முத்துகணேஷ்
சமையல் அறை

பிள்ளைகளுக்காக சமைக்கிறேன்

என் சமையலறையில்

அருண் சுவாமிநாதன்

இப்போதும் அப்படியே இருக்கிறார் சீதா.  ஆண்பாவம், சங்கர் குரு போன்ற திரைப்படங்கள் வெளியான காலகட்டங்களில் சீதாவைப் போன்ற பெண் தான் மகன்களுக்கு பெண் தேடும் அம்மாக்களின் சாய்ஸாக இருந்தது. அத்தனை ஹோம்லி. ரஜினி, கமல் என தமிழின் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர், பிற்பாடு அஜித், விஜய் என அடுத்த தலைமுறையினருக்கு அம்மாவாகவும் ஒரு ரவுண்ட் வந்தார். நடிப்பை தாண்டி தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் அவருக்கு இருக்கும் திறமையும், நேர்த்தியும் அவர் வீட்டு வரவேற்பறையில் பிரதிபலிக்கிறது. என் சமையலறையில் பகுதிக்காக சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரை சந்தித்ததில் இருந்து...

நடிகை... அதிலும், குறிப்பாக கதாநாயகி என்பதால் அளவாக சாப்பிடுவதில் எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்திருக்குமே? இப்போதும் அப்படித்தானா? என்றதும், “நீங்க

வேற...! சாப்பாடு விஷயத்தில் கட்டுப்பாடெல்லாம் இப்பதான். பிசியா நடிச்சிட்டு இருந்த நேரத்துல, கன்னாபின்னானு சாப்பிட்டு இருக்கேன். சினிமா புரடக்ஷன் சாப்பாடு பத்தி கேட்கவே வேண்டாம். காலையில டிபனுக்கே அஞ்சாறு வகை இருக்கும். மதிய சாப்பாடு வீட்டுல இருந்து வந்தாலும், ஸ்பெஷலா ரெண்டு மூணு அசைவ ஐட்டங்கள் கண்டிப்பா இருக்கணும். அளவெல்லாம் கிடையாது. ஃபுல் கட்டு கட்டுவேன். அப்ப சாப்பிட்டதை இப்ப நெனச்சிப் பார்த்தாலும் மலைப்பா இருக்கு. இந்த ஜீரோ சைஸ் டயட்டெல்லாம் அப்ப கிடையாது. ஹீரோயின்னா கொஞ்சம் குண்டா தான் இருக்கணும்.

நானாவது பரவாயில்ல. நடிகை ஷோபனா மாதிரியெல்லாம் சாப்பிடவே முடியாது. ஆனா அப்படியும் ஸ்லிம்மா உடம்பை மெயின்டெய்ன் செய்யும் ரகசியம் அவங்களுக்குத் தான் தெரியும்” என்றவரிடம், உங்க சமையல் அறையை பார்க்கலாமா என்றதற்கு, “அய்யோ என் சமையலறை, நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இருக்காது. இப்ப சமையலுக்கு ஆள் இருக்கிறதால அது அவங்க வசதிக்கு ஏற்ற மாதிரி அவங்களே பராமரிக்கிறாங்க. கல்யாணம் ஆன புதுசுல நான் தான் சமைப்பேன். அப்ப சமையல் அறையை ரொம்ப ரசனையோட பராமரிச்சு இருக்கேன். சமையலறை முழுக்க கண்ணாடிக் குவளைக்குள்ள சின்ன சின்ன செடிகள் வச்சிருப்பேன். அது பார்க்குறதுக்கு ரொம்பவே புத்துணர்ச்சியா இருக்கும். சமையலறையை முழுவதும் மாற்றும் திட்டம் இருக்கு” என்றவரிடம், இப்ப கிச்சன் பக்கமே போறதில்லையா என்றதும், “அது எப்படி முடியும்? பசங்களுக்காக இப்பவும் சமைக்கிறேன்” என்ற சீதா, பால் கொழுக்கட்டை மற்றும் பால் பணியாரம் செய்வதில் எக்ஸ்பெர்ட்டாம். இப்போதும் இவர் செய்யும் சாம்பார், உருளைக் கிழங்குக்கு வீட்டில் இருக்கும் அனைவரும் விசிறிகளாம்.

சிறுவயதில் கூட்டுக் குடும்பமாக இருந்த அனுபவம் தான் இன்னைக்கு சமையல் செய்வதில் பெரிய உதவியா இருக்கு என்றவர், சென்னை எழும்பூரில் இருந்த சித்ரா தியேட்டர் பின்புறம் தான் தன்  சினிமாவுக்கு முந்தைய நாட்களை கழித்திருக்கிறார். “அது முற்றத்தில் நிறைய தூண்கள் இருக்குற அழகான பெரிய ஓட்டு வீடு. அங்க அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமானு இருபது பேருக்கும் மேல ஒண்ணா வாழ்ந்தோம்.  அப்ப 12 வய”ல கத்துக்கிட்டதுதான் இந்த சமையல். ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்த நாட்கள் அது. ஏன்னா ஞாயிறு வீட்டுல நான்வெஜ். காலையிலேயே ஆப்பம், பாயாவுல ஆரம்பிச்சி... மதியம் நடுவீட்டுல அண்டாவுல பிரியாணியில முடியும் அந்த நாள்” என்று பழைய நினைவுகளில் மூழ்கியவரைப் பூர்வீகம் பற்றிக் கேட்டதும் உற்சாகமானார்.

“ஆந்திராவுல இருக்குற விஜயநகரம் தான் எனக்கு பூர்வீகம். ஆனா அங்க அதிகம் போனதில்ல. சமையலும், மொழியும் தான் ஆந்திராவை இப்பவும் எனக்கு நினைவூட்டுற மிச்சங்கள்.

சிக்கடிக்காய் பொறியலும், உலவல் சாரும் என்னோட ஸ்பெஷாலிட்டி டிஷ். பீன்ஸ்ல ஒரு சின்ன வெரைட்டி கிடைக்கும். அது பேரு தான் ஆந்திராவுல சிக்கடி காய்னு சொல்லுவாங்க. அதுல செய்யுற பொறியல் பிரமாதமா இருக்கும். கொள்ளுல வைக்கிற குழம்புக்கு தான் உலவல் சாருனு பேரு” என்றார்.

சினிமாவுல சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப கட்டுப்பாடான ஆளுனா யாரை சொல்லுவீங்க? என்றதற்கு, “நடிகர் அர்ஜூனை சொல்லலாம். சாப்பாட்டு விஷயத்துல கட்டுப்பாடு மட்டும் இல்ல. அவர் சாப்பிடுற முறையுமே சரியா இருக்கும். மதிய சாப்பாடு அவர் கொஞ்சமா தான் சாப்பிடுவார். அதை வாயில போட்டு நல்லா மென்னு மெதுவா தான் சாப்பிடுவார். அவர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். என்ன அவசரம்னாலும், கவலைப்பட மாட்டார். அவர் சாப்பிடுற ஸ்டைல் இது தான்” என்ற சீதாவுக்கு அதிகம் ஓட்டலுக்கு போய் சாப்பிடும் பழக்கம் இல்லையாம்.

“சின்ன கையேந்தி பவன்ல இருந்து ஸ்டார் ஓட்டல் வரை எது புதுசா தொறந்தாலும் என் பொண்ணு முதல்ல போய் சாப்பிட்டுடுவா. சென்னையில் இருக்குற அத்தனை ஓட்டலும் அவளுக்கு அத்துபடி. எனக்கு சோழா ஓட்டல்ல இருக்குற பெஷாவரி ரெஸ்டாரன்டும், நுங்கம்பாக்கம் தாஜ் ஓட்டல்ல இருக்குற சதர்ன் ஸ்பைஸ் ரெஸ்டாரென்டும் தான் பிடிக்கும். காரணம், பொம்படி ஆலு என்கிற ஆந்திரா மீன் அங்க மட்டும் தான் கிடைக்கும்” என்றார். ஊர் பாசம் லேசுல போகுமா?

***

பன்னீர் பால்ஸ்

தேவையானவை

பன்னீர் - 1 கப், பிரட் துண்டு - 3, உருளைக் கிழங்கு - 1, வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1, கொத்தமல்லி தழை - சிறிதளவு, தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி, ரவை - 1/2 மேசைக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், ஓட்ஸ் - 1 கப்

எண்ணை - தேவையான அளவு

செய்முறை

பன்னீரை நன்கு  துருவிக் கொண்டு பிசையவும்.  உருளைக் கிழங்கை வேகவைத்து பன்னீருடன் சேர்க்கவும். பிரட் துண்டுகளின் ஓரங்களை நறுக்கி தண்ணீரில் நனைத்து அதைப் பிழிந்து பன்னீருடன் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை, தக்காளி சாஸ், ரவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஓட்சை கடாயில் எண்ணை சேர்க்காமல் வறுத்து பொடித்துக் கொள்ளவும். உருட்டி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை ஓட்சில் புரட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவும். எண்ணையில் பொறித்து சாப்பிட விரும்பாதவர்கள் பணியாரக் குழியிலும் இதனை இரண்டு பக்கம் நன்கு பொன்னிறமாக வேகவிட்டு சாப்பிடலாம். இதற்கு கொத்தமல்லி சட்னி ஏற்ற காம்பினேஷன். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிடக்கூடிய சுவையான ஸ்நாக்ஸ். 

அக்டோபர், 2013