சுதா செல்வகுமார் சென்னை போரூர் அருகே வசிக்கும் சமையல்கலைஞர். சின்ன சமையலறை என்றாலும் அழகாக வைத்திருக்கிறார். சமையலுக்கு உதவும் எல்லாப்பொருட்களையும் தூள் வகையறாக்களையும் டப்பாக்களில் போட்டு அவற்றின் பெயர், காலாவதி ஆகும் நாள் வரை எழுதி வைத்திருக்கிறார்.
“என் சமையலறையில் புதிதாக யார் வந்தாலும்கூட சிரமமின்றி சமைக்கலாம்” என்கிற சுதாவுக்குப் பூர்வீகம் கும்பகோணம். எம்.காம் படித்திருக்கும் இவருக்கு சின்ன வயதிலிருந்தே கைவினைக் கலைகளிலும் ஓவியங்களிலும் நாட்டம் அதிகம்.
“ மாலைக் கல்லூரியில்தான் படித்தேன். எனவே மீதி நேரங்களில் இவற்றைக் கற்றுக்கொண்டேன். தஞ்சாவூர், மதுபானி உள்ளிட்ட பல்வேறு விதமான ஓவியங்கள் போன்ற விஷயங்கள் அவை. திருமணமாகி சென்னைக்கு வந்ததும் சும்மா இருக்காமல் இவற்றைச் சொல்லிக்கொடுக்கலாமே என்று ஆரம்பித்தேன். பல்வேறு ஓவியங்கள், தலையணை கவர், செல்போன் கவர், சோபா குஷன் செய்யப்பயிற்சி, பானை ஓவியங்கள் செய்தல் போன்றவற்றைச் சொல்லித்தருகிறேன்” என்றவர் திருமணமான பின் புத்தகங்களைப் பார்த்துத்தான் விதம்விதமாக சமைக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். “ நான் ஆர்டிஸ்டாக இருக்கிறதால் என்னுடைய கற்பனைத்திறனை சமையலிலும் கொஞ்சம் காண்பிப்பேன். அதுதான் எனக்கு பல போட்டிகளில் பரிசுகளை வாங்கித்தந்திருக்கு. உதாரணத்துக்கு எங்க பாட்டி பலாக்கொட்டை கறி அருமையா செய்வாங்க. நான் அதே கறியை ரெயின்போ பலாக்கொட்டை கறி என்ற பெயரில் பன்னீர், இஞ்சி பூண்டு பேஸ்ட், எல்லாம் போட்டு செய்து, செஃப் தாமு சார் கையால் பரிசு வாங்கினேன். பொதுவா நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களின் ரெசிப்பியை தற்போதைய காலத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றி கூடுதலா சுவை கூட்டி செஞ்சி பாப்பேன். கொழுக்கட்டை, இடியாப்பம் எல்லாவற்றையும் கொஞ்சம் மாத்தி செஞ்சா குழந்தைகளும் ஆர்வமா சாப்பிடுவாங்க. கொழுக்கட்டைக்குள்ள இனிப்பு பூரணம் வைக்கறதுக்குப் பதிலா காளான் மசாலா வெச்சி தயாரிப்பேன். அதைச் சாப்பிட வீட்டில் பெரிய போட்டியே இருக்கும். இப்ப இருக்கும் குழந்தைகளும் கொழுக்கட்டையையை மறக்காம இருப்பாங்க; பிடிக்கலன்னு சொல்லமாட்டாங்க.”
சுதாவின் சமையலைப் பாராட்டுகிறவர்கள் வியந்துபோகும் இன்னொரு விஷயம் அவர் டிஸ்பிளே செய்திருக்கும் விதமும்தான். அழகழகான பாத்திரங்கள் மட்டுமல்ல. அவர் இயல்புக்கு ஏற்ப இயற்கையான பொருட்களையும் பாத்திரங்களாக மாற்றிவிடுவாராம். ஒருமுறை அன்னாசிப்பழக்கேசரி செய்தபோது அன்னாசிப்பழங்களை வாங்கி தோல்சீவி, அவற்றையே கீறி கப் ஆக்கி அதில் வைத்திருக்கிறார். தர்பூசணிப் பழங்களை குடைந்து அவற்றையும் பயன்படுத்துகிறார். இதுபோல புதுப்புது ஐடியாக்களும் சேர்ந்ததுதான் இவரது சமையல்கலை.
குட்டியூண்டு சமையலறை அலமாரி ஒன்றில் இவர் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருள் குட்டியூண்டு அம்மி! அலமாரிக்குள்ளிருந்து அம்மியா என்று ஆச்சரியப்படுவார்கள். இது இடத்தை அடைக்காது. அத்துடன் மின்சாரம் இல்லாத நேரங்களில் சமையலறையில் துணையாய் நிற்கும் என்கிறார் சுதா செல்வக்குமார்!
கோதுமை மாவு- அரை கப், ரவா- கால் கப் , மைதா அரை கப், உருளைக்கிழங்கு -2, மல்லித்தழை, கரம் மசாலா பொடி, உப்பு, மாங்காய்ப்பொடி, சிறிதளவு வெங்காயம், தக்காளி நறுக்கியது., சோள மாவு - ஒரு கப்
இவற்றை உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைய வேண்டும். நல்ல பதமாக பிசைய வேண்டும். சமோசா மொருமொரு என்று இருப்பதற்கு இது முக்கியம். இந்த மாவை முதலில் சப்பாத்தி போல் தேய்த்து வைக்கவும்.இரண்டு பெரிய உருளைகிழங்குகளை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். அதனுடன் கரம் மசாலா, மல்லித்தழை, வெங்காயம், தக்காளி, உப்பு, ஒரு சிட்டிகை மாங்காய்ப் பொடி போன்றவற்றை நன்றாக கலந்து வதக்கி எடுத்து வைத்து கொள்ளவேண்டும். இந்த மசாலாவை சப்பாத்தி மீது பரப்பி குழலாக சுருட்டவும். அதை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு சப்பாத்திக்கு பத்து துண்டாவது வரும். இதை சோளமாவு கரைசலில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சமோசா ரெடி. இதை சாஸ் சேர்த்தும் சாப்பிடலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
முழு சம்பா கோதுமை - ஒரு கப், தேங்காய் அரைமூடி துருவியது, வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், வறுத்த முந்திரி- தேவையான அளவு.
கோதுமையை ஓர் இரவு முழுக்க ஊற வைக்கவேண்டும்.அதை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி, பால் எடுக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும். இரண்டு கப் கோதுமைப்பாலுக்கு ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்க்கவேண்டும். இதற்கிடையில் வெல்லத்தைக் காய்ச்சி பாகு தயார் செய்து ஆற வைக்கவும்.
இந்த பால் கலவையை லேசாக சூடு செய்து, வெல்லப்-பாகுவைச் சேர்க்கவும், இதனுடன் வாசனை மற்றும் சத்துக்-காக ஏலக்காய், ஜாதிக்காய், வறுத்த முந்திரி போன்றவற்றை சேர்த்தால் கோதுமைப்பால் பாயாசம் தயார். இதை குளிர வைத்தும் அருந்தலாம்; அப்படியே சூடாகவும் அருந்தலாம்.
அக்டோபர், 2015.