பெங்களூருவில் நடந்த புக் பிரம்மா இலக்கிய விழா கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இயங்கும் எழுத்தாளர்களின் கலைஞர்களின் சங்கமமாக நிகழ்ந்தேறியது. கடந்த 9,10,11 ஆகிய மூன்று நாட்களும் பெங்களூரு கொரமங்களாவில் உள்ள புனித ஜான் மருத்துவக்கல்லூரி அரங்கில் இந்த விழாவை புக் பிரம்மா அமைப்பினர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்நான்கு மொழிகளையும் சேர்ந்த பதிப்பாளர்களுக்கான தனி உரையாடல் அரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டு அதில் குறிப்பிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு, பதிப்பு உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் பதிப்பாளர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. காலச்சுவடு கண்ணன், முரளி கண்ணதாசன், ஜீரோ டிகிரி ராம்ஜி, யாவரும் ஜீவகரிகாலன், சிக்ஸ்த் சென்ஸ் கார்த்திகேயன், ஆனந்த் தட்சிணாமூர்த்தி உட்பட்ட பல தமிழ்ப் பதிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்தாளர்கள் என உரையாடல்கள் களைகட்டின. நூல்களை சந்தைப்படுத்தல், உரிமைகளைப் பெறல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் ஆகியவை பற்றி தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் நான்கு மொழிகளையும் சேர்ந்த பதிப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
தென்னிந்திய மொழி இலக்கியங்களுக்கு சர்வதேச அரங்கிலான பதிப்பு வாய்ப்புகள் குறித்த உரையாடல் அரங்கில் பார்வையாளர் அரங்கில் இருந்த மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன், சமீபத்தில் தென்னிந்திய எழுத்தாளர் எழுதிய நாவல் ஒன்று மொழிபெயர்ப்புப் பரிசுக்காகத் தேர்வானது. நடுவர்கள் அதை மின்னஞ்சல் மூலம் மொழிபெயர்ப்பாளருக்கு அறிவித்த பின்னரும் அந்த பரிசு அவருக்கு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டுவிட்டது… இந்த விஷயத்தில் சக இலக்கிய உலகம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்ததே என்றார். மேடையில் இருந்த ஜீரோ டிகிரி ராம்ஜி, அந்த நாவலின் பதிப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல முன்வந்தவர், அப்போது நடந்தவற்றை விவரித்தவர், நாங்கள் போனால் போகட்டும் என விட்டுவிட்டோம். அந்த விருது கொடுக்கப்படாமல் தடுத்தவர்கள், பின்னணியில் இருந்தவர்கள் யார் என தமக்கு நன்றாகத் தெரியும் என குறிப்பிட்டார். ( ராசலீலா, சாரு நிவேதிதா நாவல், மொழிபெயர்ப்பு: நந்தினி கிருஷ்ணன்).
இந்த பன்மொழி பதிப்பாளர் அரங்குகளை முரளி கண்ணதாசன் நன்றாக ஒருங்கிணைத்தார். காலச்சுவடு கண்ணன் தன் விரிவான அனுபவங்களை அவ்வப்போது நகைச்சுவை ததும்ப பகிர்ந்துகொண்டார். தெலுங்கு மொழி பதிப்பாளர் கீதா ராமசாமியின் பகிர்வும் குறிப்பிடத் தகுந்தது. கன்னட எழுத்தாளர் விபேக் ஷன்பக்(காச்சர் கோச்சர்), ஆடு ஜீவிதம் எழுத்தாளர் பென்யாமின் போன்றவர்களும் கலந்துகொண்டு தங்கள் நாவல்கள் பிறமொழிகளின் மொழிபெயர்க்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
முதல் நாள் காலையில் நடந்த தொடக்க நிகழ்வில் ஜெயமோகன்(தமிழ்), ஹெச்.சிவப்பிரகாஷ் ( கன்னடம்), சச்சிதானந்தன்்(மலையாளம்), ஓல்கா( தெலுங்கு), விவேக் ஷன்பக்(கன்னடம்) ஆகிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தத்தம் மொழியில் நிகழ்ந்துவரும் இலக்கிய போக்குகளை எடுத்துரைத்தனர். ஜெயமோகன் தமிழில் தலித் எழுத்தாளர்கள் தங்களுடையதை தலித் எழுத்து அல்ல என முன் வைக்கும் போக்கு இருப்பதாகக் கூறினார். இளம் எழுத்தாளர்கள் நுண்மையின் அழகியல் எனப்படும் முறையில் எழுதுவதாகச் சொல்லி சில பெயர்களைக் குறிப்பிட்டார். அதில் குறிப்பிடப்பட்ட சுனில் கிருஷ்ணன், கார்த்திக் பாலசுப்ரமணியன் ஆகியோர் பார்வையாளர்களாக இருந்தனர். ஆசான் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பதை முகக்குறிப்பில் அறிய முடியவில்லை.
தமிழில் பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்ட சிறப்பாக எழுதும் எழுத்தாளர்கள் என அவர் தன்னையும் சேர்த்து சிலரைக் குறிப்பிட்டார். அப்போது மேடையில் இருந்த கன்னட எழுத்தாளர் ஹெச்.சிவப்பிரகாஷ் தன் தாய் மொழி தமிழ் என்று சொல்ல அவையில் சிரிப்பொலி.
விழா மூன்றுநாட்கள் நடைபெற்றது. ஏராளமான இலக்கிய விவாத அரங்குகள். எல்லாவற்றையும் கவனிக்க இயலாதுதான்.
முதல்நாள் நிகழ்வின் மாலையில் பெருமாள் முருகனுடன் எம்.கோபாலகிருஷ்ணன், பாவண்ணன் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. தன் முதல் சிறுகதை கணையாழியில் வெளியானதையும் அதற்கு அசோக மித்ரன் அனுப்பிய அஞ்சல் அட்டையையும் பற்றி பெ.மு. குறிப்பிட்டார். உங்கள் சிறுகதை எனக்குப் பிடித்திருக்கிறது என்று எழுதியவர் பிடித்திருக்கிறது என்ற சொல்லுக்கு மேலாக மிகவும் என்று எழுதி இருந்தாராம். இன்னும் அந்த அஞ்சல் அட்டையை பாதுகாத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.
இரண்டாம் நாள் எம்.கோபாலகிருஷ்ணன், சுனில் கிருஷ்ணன், ஜா.தீபா, கார்த்திக் பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறுகதைகளைப் பற்றி நிகழ்த்திய கலந்துரையாடல் பல்வேறு புதிய சிறுகதைப் போக்குகளை அலசியது. அரங்கில் பார்வையாளர்களாக கவிஞர் சுகுமாரன், பெருமாள் முருகன் உட்பட பல எழுத்தாளர்கள் இருந்தனர். நடிகர் பிரகாஷ்ராஜும் இயக்குநர் வசந்தும் கூட அங்கே கவனித்துக் கொண்டிருந்தனர். ஜா தீபா பேசுகையில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் தமிழில் சினிமாவாக ஆக்கப்பட்டிருக்கின்றன என்பதைச் சொல்லி பாயாசம் சிறுகதை திரைக்கு வந்தது பற்றிக் குறிப்பிட்டார். எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், ஓர் இலக்கிய எழுத்தாளர் சினிமா ஆக்கும் வகையில் படைப்பை எழுதக்கூடாது என்று ஒரே போடாகப் போட்டார். எம்.கோபால கிருஷ்ணன் அத்தோடு அரங்கை முடித்துவிட்டார்.
தமிழ் வாசகர் குரல் என்ற அரங்கில் கவிஞர் மோகனரங்கன், ஜி.நாகராஜன், தங்கமணி, சரவணன் மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதேபோல் தமிழ் தலித் இலக்கிய அரங்கில் ஸ்டாலின் ராஜாங்கம், சுகிர்தராணி, கமாலாலயன் ஆகியோர் உரையாடினர்.
சுரேஷ் பிரதீப், காளிபிரசாத், கயல், ரம்யா , சு.வேணுகோபால், சித்தார்த்தன் சுந்தரம், இடபம் கண்மணி, மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்கள், வாசகர்கள் திரள். தெலுங்கு, கன்னட, மலையாள அமர்வுகள் அங்கங்கே நடந்துகொண்டிருக்க அந்தந்த மொழிகளின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் என தென்னிந்திய இலக்கிய உலகமே திரண்டிருந்தது எனலாம். இந்த விழாவில் பல தமிழ் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தவரான பாவண்ணன் மிகப் பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தார்.
பிந்துமாலினி, பண்டிட் வெங்கடேஷ்குமார் ஆகியோரது இசை நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. ஒவ்வொரு நாளும் காலை எட்டரை மணிக்கு இசை நிகழ்வுடன் தொடங்கின. ஞாயிறு காலை வெங்கடேஷ் குமாரின் இந்துஸ்தானி நிகழ்வில் தனக்கு ஏற்பட்ட நெகிழ்வை சமாளிக்க ஒரு கர்ச்சீப் போதவில்லை என்று உருகினார் இசை ரசிகரான ஓர் எழுத்தாளர்.
அது முடிந்ததும் நடிகர் பிரகாஷ் ராஜ் மேடையேறினார். போரும் சமாதானமும் என்ற தலைப்பில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தேர்ந்தெடுத்த கவிதைகளை வாசித்தார். கவிதைக்கேற்ப தாளமும் குரல் இசையும் ஒலிக்க ஐம்பது நிமிடங்கள் போனதே தெரியவில்லை. பிரகாஷ்ராஜின் மோசமான தமிழ் உச்சரிப்பை அவரது அர்ப்பணிப்புக்காக மன்னித்துவிடலாம்!
ஞாயிறு மாலை ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. தென்னிந்திய மொழிகளின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயமோகனுக்கு அறிவிக்கப்பட்டது. மேடையில் மூத்த எழுத்தாளர்கள் ஹம்பா நாகராஜா, மெல்லேப்புரம் ஜி வெங்கடேஷ், நரஹள்ளி பாலசுப்ரமணியா, , சதிஷ் சப்பாரிகே ஆகியோர் ஜெயமோகனை மேடைக்கு அழைத்து விருதை வழங்கியது பெருமை மிகு நிகழ்வு. கடைசிவரை இந்த விருது யாருக்கு என்று சொல்லாமலே ரகசியம் காத்திருந்தனர்.
இலக்கியம் பேசும் அரங்கில் ஞாயிறு அன்று ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தது இந்த நிகழ்வின் ஆச்சர்யம். இந்த இலக்கிய விழாவின் இயக்குநர் சதீஷ் சபாரிகே, ’இதற்கெல்லாம் காரணம் நீங்கள்தான்’ என்ற ஒரே டயலாக்கை எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் போலிருக்கிறது!