சமையல் அறை

என் சமையலறையில் : கிருஷ்ணவேணி

பூ மாதிரி இட்லி !

மணிதிலக்

நாப்பது வகை தோசை தொடங்கி முப்பது வகை ஸ்வீட் வகைகள் செய்வது வரை  சமையலில் புதுமைகள் செய்பவர் கிருஷ்ணவேணி. ஹோம் சயின்ஸ் படித்த இவருக்கு சிறுவயதில் இருந்தே சமையலில் ஆர்வம். அந்திமழைக்காக சந்தித்ததில்...

“என் வீட்டுக்காரரு ஓய்வுபெற்ற அதிகாரி. பையன் கப்பல்துறைல வேலை செய்றான். பொண்ணு வெளிநாட்டுல இருக்கா. நான் ஹோம் சயின்ஸ் படிக்கும்போதே எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் இருக்கிற சத்துக்கள் என்னென்ன? எவ்வளவு இருக்கு? அப்டினு தெரியும். சமைக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகு எங்கே போய் சாப்பிட்டாலும் அந்த உணவைப் பத்தி சம்பந்தபட்டவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிறதுல பெரிய ஆர்வம். எல்லாரும் சொல்வாங்க, சமைக்கிறதே உனக்கு பொழப்பானு. ஆனா அது அப்படியே பலிச்சிடுச்சு. கடந்த பத்து வருஷமா பல பத்திரிகைகளுக்கு சமையல் செஞ்சு புது ரெசிபிஸ் கொடுத்திட்டிருக்கேன்.

என்னோட கிச்சன்ல பாரம்பரிய உணவுகளுக்குனு ஒரு இடம் இருக்கு. எங்க வீட்டுக்காரருக்கு மாற்றலாகி வேலை விஷயமா பாம்பே போயிருந்தப்போ எதிர் வீட்டுல ஒரு குஜராத்தி இருந்தாங்க. அப்பதான் ஃபுல்கா என்றால் எண்ணெய் ஊத்தாம சுட்டு எடுக்கிறதுனே தெரிஞ்சது. அங்க இருக்கும்போது நிறைய வடமாநில உணவு வகைகள் செய்யக் கத்துக்கிட்டேன்.

எங்க போனாலும் அழகழகான டம்ளர்களா வாங்கி வர்றது வழக்கம். என்னோட இந்த ஆர்வம் தெரிஞ்சு எனக்கு பரிசு தரணும்னு நினைக்கிறவங்க புதுவகை டம்ளர்களா வாங்கி வந்து தருவாங்க. என்னோட பையன் வெளிநாடுகள் போகும்போது ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு நாட்டுல இருந்து அழகழகான பீங்கான் டம்ளர்களாக வாங்கி வருவான். சமீபத்துல ரஷ்யாவுல இருந்து ஒரு கப் வாங்கி வந்தான். என்னோட மருமகன் வாஷிங்டன்ல இருந்து ஒரு கப் வாங்கி அனுப்பினாரு. அதை நான் ஷோகேஸ்ல வைச்சுருக்கேன். கிச்சன்ல பயன்படுத்த மாட்டேன். அழகழகான கப்புகளா சேகரிக்கிறது ஒரு பொழுதுபோக்காவே ஆகிடுச்சு.

நான் நிறைய சமையல்போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கிருக்கேன். ஆல் இந்தியா ரேடியோவுல தொடர்ந்து சமையல் குறிப்புகள் வழங்கியிருக்கேன். இப்பதான் போட்டிகள்ல கலந்துக்கிறதில்லை. மத்தவங்களுக்கும் பரிசு கிடைக்கணும்ங்ற காரணம்தான்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பக்குவம் இருக்கு. செய்முறை இருக்கு. அதையெல்லாம் தெரிஞ்சு புதுசா ட்ரை பண்றது எனக்கு பிடிச்சமான விஷயம். ஆனா எல்லாமே ஒவ்வொருத்தர் கைப்பக்குவம்தான்.

எங்க வீட்டுல வாரத்துல மூணுநாள் இரவில் சப்பாத்திதான். மத்தநாள்ல இட்லி, தோசை. எங்கவீட்டு இட்லி ரொம்ப பூ மாதிரி இருக்கும். ஆறுனாலும் கல் மாதிரி இருக்காது. அதுக்கு காரணம் மாவோட ஜவ்வரிசியும், அவலும் கொஞ்சம் கலந்து அரைக்கிறதுதான். காலையில பெரும்பாலும் சத்துமாவுக் கஞ்சிதான் எல்லாருக்கும்.

இதில் மொத்தம் 18 பொருட்கள் சேர்த்து வறுத்து அரைச்சு வைச்சிருப்பேன். சத்துமாவுல கொஞ்சம் கசகசாவும் சேர்த்து அரைக்கிறதால ரொம்ப மணமா இருக்கும். வயித்துக்கும் ரொம்ப நல்லது. கோதுமை மாவும் வீட்டுல அரைச்சு வைச்சுக்குவேன். கணக்குகோதுமைனு சொல்ற பொன்னிற கோதுமையும், பஞ்சாப் கோதுமையும் சேத்து ஒரு கிலோவுக்கு நூறு சோயா சேத்து அரைப்பேன். சோயாவுலதான் நிறைய புரதம் இருக்கு.

என் சமையலறையில நிறைய பாரம்பரிய பாத்திரங்கள பயன்படுத்துவேன். இப்ப ஈயத்துல வெள்ளீயத்துடன் காரீயமும் கலக்குறாங்க. அதனால உடம்புக்கு கெடுதி. அதனால ஈயப்பாத்திரங்கள்ல இப்ப சமைக்கிறதில்ல.

என்னோட பசங்க சின்னதா இருக்கும்போது ஸ்கூலுக்குப் போறதுக்கு ஒருவாரத்துக்கான மெனு எழுதிவைச்சு அதுபடி சமைச்சுக் கொடுப்பேன். இப்ப 30 வருஷம் ஆச்சு. ஆனாலும் அப்படியே பழகிடுச்சு. இதுனால சமையல்ல எல்லா வகை உணவுப் பொருளும் சேத்துக்க முடியுது. வெரைட்டியாவும் இருக்கும். எல்லா சத்துக்களும் கிடைக்கும். அதனால இப்பவும் அதையே பண்றேன். சமையலுக்குத் தேவை பொறுமைதான்.

என்னைப் பொறுத்தவரை சமையல்ங்றது ஒரு கலை. ஆர்வத்தோட செய்தால் எதுவுமே நன்றாக வரும். குடும்ப ஆரோக்கியம் நம்ம கையில இருக்குங்ற எண்ணம் இருந்தா போதும். மத்தபடி எல்லாமே கைப்பக்குவம்தான்.

கத்தரிக்காய் பால் குழம்பு : தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - கால்கிலோ, பூண்டு - 100 கிராம், பச்சைமிளகாய் - காரத்திற்கேற்றவாறு, பச்சை வேர்க்கடலை - தேவையான அளவு, கொத்தமல்லி - தேவையான அளவு, தேங்காய் - ஒன்று, கடுகு - சிறிதளவு

செய்முறை:

சிறு கத்தரிக்காயை நான்காக பிளந்து அதில் உப்பு தடவி ஊற வைக்கவும். பச்சைமிளகாய், வேர்க்கடலை, கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து கத்தரிக்காய் நடுவில் ஸ்டஃப் செய்யவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து பிரட்டி வைத்த கத்தரிக்காயை அதில் சேர்த்து சிறிதுநேரம் பிரட்டவும். சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் இரண்டாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி கொதித்ததும் கட்டித் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்கவைத்து வெந்ததும் இறக்கவும். தேங்காய்ப்பால் திரியாமல் இருக்க சிறிது அரிசி மாவை கலந்து கொதி வந்ததும் இறக்கவும்.

சிறுதானிய கூழ் தோசை : தேவையான பொருட்கள்

சிறுதானிய மாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, கருவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிதளவு

செய்முறை:

வரகு, சாமை, குதிரைவாலி, திணை ஆகிய தானியங்களை மிஷினில் மாவாக அரைத்து வைத்துக் கொண்டு இதை செய்யலாம். ஒரு கப் மாவு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் மாவை தனியாகக் கரைத்து அடுப்பில் வைத்து கட்டிபடாமல் கிளறி வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும். மீதியுள்ள மாவை தண்ணீரில் கரைத்து வைத்து அதனுடன் வெந்த மாவையும் சேர்த்து கலந்து வைக்கவும். அதில் பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி கருவேப்பிலை பச்சைமிளகாய் இவற்றுடன் உப்பு கலந்து ஐந்துமணி நேரம் இதை புளிக்க வைக்கவும். புளித்ததும் எடுத்து தோசை சுட்டு எடுத்து சூடாக இருக்கும்போதே பரிமாறவும். இந்த தோசைக்கு உளுந்து தேவையில்லை. இதனை வெறும் ராகி மாவில் கூட செய்யலாம்.

பாசிப்பருப்பு கே : தேவையான பொருட்கள்

வறுத்து அரைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், மில்க் பவுடர் - ஒரு கப், பவுடர் சுகர் - ஒன்றரை கப், நெய் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

செய்முறை:

வறுத்து அரைத்து சலித்த பாசிப்பருப்பு மாவுடன், மில்க் பவுடர், பவுடர் சுகர், ஏலக்காய்த்தூள் இவற்றைக் கலந்து வைக்கவும். இதனுடன் சூடாக்கிய நெய்யைக் கிளறி ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் ஃபிரிட்ஜில் வைக்கவும். சில நிமிடம் கழித்து துண்டம் துண்டமாக நறுக்கி பரிமாறவும்.

ஏப்ரல், 2016.