சமையல் அறை

சிக்கன் கபாபும் ஈசல் வறுவலும்!

என் சமயலறையில் : மெட்ரோ ப்ரியா

அருண் சுவாமிநாதன்

தூர்தர்ஷனின் இரண்டாம் அலைவரிசையான மெட்ரோ என்ற தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ப்ரியா, அப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதே வேகத்தில் காணாமலும் போனார். 20 வருடங்களுக்கு பின் விஜய் டிவியின் ‘கிச்சன் சூப்பர்ஸ்டார்’ நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இனி சமையலறையிலிருந்து ப்ரியா....

“வக்கனையா சாப்பிடறதுன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. அப்படி சாப்பிட்டு பழகின நாக்கு என்னுடையது. நாங்க பாலக்காடு பிராமண குடும்பத்தை சேர்ந்தவங்க. வீட்டில் எப்போதும் தலை வாழை இலை சாப்பாடு தான் இருக்கும்.

சின்ன வயதில் இருந்தே சுவையான சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டேன். கல்யாணம் வரைக்கும் சமையல் அறை பக்கமே நான் போனதில்லை.

சமைக்க தெரியாது. அப்ப டிவியில காம்பியரிங் செய்ததால, வேலை வீடுன்னு இருந்திட்டேன். கல்யாணத்துக்கு பிறகு தான் சமைக்கவே கத்துகிட்டேன்.

என்னுடையது காதல் திருமணம். அங்க போனபிறகு அவங்களோட உணவுகளை சமைக்க கற்றுக் கொண்டேன். சாம்பார், அவியல், சிக்கன், மட்டன், மீன் என்று எல்லா உணவும் சமைக்க ஆரம்பித்தேன். குழந்தைகள் பிறந்த பிறகு எல்லாமே மாறிப்போச்சு. அவங்க கான்டினென்டல், இத்தாலியன், சாட்டுன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்காக தேடித் தேடி புதுசு புதுசா சமைக்க கற்றுக்கொண்டேன்” என்று சொன்ன பிரியா முதன் முதலில் அவர் வீட்டில் செய்த அசைவ உணவு சிக்கன் கபாபாம்.

“அம்மா வீட்டில் அசைவம் சமைக்க மாட்டாங்க. ஆனா நானும் என் அண்ணணும் வெளியே அசைவம் சாப்பிடுவோம். சித்தார்த் வீட்டில் எல்லோரும் அசைவ பிரியர்கள்.

சிக்கன் கபாப் செய்யலாம்ன்னு முயற்சி செய்தேன். மசாலா எல்லாம் தயாரித்து சிக்கன் மேல் தடவி கபாப் செய்ய ஆரம்பிச்சாச்சு. ஆனா எனக்கு அசைவ உணவை எவ்வளவு நேரம் வேக வைக்கணும்ன்னு தெரியல. கடைசியில சிக்கனும் வேகல, கபாப்பும் செய்யல. எல்லாரும் கபகபனு பசியோட இருந்தது தான் மிச்சம். இந்த சம்பவத்துக்கு பிறகு தான் தீவிரமா சமையல் கத்துக்க ஆரம்பிச்சேன்” என்றவரிடம், பிடித்தமான உணவுகள் மற்றும் உணவகங்கள் பற்றி கேட்டதும், “எனக்கு பெரிய ஓட்டலில் சாப்பிட அவ்வளவா பிடிக்காது. சின்ன ஓட்டல், சாலையோர கடைகளில் சாப்பிட தான் பிடிக்கும். அங்க உணவு சுவையா இருக்கும். பாலக்காடுல இருக்குற நாயர் மெஸ் சுவை பிரமாதமா இருக்கும், கான்டினெண்டல் உணவுகள் என்றால் நுங்கம்பாக்கத்துல இருக்குற ‘டஸ்கானா’ ஓட்டல் பிடிக்கும்.  தாய்லாந்து உணவு வகைகளுக்கு ஆர்ஏ புரத்துல இருக்குற பெஞ்சராங் தான் பெஸ்ட். அப்புறம் வீட்டில் அம்மா செய்யுற பிரியாணிக்கு தனி ருசி உண்டு” என்ற பிரியா, உள்நாடு மட்டுமல்ல வெளிநாட்டு உணவு வகைகளையும் சாப்பிட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“என்னுடைய அண்ணன் சீனாவில் இருந்தபோது ஒருமுறை அங்கு போயிருந்தேன். டிசம்பர் மாதம் என்பதால், கடும் குளிர். மைனஸ் நாலு டிகிரி. எங்கும் பனி. அங்கு சாலையோரக் கடைகள் பிரபலம். அங்க ஒரு வகையான காளான் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப், கொழ கொழன்னு ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல. அவங்க சாப்பாட்டை நம்மால் சாப்பிட முடியாது. எதுவும் வெந்து இருக்காது. அதே போல் ஜப்பான் நாட்டு உணவும் சாப்பிட முடியாது. சென்னையில் தெபான் என்ற ஜப்பான் நாட்டு உணவகம் உள்ளது. சித்தார்த்துக்கு பிடிச்ச உணவகம். அங்கு சூஷி மிகவும் பிரபலம். வியட்நாம் மற்றும் தாய்லாந்து உணவுகள்  சாப்பிட பிடிக்கும். வியட்நாமில் கரும்பில் இறால் மசாலாவை வச்சு சுற்றி கொடுப்பாங்க. சாப்பிடும் போது கரும்பின் ஜுஸ் மற்றும் இறால் மசாலா, இனிப்பு காரம் கலந்து சுவை சூப்பரா இருக்கும். தாய்லாந்து உணவு பிடிக்கும் என்பதால், அங்கு சென்ற போது அவர்களின் மசாலாக்களான சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் கறி பேஸ்ட்களை செய்ய கற்றுக் கொண்டேன்” என்று சொன்ன பிரியா சிறு வயதில் ஈசல் வறுவலை சாப்பிட்டுள்ளாராம்.

“அப்ப எனக்கு ஆறு வயசு, மயிலாப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எங்க வீட்டு ஓனர் வீட்டில் மசாலா போட்டு ஈசல் வறுவல் செய்வாங்க. நல்லா மொறு மொறுன்னு சிப்ஸ் போல சூப்பரா இருக்கும்.  அப்ப விவரம் புரியாத வயசு என்னென்னு தெரியாது, சாப்பிட்டேன். ஆனா இப்ப கொஞ்சம் கஷ்டம் தான். அதே போல பழைய சாதமும் சுண்ட குழம்பும் அவங்க வீட்டில் சாப்பிட கற்றுக் கொண்டேன். இப்பக்கூட வீட்டில் சாதம் மீந்து விட்டால், தண்ணீ ஊற்றி தனியா வச்சிடுவேன்” என்று தெற்றுப்பல் தெரிய சிரிக்கும் பிரியா தற்போது சிறிய அளவில் தன் குடியிருப்பில் உள்ளவர்களுக்கு சமைத்து தருகிறாராம்.

“இங்குள்ளவர்கள் கேட்டால் மட்டும் சமைத்து தருகிறேன். அதிகபட்சமாக பத்து பேருக்கு என்னால் சமைக்க முடியும். பெரிய அளவில் உணவகம் ஆரம்பிக்கும் எண்ணம் இப்போது கிடையாது. ” என்றவர் ஒரு பெரிய உளியை காண்பித்தார்.

“இந்த உளி என் அம்மாவுடையது. வீட்டில் பண்டிகை விசேஷம் என்றால் இதில் தான் பால்பாயாசம் செய்வேன். வெண்கல பாத்திரம் என்பதால், இதில் சமைக்கும் போது மிகவும் சுவையாக இருக்கும். இது அப்பக்குழி. இதுவும் அம்மாவுடைய சீதனம். ஓணம், விஷு நாட்களில் இதில் அப்பம் செய்வோம். இது தவிர மண் சட்டி மற்றம் பீங்கான் பாத்திரங்கள் தான் அதிகம் இருக்கும்.

சமையல் செய்ய நான்ஸ்டிக், பால் மற்றும் சாதம் வைக்க மட்டும் தான் எவர்சில்வர் பாத்திரம் பயன்படுத்துவேன்” என்று சொன்னவர் தன் வீட்டு அலமாரியில் பழங்கால பித்தளை காபி டிகாஷன், கூஜா, செம்படம், தூக்கு... எல்லாம் அடுக்கி வைத்துள்ளார். அம்மா வீட்டு சீதனமாம்.

ஜூன், 2013.