நூல் அறிமுகம்

எண்பது சிறுகதைகள்

மதிமலர்

இரா. முருகனின் எண்பது கதைகளின் தொகுப்பு 775 பக்கங்களில் எழுத்து பிரசுர வெளியீடாக வந்துள்ளது. நாற்பத்து ஐந்து ஆண்டுகளாக எழுதிவருபவர் இரா.முருகன். பல இதழ்களில் இத்தனை ஆண்டுகளாக வெளியான இந்த சிறுகதைகளை வாசித்த வாசகர்களுக்கு இந்தத் தொகுப்பு ஓர் எழுத்தாளனின் படைப்புலகை முழுமையாக அனுபவிக்க உதவியாக இருக்கும். இந்த சிறுகதைகளின் முதல் வரிகள் ஒருவிதமான மினுமினுப்பைக் கொண்டிருக்கின்றன. சின்ன தீப்பெட்டி வெளிச்சம் போல் கதைக்குள் வழிகாட்டி அழைக்கின்றன. நீள வாக்கியங்களை பெரும்பாலும் தவிர்த்து சிறு வாக்கியங்களின் மூலமே கதைகள் நகர்கின்றன.  ஆர்ப்பாட்டம் இன்றி, ஆவேசம் இன்றி அழகாகச் செல்லும் கதைகள் ஏதோ ஒரு வரியில் எதிர்பாராமல் முடிவடைகின்றன. கவனத்துடன் இருந்தால்தான் அதன் சிறுகதைத் தன்மையை துய்க்கக் கூடிய அளவுக்கு அவை நுட்பமானவை. முருகன் பல்வேறு நாடுகளில் வேலைப்பார்த்திருக்கிறார். எனவே அங்கெல்லாம் பார்த்த மனிதர்கள் இந்த கதைகளில் இருக்கிறார்கள். சிங்கப்பூர், தாய்லாந்து. டெல்லி, மாம்பலம்… இது ஒரு உலகக் கதைத் தொகுப்பு எனச் சொல்லலாம். ஆனால் ஆட்கள் மாறலாம். அவர்களின் உணர்வுகளான காதல், காமம், குரோதம் மாறுவதில்லை. டெல்லியில் வீட்டுக்கு கால்பந்து பார்க்கவந்த நண்பனும் இனிப்புக்கடை ஊழியனுமான வங்காளியை நள்ளிரவில் சந்தேகப்பட்டு விரட்டி அடிக்கும் ஒருவன், தன்னை வைப்பாக வைத்திருந்து கொடுமைப் படுத்திய பணக்காரன் இறந்தபின் அவன் திறந்திருக்கும் கண்களுக்கு எதிரே வேறொருவனுடன் உறவு கொள்ளும் பெண், இளம் வயதில் எடுத்த குழுப் புகைப்படத்தில் திடீரெனத் தன்னைக் காணாமல் திகைத்து போட்டோ ஸ்டூடியோ வாசலில் காத்திருக்கும் முதியவர், தாய்லாந்தில் ஒரு இளம் பிட்சுவை தன் காதலன் எனப் பின் தொடரும் அமெரிக்கப் பெண், செத்துப் போன மனைவியுடன் பேச மீடியம் வீட்டு வாசலைத் தட்டும் கணவன்… எத்தனை விதமான மனிதர்களை எழுதி இருக்கிறார் முருகன்! நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதால் அவை எழுதப்பட்ட காலமும் அக்காலத்திய நிகழ்வுகளும் அப்படியே உறைந்துபோயிருக்கின்றன. எளிய மொழியில் பல பரவசங்கள் அடங்கிய தொகுப்பு.

இரா.முருகன் கதைகள், வெளியீடு, எழுத்து பிரசுரம், எண் 55(7), ஆர் பிளாக், 6வது நிழற்சாலை, அண்ணா நகர், சென்னை-40 பேச: 8925061999 விலை ரூ 950

பண்பாட்டுக் கையேடு

தமிழ்ப் பயண இலக்கியத் தந்தை எனப் புகழப்படுபவர் சோமலெ. அவர் எழுதிய நூல்கள் பல துறை சார்ந்தவை. இன்றைக்குப் போல் இணைய உதவி இல்லாத காலத்தே அவர் அரிய செய்திகளைத் திரட்டி நூலாக்கினார். கால்கடுக்க பயணம் செய்து எழுதினார். தமிழ்நாட்டு மக்களின்  மரபும் பண்பாடும் என்ற இந்நூல் 1975-இல் வெளியானது. இது முல்லை பதிப்பகத்தினரால் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் வரலாறு, திருவிழா உள்ளிட்ட பழக்க வழக்கங்கள், உள்ளூர் பிராந்தியப் பண்பாடுகள் ஆகியவற்றை இலக்கிய, ஆய்வு சான்றுகளுடன் தொகுத்து நூல் ஆக்கி இருக்கிறார் சோமலெ. தெருக்கூத்துகளும் வேறு பொழுதுபோக்குகளும் என்ற தலைப்பில் கூட இந்த நூலில் நாடகம் தோன்றியதில் இருந்து ஆரம்பித்து எழுதி இருக்கிறார். வாய்மொழி இலக்கியங்கள் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டால் வாய்மொழிக்கதைகள், பாடல்கள், தாலாட்டுகள், பயிர்தொழில் பாடல்கள், வண்டிக்காரன் பாடல், அம்மானைப் பாடல், கதைப்பாடல்கள், ஞானக்கும்மி, சித்தர் பாடல்கள், வாய்மொழி இலக்கியத்தின் தற்போதைய நிலை வரைக்கும் எழுதித் தொகுத்துள்ளார்.  திருமணச் சடங்குகள், வழிபாடுகள், கடவுளர்கள், சித்தர்கள் என இந்நூல் தமிழ்ப் பண்பாட்டின் முழுமையான கையேடாக உருவாகி இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் ஜாதி, கள ஆய்வுகளும் நேர்காணல்களும், நிவேதிதா லூயிஸ், வெளியீடு: ஹெர்ஸ்டோரீஸ், 15, மஹாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 1, ராக்கியப்பா தெரு, சென்னை -600004 பேச: 9840969757 விலை: ரூ 750

துரத்தும் சாதி

சாதி இல்லாத இடமே இல்லை என்கிற அளவுக்கு அது நம் சமூகத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இந்து மதத்துக்குள்தான் சாதி என்றால் அம்மதத்தில் இருந்து ஆதியில் கிறிஸ்துவத்துக்குச் சென்றவர்களையும் அது துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. தலித் கிறித்துவ மக்களுக்கு எதிராக சாதிப் பிரச்னை இருக்கிற சில இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு விரிவாக எழுதி இருக்கிறார் நிவேதிதா லூயிஸ். இந்நூலில் வட மாவட்டங்களை மட்டும் தொட்டிருப்பதாகவும் தென் தமிழகம் பற்றி மேலும் விரிவாக எழுத இருப்பதாகவும் முன்னுரையில் குறிப்பிடுகிறார் நிவேதிதா. கும்பகோணம் (தொண்டமாந்துறை, கோட்டப்பளையம்) செங்கல்பட்டு (பாப்பநல்லூர், கிளார் கண்டிகை புதூர், ராவுத்தநல்லூர் கண்டிகை)  திண்டுக்கல்( தோமையார் புரம்,  பஞ்சம்பட்டி) மறைமாவட்டங்களில் தலித் கிறிஸ்துவர்கள் போராடிய இடங்களுக்குச் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டு எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளுக்காகச் செல்கையில் அவர் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார், தரவுகளைத் தருவதற்கு ஆட்களை எப்படிப் பிடிக்கிறார் என்பவையும் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. ஏறக்குறைய  ஆதிக்கசாதி, தலித் மக்கள் இருதரப்பையும் கேட்டே அவர் இப்பிரச்னைகளைப் பற்றி எழுதி இருக்கிறார் என்பது முக்கியமானது. சர்ச்களில் இருக்கும் பிரச்னைகள், கல்லறைப் பிரச்னைகள்... என சாதி நீக்கமற நிறைந்துள்ளது. தலித் கிறிஸ்துவ உரிமைப் போராளிகள் ஐவரின் நீண்ட நேர்காணல்களையும் அனுபவங்களையும் நூலின் பிற்பகுதி கொண்டுள்ளது. அவர்களின் போராட்ட அனுபவங்கள் படிக்கையில் பகீரென்று இருக்கிறது.

கிறிஸ்தவத்தில் ஜாதி, கள ஆய்வுகளும் நேர்காணல்களும், நிவேதிதா லூயிஸ், வெளியீடு: ஹெர்ஸ்டோரீஸ், 15, மஹாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 1, ராக்கியப்பா தெரு, சென்னை -600004 பேச: 9840969757 விலை: ரூ 750

எங்கள் ஆசிரியர்!

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் இரா.பிரபாகர் வேதமாணிக்கம் பணி ஓய்வு பெற்ற தருணத்தில் அவருடைய பழைய மாணவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வந்துள்ளது.  அவருக்கும் மாணவர்களுக்குமான உணர்ச்சிபூர்வான உறவை இக்கட்டுரைகளில் காண முடிகிறது. இயக்குநர் ராம் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் படித்தவர்.  முதலாண்டின் நடுவிலேயே அவர் ரயில் ஏறி ஊர் சுற்றப் போய்விட்டு திரும்பி இருக்கிறார். தேர்வு எழுதவே இல்லை. அவருக்கு நம்மால் டிகிரி வாங்க முடியாது போலிருக்கிறதே என்று தோன்ற, படிப்பை விட்டுவிடுவோம் என நினைக்கிறார். இதை போகிறபோக்கில் பிரபாகர் அய்யாவிடம் சொல்ல, அவர், ‘ நீங்க டிகிரி வாங்கணும் நினைக்காதீங்க.. அப்படியே இருங்க.. காலேஜ்ல படிக்கிற எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க’ என்று சொல்லி இருக்கிறார். ராம் மூன்றாம் ஆண்டு முடிக்கையில் எல்லாம் அரியர்ஸையும் கிளியர் செய்துவிட்டார்!

அய்யாவுடனான தன் நட்பை விளக்குகையில் படிப்பு முடித்து சென்னைக்கு வந்து மேற்படிப்பு படித்தாலும் எப்போது நேரம் கிடைத்தாலும்  மதுரைக்குக் கிளம்பிப்போய் அய்யாவைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் பழக்கம் இருந்தது. அதிலிருந்து விடுபடுவதே பெரும் சிரமமாக இருந்தது என எழுதுகிறார். இதுபோல் பல துறை சார்ந்த அய்யாவின் மாணவர்களின் அனுபவங்கள் இதில் உள்ளன.

பிரபாகர்  நவீன இலக்கியங்களைப் பற்றியும் திரைப்படம் பற்றியும் மாணவர்களிடம் பேசி இருக்கிறார் நாடகங்களில் நடிக்க பயிற்சி அளித்திருக்கிறார். இசை அமைப்பாளராக, ஓவியராக எவ்வளவு பரிமாணங்களில் இந்தப் பேராசிரியர் மிளிர்ந்திருக்கிறார் என இந்நூல் சொல்வது வியப்பை அளிக்கிறது.

 ஒரு மரம் ஆயிரம் பறவைகள் – ஒரு தமிழ்ப் பேராசிரியரின் காலவெளிக் குறிப்புகள், வெளியீடு: சால்ட், பேச: 9363007457 விலை ரூ 240