பல்வேறு பத்திரிகைகளில் சமையல் குறிப்பு இணைப்புகள் எழுதி அறியப்பட்ட சமையல் கலைஞரான ராஜகுமாரி, சிதம்பரத்தில் இருந்து திருமணமாகி சென்னைக்கு வந்தவர். “கூட்டுக்குடும்பமாக இருந்ததால் திருமணத்துக்கு முன்னால் நான் பெரிதாக எதுவும் சமையல் செய்தது கிடையாது. படிப்பு முடித்ததும் எனக்குத் திருமணம் ஆகி சென்னைக்கு வந்துவிட்டோம். அதன் பிறகுதான் முழுநேரமாக சமைக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தடுமாற்றம் தான். சமையல் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து கற்றுக்கொண்டேன். பின்னர் பத்திரிகைகளில் எழுதும் வாய்ப்பு வந்தது. எல்லாம் சமையல்மீது ஏற்பட்ட ஆர்வத்தால் விளைந்தவையே” என்கிறார்.
எப்போதும் சமையலறையை சுத்தமாக வைத்திருப்பதை விரும்புபவர். சமையலுக்கான பொடிகளை தானே இடித்துவைத்துக்கொள்வதையே விரும்புவேன் என்கிறார். “எனக்குப் பிடித்தமானது என்றால் என் பாட்டி செய்யக்கூடிய புளி உப்புமா. அப்புறம் அவங்க செய்யக்கூடிய கடப்பா. இப்போதும் வாரத்துக்கு இரண்டுமுறையாவது வீட்டில் கடப்பா செய்து சைட் டிஷ்ஷாக டிபனுக்குப் பயன்படுத்திவிடுகிறேன். நிறைய பொருட்களைப் பயன்படுத்தி இப்போது நான் செய்யும் கடப்பா, குறைவான பொருட்களைப் பயன்படுத்தி என் அம்மா, பாட்டி செய்தபோது இருந்த ருசிக்கு குறைவாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
என்னுடைய சமையலில் கேரட் கீர், எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்” என்றவரிடம் அதன் செய்முறையைக் கேட்டோம். “ இது ரொம்ப எளிமையானது. கேரட்டை வேகவெச்சிக்கணும். ஊறவைத்த பாதாம்பருப்பையும் கேரட்டையும் மிக்சியில் போட்டு அரைச்சுக்கணும். கேரட்டை வேகவைத்த தண்ணியிலேயே சர்க்கரையைப் போட்டு கொதிக்க விட்டு, அதில் கேரட், பாதாம்பருப்பு விழுதையும் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கணும். ஏலக்காய் போட்டுக்கலாம்.” என்று சொன்ன ராஜகுமாரி, எந்த சமையலிலும் கைப்பக்குவம் என்று எதுவும் தனியாக இல்லை என்கிறார். எதையும் தேவையான அளவு, கூடவோ குறையவோ கூடாது. சரியான அளவு சேர்த்தால் அதுதான் சமையலில் கைப்பக்குவம் என்கிறார். இது அனுபவத்தில் தன்னால் உருவாகிவிடுகிற ஒரு விஷயமே.
‘’சமையல் என்பது பெரிய விஷயம் இல்லை. கொஞ்சம் கவனம் செலுத்தினால் சமாளித்துவிடலாம். என்னதான் வீட்டில் வேலைக்கு ஆள் வைத்திருந்தாலும் நாமே பார்த்து சமைத்துக் கொடுப்பதில்தான் அன்பு வெளிப்படும். இந்த காலத்தில் ஆண்களும் கொஞ்சம் சமையல் கற்றுவைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அவசரத்துக்குக் கைகொடுக்கும்” என்கிறார். அவர் அந்திமழை வாசகர்களுக்குச் சொல்லும் சமையல் குறிப்புகள் இந்தப் பகுதியில் இடம்பெறுகின்றன.
தேவையான பொருட்கள்:
சேமியா 200 கிராம், பழுத்த தக்காளி 2, பச்சை மிளகாய் -2
மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், ஊறவைத்த முழு பச்சைப்பயிறு: 4 டேபிள் ஸ்பூன், உப்பு: தேவைக்கு ஏற்பமஞ்சள் பொடி: ஒரு சிட்டிகை, சமையல் எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன், கடுகு: ஒரு டீஸ்பூன், பெருங்காயம்: ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை: ஒரு கொத்து, முந்திரி: 5, கடலைப் பருப்பு, உளுந்தப்பருப்பு தலா 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை அரிந்தது: 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வெறும் வாணலியில் சேமியாவை வறுத்து அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, க.பருப்பு, உ.பருப்பு, முந்திரி சேர்த்து வறுக்கவும். இதில் ஒரு கப் நீர்விட்டு, பச்சைப்பயறு, உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வறுத்த சேமியா, அரைத்த தக்காளி விழுது சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிடவும். அரைவேக்காடு வெந்ததும், இறக்கி கொழுக்கட்டைபோல் பிடிக்கவும். அதை இட்லி தட்டில் வைத்து ஐந்துநிமிடம் ஆவியில் வேகவிடவும். இதை கொத்தமல்லி அலங்கரித்து பரிமாறவும். குச்சிகளை குத்தி வைத்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
தேவையான பொருட்கள்:
குழைய வேகவைத்த துவரம்பருப்பு&- அரைகப், புளிக்கரைசல்& - ஒரு கப், உப்பு& -தேவையான அளவு, மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை, முருங்கை காய் 2, சின்ன வெங்காயம் 10, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் சிறிதளவு,
வறுத்து அரைக்க: சின்ன மிளகாய் -4, கடலைப் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், தனியா 5 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சிட்டிகை, தேங்காய் துருவல் கால் கப், தாளிக்க: கடுகு- 1 டீஸ்பூன், கருவேப்பிலை 1கொத்து, வரமிளகாய் -1, அலங்கரிக்க: அரிந்த மல்லித் தழை- 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வாயகன்ற பாத்திரத்தில் புளிகரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள் பொடி கலக்கவும். மேலும் அரைகப் தண்ணீர் ஊற்றி, முருங்கைக் காய்களை அரிந்து சேர்த்து கொதிக்கவிடவும். காயகள் பாதி வெந்த நிலையில் வாணலில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்கி இதில் சேர்க்கவும், அதே வாணலில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் நீர்விட்டு நைசாக அரைத்து எடுத்துகொள்ளவும். காயும் வெங்காயமும் வெந்தபின் அரைத்த விழுதைச் சேர்த்து 2,3, கொதி வந்ததும் நன்றாகக் கலக்கி தாளித்து இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
நவம்பர், 2015.