நல்வாழ்வு

மரணத்தின் போது மூளையில் அடிக்கும் மின்னல்! மருத்துவர்கள் ஆச்சரியம்!

Staff Writer

மரணத்தின் போது உடலில் என்ன நடக்கிறது என ஆய்வுகள் உலகெங்கும் நடந்துகொண்டுதான் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூளைச் சாவு ஏற்பட்டு பலர் கோமா நிலைக்குச் சென்றுவிடுவர். அவர்களுக்கு ஆக்சிஜன் எந்திரம் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உயிருடன் வைக்கப்பட்டிருப்பர். ஆனால் பல நாட்கள் கழித்து, அவர்கள் தேறுவதற்கு வாய்ப்பே இல்லாத நிலையில் உறவினர்கள்  அந்த சிகிச்சையை நிறுத்தி அவர்களை நிம்மதியாக இறக்க அனுமதி அளிப்பர். சோகமான நிகழ்வாக இது நடைபெறும்.

இது போல் இறந்த நால்வரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் மருத்துவர்கள் ஆச்சரியகரமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர். மிச்சிகனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த ஆய்வு நடத்தபட்டது. இறப்பவர்களின் உறவினர்கள் அனுமதியுடன், இதயம், மூளைகளின் செயல்பாடுகளைக் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டன. அடுத்ததாக, உயிருடன் வைத்திருக்கும் செயற்கை சுவாசக் கருவிகள் அணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உடனே மூளையில் எந்த இயக்கமும் ஏற்படவில்லை. ஆனால் இறப்பதற்கு 300 நொடிகள் முன்னதாக செயல்படாத நிலையிலிருந்த மூளையில் திடீரென செயல்பாடு ஏற்பட்டது.

மூளையில் நினைவுகளை சேகரிக்கும் பகுதியில் அதாவது ’ஹாட் சோன்’ எனப்படும் பகுதியில் ஏற்பட்ட திடீர் செயல்பாடு, உயிர்வாழ்வதற்காக மூளை மேற்கொள்ளும் கடைசிகட்ட போராட்டமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் மனிதன் கனவுகள் காணும்போது இதேபோன்ற செயல்பாடுதான் மூளையில் ஏற்படுகிறது.

ஆக மனிதன் இறக்கும்போது தான் வாழ்வில் அனுபவித்த இனிமையான நினைவுகளை கனவுபோல் அசைபோடுகிறான். அல்லது அவையெல்லாம் அவன் மனக்கண்ணில் தோன்றுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த விவரங்களை ட்விட்டரில் எழுதி இருக்கும் கேரளாவைச் சேர்ந்த பிரபல கல்லீரல் மருத்துவரரான அபி பிலிப்ஸ் , வாழ்க்கையில் இனிமையான நினைவுகளைச் சேகரியுங்கள் என்கிறார்.

மரணத்தின் போதும் மூளை இனிய நினைவுகளை ஞாபகப் படுத்திக்கொள்ளவே விரும்புகிறது. எனவே நினைவுகளைத் தவிர எதுவும் நிரந்தரமில்லை. போய்  உங்கள் மனைவியை அணைத்துக்கொள்ளுங்கள்; குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுங்கள். செல்ல நாயுடன் நீண்டதூரம் நடை பயணம் செல்லுங்கள் என எழுதி உள்ளார் மருத்துவர் பிலிப்ஸ்.