சமையல் அறை

என் சமையலறையில் : இயக்குநர் களஞ்சியம்

விஜி

ஆதியில் மனிதன் உணவுகளை பச்சையாக உண்ணும் முறையைக் கையாண்டான். மாமிசங்களைக் கூட தீயில் வாட்டி​த்தான் சாப்பி​டுவார்கள். ஆனால் இன்று நவீனமயமாக்கல் காரணமாக இயற்கை உணவு முறை அழிந்து, ஆவியில் வேக வைத்து அல்லது  எண்ணையில் சமைத்த உணவைச் சாப்பிட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ள​து” என்று அதிரடியாக ஆரம்பித்தார்  இயக்குநர் களஞ்சிய​ம். ​ தனது முதல் படமான ‘பூமணி’ படத்துக்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது வாங்கியவர் களஞ்சியம். தொடர்ந்து ‘நிலவே முகம் காட்டு’, ’கருங்காலி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். அவரது வீட்டில் சமையலறை இருந்தாலும் சமைத்த உணவுகள் என்று அவர் அதிகம் எடுத்துக்கொள்வது கிடையாது.​

​வீட்டில் இருக்கும்போதும் சரி, ​படப்பிடிப்பு நாட்களிலும்​ சரி​ அவருக்கான இயற்கை உணவை அவரே தயாரித்துக் கொள்கிறார்.  கொட்டை வகைகள், ​ பச்சை​க்​ காய்கறிகள். கீரை வகைகள் என​ எப்போதும் இயற்கை​ உணவாக​வே​ எடுத்துக் கொள்கிறார்.​ “எனக்கு மிகவும் பிடித்த உணவு​,​ புடலங்காய் கூட்டு​” என்றார் நம்மிடம். உணவை உண்பதில் ஒரு அட்வைஸும் செய்தார். “ காலையில்​  ​ உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும். மதியம் உன் நண்பனுடன்​  உணவை​ப்​ பகிர்ந்து உண்ண வேண்டும்.  இரவில் கிடைத்த உணவை நீ உண்ணாமல், ​ எதிரிக்கு​க்​ கொடுக்க வேண்டும்​” ​.  பெரும்பாலும் ​இவர் இரவில் உணவு எடுத்துக் கொள்வதில்லை.  அப்படியே பசித்தாலும் சீசனுக்கு கிடைக்கும் பழங்கள்​தானாம்.

​ “ மனித இனம் தோன்றிய பல காலத்துக்கு ஒரு போதும் மனிதன் வேக வைத்த உணவை உட்கொள்ளவில்லை. பச்சையான காய்கறிகளை சாப்பிடும் போதுதான், மனிதன் எந்த நோய்க்கும் ஆளாகாமால் நீண்ட ​நாள் ஆரோக்கியமாக வாழ முடிந்தது. அக்காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் தற்போது உணவே மனிதனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயிரை​ப்​ பலி​கொள்ளும்​​  வி​ஷ​மாக மாறி​வருவது வேதனையாக உள்ளது. பெரும்பாலும் கொட்டை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது மனிதனுக்கு தேவையான ஊட்டச் சத்துகள் கிடைக்கின்றன்” என்கிற களஞ்சியம் ஒருகாலத்தில் சமைத்த உணவுகளையே  சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்தான். அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்துக்குப் பின்னர் தன் உணவுமுறைகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

“கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட விபத்தினால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.  மருந்துகளை அதிமாக உட்கொண்டதன் காரணமாக உடல் எடை 108 கிலோவாக உயர்ந்துவிட்டது. உடல்நிலை முற்றிலும் குணமான பின் உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவரை அணுகிய போது, அவர் இயற்கை உணவு முறை பற்றி எடுத்துரைத்தார்.. அப்போது அதைப்பற்றி விசாரிக்க திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் பகுதியில் உள்ள இயற்கை உணவு ஆய்வு மையத்தை அணுகி, உணவுமுறையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்து ஆறு வருடங்களாக இயற்கை  உணவுமுறையை பின்பற்றி வருகிறேன். என் உடல் எடை குறைந்ததுடன் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் இயற்கை உணவுகளைப் பற்றிப் பேசிவருகிறேன்.” ஆனால் முழுமையாக எப்போதும் இதையே சாப்பிடுவதை நடைமுறை ரீதியில் பின்பற்றுவதில் சிரமம் இருக்கும் என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார். அவர் செல்லும் இடங்களில் அவரைப்பற்றித்தெரிந்தவர்கள் பெரும்பாலும் இயற்கை உணவுகளை அளிக்கிறார்கள். இல்லாவிட்டால் கிடைப்பதை வைத்து சமாளித்துக் கொள்கிறேன் என்கிற களஞ்சியம், வெகு சில சமயங்களில் மட்டும் சமைத்த உணவை சாப்பிடுவதும் உண்டு.    காலையில் பாசிப்பயிறு. வெந்தயம் ஊற வைத்து அதனுடன் வேர்க்கடலை. மல்லி தழை, முந்தரி பருப்பு ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொள்கிறார். இதனுடன் கொய்யாக்கனி சேர்த்துக் கொள்வது வழக்கம்.                             

சத்தான பழச்சாறு

கேரட் 2 , தேங்காய் அரை மூடி தேவையான அளவு.

செய்முறை:

கேரட்டை சிறிதாக நறுக்கி மிக்சியில் அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்வது. இதே போன்று தேங்காயையும் அரைத்து அரை டம்ளர் பால் எடுத்துக் கொள்வது. பின்னர் இரண்டு சாறையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விட்டு 20 நிமிடம் கழித்துக் குடித்தால் அருமையாக இருக்கும். ரசாயனக் கலவை சாறுகளை தவிர்த்து சத்தான இந்த சாற்றைப் பயன்படுத்தினால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். ஜீரண கோளாறு ஏற்படாது.

புத்துயிர் ஊட்டும் புடலங்காய் கலவை

தேவையான பொருட்கள்

ஒரு முழு புடலங்காய், அரை மூடி தேங்காய், ஒரு பிடி புதினாக்கீரை, ஒரு பிடி மல்லி இலை, ஒரு பிடி கருவேப்பிலை, ஒரு மேஜை கரண்டி சீரகத்துள், ஐந்து சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், மூன்று பேரீச்சம்பழம், மூன்று அத்திப்பழம், கொஞ்சம் உலர் திராட்சை, அரைக் கப் தயிர்.

செய்முறை:

முதலில் புடலங்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய், புதினா கீரை, மல்லி இழை, கருவேப்பிலை, சீரகக்தூள், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் நறுக்கிய உலர்ந்த பழங்களையும் கலந்து கொண்டு அதனுடன் தயிரையும் கலந்து  வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான உணவு தயார்.

டிசம்பர், 2017.