்களுக்குச் சொல்வதுடன் அதில் எப்படிக் கவனமாக இருக்கவேண்டும் என்றும் விளக்கிச் சொல்கிறது இந்நூல். பங்குச்சந்தை சூதாட்டமல்ல. சரியான முறையில் நிதானமாகச் செய்தால் வங்கி வட்டியைவிட கூடுதல் வருமானம், அதுவும் வரி இல்லாத வருமானம் தரக்கூடியது என்பதை நிறுவும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் தந்திருக்கும் பத்து பங்குச் சந்தை ஆத்திச்சூடி வரிகளை ஒவ்வொரு முதலீட்டாளரும் ஆழமாகப் பயிலவேண்டியது அவசியம்.

ஆட்டமா சூதாட்டமா பங்குச்சந்தை ஒரு பார்வை சோம.வள்ளியப்பன், வெளியீடு: சுவாசம், 52/2, பி எஸ் மகால் அருகே, பொன்மார், சென்னை 600127

பேச: 8148066645, விலை ரூ 140

குளிர்காலக் கொலைக் குவியல்!

மர்மக் கதைகளின் ராணி அகதா கிறிஸ்டியின் பன்னிரெண்டு துப்பறியும் கதைகளின் தமிழாக்கம் குளிர்காலக் கொலைகள் என்ற பெயரில் பிஎஸ்வி குமாரசாமியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. பெரும்பாலான கதைகள் நல்ல பனிகொட்டும் குளிர்காலத்தில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளன. அகதா கிறிஸ்டியின் துப்பறிவாளர் பாத்திரங்களான புவாரோ, மார்ப்பிள், டப்பென்ஸ், டாமி போன்றோர் இக்கதைகளில் தோன்றி கொலைகளைத் துப்பறிகின்றன. ஒவ்வொரு கதையும் தனித் தனிக் களங்களில் எழுதப்பட்டு அபாரமான சித்தரிப்புகளைக் கொண்டுள்ளன. உதாரணத்துக்குப் பாதிரியாரின் மகள் என்ற கதையைச் சொல்லலாம். அது ஒரு பழைய வீட்டில் ஆவி நடமாட்டத்தைத் துப்பறிவதுபோல் தொடங்கினாலும் உண்மையில் அது ஒரு பொக்கிஷத்தைக் கண்டறிவதில் போய் முடிகிறது. அழகிய மொழிபெயர்ப்பில் துப்பறியும் கதைகளின் ரசிகர்களுக்கு கட்டாயம் பிடிக்கும் கதைகளின் தொகுப்பு இது.

குளிர்காலக் கொலைகள், அகதா கிறிஸ்டி, தமிழில் பிஎஸ்வி குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், மாலவியா நகர், போபால் 462003 விலை ரூ350

வீரத்தமிழ்ப் பெண்கள்!

ஆங்கில ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையில் இந்தியாவில் பெரும் அகிம்சைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத் தில் ஆங்கிலேயர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஐரோப்பா சென்றார் சுபாஷ் சந்திரபோஸ். ஆயுதம் தாங்கிய படை ஒன்றை உருவாக்கி, இந்திய விடுதலையைப் பெறுவதற்காக ஆங்கிலப் படைகளுக்கு எதிர்முனையில் நின்ற ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியை அவர் நாடினார். அந்த முயற்சியின் பலனாக சிங்கப்பூரில் அவர் உருவாக்கியதே இந்திய தேசிய ராணுவம். இதனுடன் ஜான்சிராணி படையணி ஒன்று முழுக்க பெண்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்ப்பெண்கள். இந்த படையணியை சரியாக வரலாறு பேசாத நிலையில் அவர்களைப் பற்றிய நூலை ஆக்கி இருக்கிறார் பேராசிரியர் மா.சு.அண்ணாமலை. கேப்டன் லட்சுமி, ஜானகி தேவர் உட்பட பல பெண்களைப் பற்றியும் அவர்கள் படை பர்மா எல்லை நோக்கிச் சென்றது பற்றியும் விவரமாக எழுதி உள்ளார். இந்திய தேசிய ராணுவம் கெடுவாய்ப்பாக பர்மா எல்லையில் ஜப்பானியருடன் இணைந்து ஆங்கிலப்படைகளுடன் போரிட்டபோது தோல்வியைச் சந்தித்தது. இந்த பெண்கள் ராணுவம் போரில் கலந்துகொள்ள விரும்பியபோதும் கூட தோல்வியால் சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. இவர்களின் போர்ப்படை அனுபவங்களை எளிய தமிழில் விவரித் துள்ளார் அண்ணாமலை. நேதாஜியின் படையில் இணைந்துகொண்ட தமிழர்களின் வீரம் செறிந்த வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புவோர் இந்நூலைப் படிக்கலாம். அத்துடன் நேதாஜியின் வரலாறும் நூலின் முற்பகுதியில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

நேதாஜி படையில் வீரத்தமிழ்ப் பெண்கள், மாசு அண்ணாமலை, பெசன்ட் நகர், சென்னை 600090

பேச: 9884094301, விலை: ரூ. 300