வீட்டின் வாசலில் சிறு சிறு பூந்தொட்டிகள், வரவேற்பறையில் வழிந்தோடும் மெல்லிய இசை என ரம்மியமான சூழல் அங்கே நிலவியது.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆசனம் ஒன்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த யோகா சிகிச்சை நிபுணர் புவனேஸ்வரி சைகையால் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகக் கூற அவரது மகள் ஸ்வர்ணா தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். தண்ணீரின் சுவை அலாதியாக இருந்தது.
‘தண்ணீர் வித்தியாசமான சுவையா இருக்கே’ என்றதும், ‘இதில வெற்றிலை, கிராம்பு, பச்சைக் கற்பூரம் இதெல்லாம் போட்டு கொதிக்க வைச்ச தண்ணீர்தான் குடிப்போம். வர்றவங்களுக்கும் அதைத்தான் கொடுக்குறதுண்டு. எங்க வீட்டுல ஆரோக்கியத்துல ரொம்பவே அக்கறையோட இருப்போம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே புவனேஸ்வரி வந்தமர்ந்தார். அருந்த கஞ்சி வந்தது.
“கஞ்சினா அரிசிக்கஞ்சின்னு நினைச்சிட்டீங்களா? இது சத்துமாவுக் கஞ்சி. கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட தானிய வகைகளைப் போட்டு செஞ்சுருக்கோம். ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை இந்தப் பொருட்களை வாங்கி வந்து லேசா வறுத்து மிஷின்ல கொடுத்து அரைச்சு வைச்சுக்குவோம்.
சத்துமாவுக் கஞ்சியை பெரியவங்களுக்கு உப்பு மோரும், சின்னவங்களுக்கு பாலும், பனங்கல்கண்டும் போட்டுக் கொடுப்போம்.
எங்க வீட்டுல வெள்ளைச் சர்க்கரையே மாசத்துக்கு அரைக்கிலோ அளவுக்குதான் வாங்குவோம். வீட்டுக்கு வர்றவங்களுக்கு டீ போட்டுக் கொடுக்குறதுக் காகத்தான் சர்க்கரை வாங்குவோம். தினமும் இதையே குடிச்சா போரடிக்கும். அதனால ஒருநாளைக்கு ஓட்ஸ் கஞ்சி, ஒரு நாளைக்கு அரிசிக் கஞ்சி, சம்பா கோதுமை ரவை கஞ்சினு மாத்தி மாத்தி
சாப்பிடுவோம். ஆனா காலை நேரத்துல கண்டிப்பா ஏதாவது ஒரு கஞ்சிதான் குடிப்போம். அதுகூட ஆப்பிளோ, கொய்யாவோ, வாழைப்பழமோ ஏதாவது ஒரு பழம் எடுத்துப்போம்.
மத்தியான நேரத்தில கண்டிப்பா ஒரு கீரை இருக்கும். ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு குழம்பு சாப்பிட்டாதான் திருப்தியா இருக்கும். எது இருந்தாலும் இல்லாட்டாலும் தினமும் மோர் வைச்சிருப்போம். நார்ச்சத்துக்காக வாரத்துல ரெண்டு நாள் வாழைத்தண்டு, வாழைப்பூ சேர்த்துப்போம்.
அரிசிச் சோறு வாரத்துல ஒருநாள் ரெண்டு நாள்தான் எடுத்துப்போம். மத்த நாட்கள்ல அரிசிக்கு பதிலா கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி இதை சாதமாக்கி சாப்பிடுவோம். வாரத்துல ஒருநாள் சீட்டிங் டே உண்டு. அதாவது ஞாயிற்றுக் கிழமைகள்ல பிரியாணியோ, பூரியோ, அரிசி சாதமோ எது பிடிக்குமோ அதை செஞ்சு சாப்பிடுவோம்.
நாங்க செக்குல ஆட்டுற கடலை எண்ணைக்கு மாறி ரொம்ப வருஷமாச்சு. கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் பயன்படுத்துறோம்.
இரவுல எப்போதும் ஆவியில வேக வைச்ச உணவுகள்தான். இடியாப்பம், இட்லி, புட்டு அப்டினு விதவிதமா செய்வோம். அதுக்கு தொட்டுக்குறதுக்கும் தக்காளி தொக்கு, தேங்காய்ப் பால், துருவிய தேங்காய், வெல்லம் இப்படி ஏதாவது வெரைட்டியா சேத்துக்குவோம்.
காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. நாள் முழுக்க எண்ணெய, காரம் அது இதுன்னு குடல்பகுதி ரொம்பவே பாதிப்படைய வாய்ப்பிருக்கு. அந்தக் கழிவுகளை வெளியேற்ற வெந்நீர் குடிப்பது நல்லது. சிலர் எலுமிச்சை தேன் கலந்து குடிக்கலாம்னு சொல்வாங்க. ஆனா அசிடிட்டி இருக்கிறவங்க எலுமிச்சை தேன் கலந்து குடிக்கக் கூடாது” என்று உணவு குறித்த புரிதலுடன் பேசுகிறார்.
“வெளிமாநிலங்களுக்குப் போகும்போது தயிர் சாதம், ஊறுகாய்தான் எங்க சாய்ஸ். பிரியாணி, வறுத்தது, பொரித்ததுனு எதுவும் வெளியில சாப்பிடுறத தவிர்த்திருவோம். நானும் என் பொண்ணும் வெளில எங்க போனாலும் பழச்சாறுகள் அதிகம் குடிப்போம். நம்ம ஊர்ல வெயில் அதிகம். அதனாலதான் நம்ம உணவுகள்ல சாம்பார், ரசம், மோர் அப்டினு தண்ணீர் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்குறோம். நான் முழுக்க சைவம்தான். என் பொண்ணு முட்டை மட்டும் சாப்பிடுவாங்க” என்பவரின் மகள் ஸ்வர்ணா ஒரு நடனக் கலைஞரும் கூட.
இப்படி ஒழுங்கான உணவு முறைகளை பின்பற்றுவதால்தான் யோகா, மருத்துவம், டான்ஸ், சேவை என பல்வேறு பணிகளில் திறம்படச் செயல்புரிகிறார் யோகா சிகிச்சை நிபுணர் புவனேஸ்வரி.
காரட், பீன்ஸ் அல்லது சுரைக்காய், கத்தரிக்காய் என ஏதாவது இரண்டு மூன்று காய்கறிகளை எடுத்து நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு கைப்பிடி பாசிப்பருப்பு, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய், சிறிது மஞ்சள், உப்பு, அரை டீஸ்பூன், சாம்பார் பொடி இவற்றை குக்கரில் போட்டு நான்கு விசில் வந்ததும் இறக்கிவிடவும். அதில் அரைமூடி தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்தரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து சேர்த்து இறக்கவும்.
கம்பு - கால்கிலோ, கேழ்வரகு - கால்கிலோ, தினை - கால்கிலோ, சாமை - கால்கிலோ, வரகு - கால்கிலோ, குதிரைவாலி - கால்கிலோ, வேர்க்கடலை - கால்கிலோ, சிகப்பரிசி - கால்கிலோ, கருப்பரிசி - கால்கிலோ, மூங்கிலரிசி - கால்கிலோ, கைக்குத்தல் அரிசி - கால்கிலோ, பார்லி - கால்கிலோ, மக்காச்சோளம் - கால்கிலோ, வெள்ளைச்சோளம் - கால்கிலோ, ஜவ்வரிசி - கால்கிலோ, பொட்டுக்கடலை - கால்கிலோ, ஏலக்காய் - பத்து, பாதாம் - இருபது
இவை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து ஆறியதும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு டம்ளர் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் சத்துமாவைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறி இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
உப்பு, மோர் சேர்த்தும் குடிக்கலாம். வெல்லம், பால், நெய் சேர்த்தும் குடிக்கலாம்.
அக்டோபர், 2017.