ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். 
நூல் அறிமுகம்

நேர்மை படும் பாடு - நூல் அறிமுகம்

அருள்செல்வன்

அதிகாரமிக்க பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கலை ஈடுபாடு என்பது மிக மிக அரிதான ஒன்று. அப்படிக் கலை ஈடுபாடு கொண்ட அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட அரிதான ஒருவர்தான் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்.

கேரளாவில் மாவட்ட ஆட்சித் தலைவராக, துறைச் செயலாளராக, தமிழ்நாட்டில் மண்டலத் தணிக்கை அதிகாரியாக என்று பல்வேறு அதிகாரம் மிக்க பொறுப்புகளில் இருந்தவர். வெவ்வேறு பெரிய பொறுப்புகளில் பணியாற்றினாலும் தன்னுள் எரியும் கலை தாகத்தை அணைக்காமல் காத்து வந்துள்ளார். இவர் தமிழில் மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர்.

இவர் தனது இந்திய ஆட்சிப் பணி அனுபவங்களையும் சினிமா அனுபவங்களையும் பற்றி ஒரு நூல் எழுதியிருந்தார். அது இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும் என்ற தலைப்பில் வெளியானது.

அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து கேரள அரசியல், ஆட்சிப் பணி அனுபவங்கள் பற்றியும் மக்களுடன் கொண்டிருந்த தொடர்புகள் குறித்தும் இன்னொரு நூல் எழுதியிருக்கிறார், 'நேர்மை படும் பாடு' என்பது அதன் தலைப்பு. இந்த நூலில் ஓர் அதிகாரிக்கு நேர்மையைக் கடைப்பிடிக்கவும் செயல்படுத்தவும் குறுக்கே விழும் தடைகள், இடையூறுகள், மன ஊசலாட்டங்கள் போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புறத்தாக்கங்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு வென்று உளச்சான்று வழியில் நின்று வென்ற பல்வேறு தருணங்களை உண்மை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கி உள்ளார்.

அளவுக்கு மிஞ்சி நேர்மையாக இருந்த ஆர்டிஓவை பஸ் முதலாளி கத்தியால் குத்திய சம்பவம், திருச்சூருக்கு நீர் வழங்கும் பீச்சி அணைக்கட்டு நீரில் விஷம் கலந்து பரவிய போது பிரச்சினையைச் சமாளித்தது, அரசியல்வாதிகள் கட்சிக்காரர்களிடம் ஒரு விதம் அதிகாரிகளிடம் வேறு விதம் என நடத்தும் நாடகங்கள், பாலா பகுதி தொழிலாளர் முதலாளிகள் பிரச்சினையைத் தீர்த்தது, படசென்சாரின் தலையிட்ட அமைச்சரை சமாளித்தது, வருமான வரி அதிகாரிகள் நடத்தும் வரி வசூல், வரி ஏய்ப்பு நாடகங்கள், பிரதமர் ராஜீவிடமே தைரியமாகக் கருத்து சொல்லி அதையும் ஏற்க வைத்த வீஏஓ, ஏ.கே . ஆண்டனி முதல்வராகிப் பதவியேற்ற விழாவைக் குடும்பத்தினரை வீட்டிலிருந்தே டிவியில் இருந்து பார்க்க வைத்த எளிமை, தன் கணவர் மாநில முதல்வர் உம்மன் சாண்டி என்றாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் மனைவி, தேர்தலின் போது வாக்குச்சாவடியில் ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டும் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறி அதை மறைத்த தேர்தல் அதிகாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற செய்த சாதுர்யங்கள், என் அஃபீசியல் அப்பா பெயரைக் கேட்கிறீர்களா? உண்மையான அப்பா பெயரைக் கேட்கிறீர்களா? என்று அதிர்ச்சி தந்த எழுத்தாளர்,கேரளாவில் நிலவும் கலாச்சார அதிர்ச்சி தரும் 'சம்பந்தம்' என்ற வழக்கம், கங்கை நதியோரம் பாரதியார் சிலைக்கு நிகழ்ந்த அவலம், அணைக்கட்டில் விரிசலில் நீர் கசிந்த விவகாரம், லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது என்ற செய்தியை வாசித்துக் கொண்டே லஞ்சம் வாங்கிய போலீஸ், திட்டமிடப்பட்ட மதக் கலவரத்தைத் தடுத்தது, துக்கம் விசாரிக்க ஒரு நூல் புடவை எடுக்க மூடிய கடையைத் திறந்து சில மணி நேரம் புடவை தேடிச் செலவிட்ட பிரதமரின் மகள், பெட்டிஷன் போடுவதில் கைதேர்ந்த பெண்ணைச் சமாளித்த விதம், சிறை சென்று வந்த அமைச்சரிடம் பணியாற்றிய அனுபவம் என்று ஏராளமான அனுபவங்கள் திரைப்படக் காட்சிகள் போல் விரிகின்றன.

இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு அளிக்கும்.

இந்நூலில் அதிகாரிகள் நிலை தடுமாறும் சந்தர்ப்பங்களும் தடம்புரளும் வாய்ப்புகளும் எவ்வாறெல்லாம் நேர்கின்றன அவற்றைச் சமரசப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலைகளும் எவ்வாறு வாய்க்கின்றன, அவற்றை வெல்ல மனதை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தனது அனுபவங்களையே உதாரணம் காட்டி எழுதியுள்ளார். நேர்மையாக இருப்பது என்பதே ஒரு பெரும் சவாலாகவும் அந்தச் சவாலை எதிர்கொண்டு முறியடிப்பது மனசாட்சி உள்ள அதிகாரிகளுக்குப் பெரிய பிரச்சினையாகவும் அக நெருக்கடி கொண்டதாகவும் இருக்கும் என்பதையும் அதை வென்று விட்டால் அதன் மூலம் கிடைக்கும் நிமிர்வையும் அது தரும் பரவசத்தையும் அனுபவித்தால் தான் தெரியும் என்றும் அவர் அனுபவங்களில் இருந்து வெளிப்படுத்துகிறார்.

நேர்மை படும் பாடு, ஞான ராஜசேகரன், வெளியீடு டிஸ்கவரி புக் பப்ளிகேஷன்ஸ், முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர் ,சென்னை 600078.

போன்: 87545 07070 விலை : ரூ.240

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram