சமையல் அறை

என் சமையலறையில் : அனு

ஒரு லிட்டர் எண்ணெய் ரெண்டு மாசத்துக்கு!

மணிதிலக்

அனு வித்தியாசமான ரெசிபிகளை செய்து பார்த்து வீட்டினரை அசத்துபவர். முகநூலில் நண்பர்களுக்கு ஆர்வத்துடன் பகிர்கிறவர்.  சென்னையில் ஆந்திர வங்கியில் பணிபுரிகிறவருக்கு ஓய்வு நேரம் கிட்டுகையில் சமையலறையை சோதனைக் களம் ஆக்குவார்.  அந்திமழைக்காக பேசுகிறார்:

“நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. இருந்தாலும் நானாதான் சமையல்ல ஒவ்வொண்ணா கத்துக்கிட்டேன். இப்ப விதவிதமா சமைக்கிறேன். நான் செய்ற வாழைப்பூ வடை, பருப்பு அடை என்குடும்பத்தினருக்குப் பிடிக்கும். என் பையன் நாலாம் வகுப்பு படிக்கிறான். காய்கறி, பழங்கள வித்தியாசமான வடிவத்துல வெட்டிக்கொடுக்குறது அவன் விரும்பிச் செய்யும் வேலை.

தினமும் காலைல 4 சப்பாத்தி, கொஞ்சம் காய்கறிகள். மதியம் 2 சப்பாத்தி, ஒரு கப் சாதம், அரை கப் காய்கறி, அரை டம்ளர் மோர். இதுதான் எங்க சமையல். கீரை வாரத்துல 2 முறை சேர்த்துப்போம். காலைல எனர்ஜிக்கு ரெண்டு பாதாம், நைட் நேரத்துல இரத்தத்த சுத்தப்படுத்தவும், ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் அத்தி சாப்பிடுவோம்.

தினமும் சப்பாத்தி சாப்பிட்டாலும் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவிதமான தொக்கு, மசாலா, சாலட் அப்டினு மாத்தி மாத்தி செய்வேன்.  ஒரு நாளைக்கு முளை கட்டுன பயிறு, தக்காளி, வெங்காயம், வெள்ளரி, மிளகு உப்பு தூவி ரெய்தா பண்ணுவேன். ஒருநாளைக்கு  சன்னா மசாலா செய்வேன். சன்னா மசாலா பொடியும் வீட்டுலயே செஞ்சு வைச்சுப்பேன். கடையில வாங்குறதில்ல. வாரத்துல ஒருநாள் காலைல பழங்கள் மட்டும் எடுத்துப்போம். ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பப்பாளி, அன்னாசி எல்லாமே இருக்கும்.

வாரத்துல ரெண்டுநாள் ராகி புட்டு, ராகி தோசை, ராகி கஞ்சி இருக்கும். அதனால வெளில போனா வீட்டுல செய்யாத  உணவுவகைதான் ஆர்டர் பண்ணுவேன். எனக்கு பஞ்சாபி உணவுவகைகள் பிடிக்கும்.

ஒரு நாளைக்கு ரெண்டு ஸ்பூன் எண்ணெய்தான் மொத்தமே யூஸ் பண்ணுவேன். நான் ஸ்டிக் தவா பயன்படுத்துறேன். அதனால எண்ணெய் அதிகம் தேவைப்படாது. எங்க வீட்டுல ஒருலிட்டர் எண்ணெய் ரெண்டு மாசம் வரைக்கும் வரும்னா பாத்துக்கங்களேன். அதுவும் செக்கு எண்ணெய்தான் வாங்குவோம். அப்படியே பயன்படுத்த நல்லெண்ணெயும், சமையலுக்கு கடலை எண்ணையும் அதாவது தாளிக்க, பொரிக்க கடலை எண்ணெயும், இட்லிப்பொடிக்கு நல்லெண்ணெயும் பயன்படுத்துவோம்.

எப்பவுமே அலுமினியம் பாத்திரத்துல சமைக்க மாட்டேன். கீரை கடையறதுக்கு மட்டும் மண்சட்டி வைச்சிருக்கேன். அதுல கடைஞ்சு சாப்பிட்டா இன்னும் ரெண்டுவாய் சாதம் கூட சாப்பிடத் தோணும். அந்தளவுக்கு சுவையா இருக்கும். ஃப்ரிட்ஜ்ல காய்கறிகள அதிகம் வாங்கி வச்சுக்க மாட்டேன். ஏன்னா எந்த பொருளையும் அதிகநாள் வச்சு பயன்படுத்தக் கூடாது. தக்காளியே எப்பவுமே வெளிலதான் வச்சுக்குவேன். அதுபோல வெங்காயம் வெள்ளப்பூண்டு உரிச்சு வைச்சுக்கிறதும் பிடிக்காது. ரெண்டுமே கிருமிகள உள்வாங்கும். அதனால உரிச்சு வச்சா காத்துல இருக்கிற கிருமிகள் வெங்காயம் வெள்ளப்பூடுக்குள்ள போயிரும். அதுமட்டுமில்ல பக்கத்துலயே கடை இருக்கிறதால அப்பப்ப வாங்கிக்குவேன். ஃபிரிட்ஜ்ல மாவு மட்டும் அரைச்சு வைச்சுப்பேன்.

குடைமிளகாய், காலிஃப்ளவர் ரெண்டும் அடிக்கடி சேத்துக்குவேன். ஏன்னா இது கொழுப்பைக் குறைக்கும். நான் சமையல் குறிப்பு எதுனா படிச்சா உடனே அதுல ஏதாவது மாற்றம் பண்ணி புதுசா ஒண்ணக் கண்டுபிடிச்சுடுவேன்.” என்கிற இந்த வங்கி அதிகாரி அந்திமழை வாசகர்களுக்காக தரும் சில சமையல்குறிப்புகள் இங்கே:

அப்பளக் கூட்டு : 

தேவையான பொருட்கள்:

அப்பளம் - 7, கடலைப்பருப்பு - 150 கிராம், உருளைக்கிழங்கு - 5, வெங்காயம் - 1, தக்காளி -1, பச்சை மிளகாய் (அ) காய்ந்தமிளகாய் - 2, மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, கருவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அப்பளத்தைப் பொரித்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, கடலைப்பருப்பு இரண்டையும் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் கடுகு கருவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய், வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் மிளகாய்பொடி சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தை உடைத்துச் சேர்த்து கிளறி இறக்கவும்.

சன்னா மசாலா :

தேவையான பொருட்கள்:

வெள்ளைக் கொண்டைக் கடலை - ஒரு கப், வெங்காயம் - 1, தக்காளி -1, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் , மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன், தனியா பொடி - 2 டீஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் - 2 துண்டு, கருவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயில் சீரகம், இஞ்சி, பூண்டு, தனியா, வெங்காயம், கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும். பின்னர் உப்பு, மஞ்சத்தூள், தக்காளி வதக்கி வேகவைத்த கொண்டைக்கடலையை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதி வந்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து சிம்மில் வைத்து இறக்கும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இது சப்பாத்திக்கு ஏற்ற சைடிஷ்.

பிந்தி ஃபிரை : 

தேவையான பொருட்கள்:

பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, வெங்காயம் -1, தக்காளி -1, பூண்டு - 5 பல், மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன், தனியா பொடி - 2 ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயில் சீரகம் தாளித்து பூண்டை நசுக்கிப் போட்டு வெங்காயம் வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள், தனியா சேர்க்கவும். பின்னர் தக்காளி சேர்க்கவும். வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கரம் மசாலா போட்டு கொதித்ததும் இறக்கவும்.

மார்ச், 2016.