சமையல் அறை

என் சமையலறையில் : தாரிணி கிருஷ்ணன்

ஐஸ்கிரீமை சூடு பண்ணி சாப்பிட்டாங்க

மணிதிலக்

முதல் சந்திப்பிலேயே பரிவும் கனிவுமாய் பேசக்கூடியவர். பாரம்பரிய மருத்துவம்,  ஆரோக்கியமான உணவின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பத்து வருடங்களுக்கு மேலாக தொலைக்காட்சிகளில் உணவும், ஆரோக்கியமும் குறித்து நிகழ்ச்சி வழங்கியவரான பிரபல டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணனைச் சந்தித்தோம்.

“நான் பிறந்து வளந்தது எல்லாமே சென்னைதான். இரண்டு வருஷம் மேற்படிப்புக்காக மும்பை போயிருந்தேன். எனக்கு டாக்டராகணும்ங்ற ஆசை. நான் எடுத்த மார்க் பத்தல. அதனால டாக்டர் கோர்ஸ்க்கு சமமான கோர்ஸ் எதுனு தேடி டயட்டீஷியன் படிக்க ஆரம்பிச்சேன்.

நான் கோர்ஸ் படிக்கும்போது சொல்லிக்கொடுக்குற புதுப்புது உணவுகளை ஒவ்வொரு வாரம் சனி, ஞாயிறு செஞ்சு பாப்பேன். எங்க மாமா, அத்தை எல்லாம் சேத்து எங்க குடும்பத்துல மொத்தம் இருபது பேர் இருந்தோம். தனித்தனியா மூணு வீடா இருந்தாலும், சேந்து தான் சாப்பிடுவோம். புதுசா கத்துக்கிட்ட உணவு வகைகளை நிறைய விதவிதமா செஞ்சு பாப்பேன். அப்ப எல்லாம் சென்னா மசாலான்னா பெரிய விஷயம். அத வீட்டுலயே செய்றது பெரிய அதிசயம். ஒரு பரோட்டா தெரியாது. ஃபிரைடு ரைஸ் தெரியாது. நமக்கு தெரிஞ்சது எல்லாம் சாம்பார் சாதம், புளிக்கூட்டு, காய்கறி பொரியல், சேவ இதுதான். நான் படிச்சிட்டு வர்றத இருபது பேருல யாருக்காவது ஒருத்தருக்கு சொல்வேன். வீட்லையே மூணு பேரு டயாபட்டீஸ் இருந்தாங்க. அப்ப நான் படிக்கும் போது, அவங்க செய்றதப் பாத்து நீங்க செய்றதெல்லாம் தப்பு. இப்படி செய்யக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவேன். நான் படிக்கறப்பையே அடிக்கடி இதெல்லாம் சொல்றதுனால வீட்ல எல்லாரும் என்கரேஜ் பண்ணுவாங்க.

நான் முதன்முதலா ஐஸ்கிரீம் செய்யும் போது எங்க கொள்ளுப்பாட்டி அந்த ஐஸ்கிரீமை சூடு பண்ணி சாப்பிட்டாங்க. அந்த அளவுக்கு என்ன எங்க வீட்டுல ஊக்கப்படுத்துனாங்க. எனக்கு 19 வயசு இருக்கும் போது பாட்டியோட அம்மாவுக்கு 90 வயசு. என் பேத்தி ஐஸ்கிரீம் செஞ்சுருக்கா ஆனா என்னால ஜில்லுன்னு சாப்பிட முடியாதேன்னு சொன்னாங்க. நான் போய் சுடவச்சு சாப்பிடுங்கன்னு பேச்சுக்கு சொன்னேன். அவங்க நெஜமாவே சுடவச்சு சாப்பிட்டாங்க.

எனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் என் மாமனார் மாமியார் என்ன பேத்தியாதான் பாக்க ஆரம்பிச்சாங்க. ஏன்னா அப்பவே அவங்களுக்கு 70,80 வயசு இருக்கும். கிட்ட தட்ட 45 வருஷம் இடைவெளி இருந்ததுனால என்ன பேத்தியா பாக்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு டயட்டீசியன்றது புதுசா இருந்துச்சு இருந்தாலும் என்ன ஊக்கப்படுத்துனாங்க. என்னோட மாமியார் நிறைய கைவைத்தியம் தெரிஞ்சு வச்சிருந்தாங்க. அதவந்து என்னோட முறையில் சேத்து பண்ண ஆரம்பிச்சேன். அதை டிவி புரோகிராம்ல நிறைய பயன்படுத்திருக்கேன்.

கைவைத்தியம்னு சொல்றோம், அத வந்து நம்ம தினசரி உணவுல சேத்து எப்படி ஹெல்தியா இருக்குறது அப்படின்னு நிறைய சொல்ல ஆரம்பிச்சேன். எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களுக்கு ரெண்டு வயசுக்குள்ள டயரியா, காய்ச்சல் அது இதுன்னு எவ்வளவோ பிரச்சனை வந்துருக்கும். ஆனா எதுக்கும் டாக்டர்கிட்ட போனதில்ல. எல்லாம் கைவைத்தியத்திலே எங்க மாமியார் சரிபண்ணிருக்காங்க. ஒரு குழந்தைன்னா வாந்தி, வயித்தவலின்னு நிறைய பிரச்சனைகள் வரும். இது எல்லாமே எங்க வீட்டுல கைவைத்தியம் தான். ஒரு தடவ டயரியா மூணு, நாலு நாள் போச்சு. மாதுளம்பழத்தோலை அரைச்சு மஞ்சள் கலந்து கொடுத்தாங்க டயரியா நின்னுடுச்சு. எங்க மாமியாரோட கைவைத்தியம் முறை எனக்கு மிகப்பெரிய வரபிரசாதமா இருந்துச்சு.

நான் நிறைய விதவிதமான சூப்பும், சாலட்டும் செய்வேன். தினமும் ரெண்டு மூணு சூப்பாவது செஞ்சிருவேன். நிறைய காய்கறிகளும் இருக்கிறதால சாலட்டும் செய்வேன். பல இடத்துல பழக பழக நிறைய கத்துக்கிறோம். எங்கவீட்டைப் பொறுத்தவரை ஒரு ப்ளேட்ல கால்வாசி சாதம், கால்வாசி பருப்பு, அரை வாசி காய்கறிகள் அப்டினுதான் இருக்கும். இதுதான் சரியான அளவுனு அமெரிக்கன் டயட்டிகல் அசோஷியேஷன் சொல்லிருக்காங்க. நம்மூர்ல ப்ளேட்ல பாதி காய்கறிகள்னாலே அரண்டுடுறாங்க. எங்க அப்பாலாம் ஒரு படி அரிசிசாதம் சாப்பிடுவாரு. ஏனா விவசாயக் குடும்பம். அதுமட்டுமில்ல எங்க மாமனாரும், அப்பாவும் நடக்குறதுக்கு அஞ்ச மாட்டாங்க. என் மாமனார் இறக்குறதுக்கு ரெண்டுநாளைக்கு முன்னால வரைக்கும் தனியா பஸ் ஏறிப் போயிட்டு வருவாரு. எண்பது வயசுலயும் அந்தளவுக்கு ஆரோக்கியமா இருந்தாரு. பிஸிகல் ஆக்டிவிட்டிக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. வீட்டுல கார் இருந்தாலும் நடந்துதான் போவாங்க.

ஆனா இன்னைக்கு ஒருமணி நேரம் வாக்கிங் போனா ஐயம் எலிஜிபிள் டூ ஈட் எவ்ரிதிங்னு நினைச்சிக்குறாங்க. காலைல வாக்கிங் போயிட்டு வீட்டுல போய் யாரையும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுனு ஹோட்டல்லயே

சாப்பிட்டுப் போறாங்க. ஒருமணி நேரம் வாக்கிங் போனாலும் 200, 300 காலரிதான் எரிக்கமுடியும். ஆனா ஒரு சப்பாத்தியோ, பூரியோ சாப்பிடும்போது அது 500 கலோரியாகுது.

தினமும் காலையில் எழுந்ததும் சாம்பார் கூட்டு, பொரியல், ரசம், சூப், சாலட் எல்லாம் செய்துவிடுவேன்.காலை ஐந்து மணிக்கு எழுந்ததும் 45 நிமிடம் வாக்கிங், அல்லது சைக்கிளிங் போவேன். அடுத்து சமையல். ஸ்லோகம் பாடிக்கிட்டே சமைப்பேன். நல்ல விஷயங்களை மட்டுமே நினைப்பேன். தினமும் காலைல பாட்டுக் கேட்டுக்கொண்டே சமைத்தால் மனம் லேசாகும். காலை 10 மணி, மதியம் 3 மணி, மாலை ஏழு மணி இந்த நேரங்கள்லதான் சாப்பிடுவேன். எவ்வளவு பரபரப்பா இருந்தாலும் நிதானமா செயல்பட்டாலே பல பிரச்சினைகளை சமாளிச்சுடலாம் ” என்று புன்னகைக்கிறார்.

சாலட் : தேவையான பொருட்கள்

மூன்று நிற குடைமிளகாய் 3, பாதாம் 2, கொத்தமல்லி சிறிதளவு, உலர் திராட்சை 6, எலுமிச்சை 1

செய்முறை:

குடைமிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். ஊறவைத்த பாதாம் சிறிது சிறிதாக நறுக்கிப் போடவும். திராட்சை மற்றும் கொத்தமல்லியை தூவி எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.

வெண்பூசணி சூப் : தேவையான பொருட்கள்

வெண்பூசணி - 4 கப், வெங்காயம் 1, பச்சைமிளகாய் 1

செய்முறை:

இவற்றை ஐந்து நிமிடம் வேகவைத்து தண்ணீரை தனியாக எடுத்துவைத்துக் கொண்டு மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொண்டு அதனுடன் எடுத்துவைத்த தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்து உப்பு மிளகு சேர்த்துக் குடிக்கலாம்.

ஜூலை, 2016.