சினிமா

வரலாறு திரும்புகிறது!

இரா. கௌதமன்

Drama is real life with all the boring parts cut out
- Alfred Hitchcock

நடிகையர் திலகம் படத்தின் மூலமாக பயோபிக் எனப்படும் நிஜ மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கும் வகை படங்களின் மீதான ஆர்வம் திரும்பவும் அதிகரித்திருக்கிறது.

மறைந்த நடிகை சாவித்ரியின் வசீகரமான நடிப்பு இன்றும் பார்வையாளர்களை பிரமிக்க வைக்க கூடியது. ஆந்திராவில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக போற்றப்பட்டு மதுவினாலும் திரைப்பட மற்றும் குடும்ப வாழ்க்கை தோல்வியாலும் சரிந்த சாவித்ரியின் வாழ்க்கை அசாதாரணமான கதை என்பதாலேயே படமாக்க நினைத்ததாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நடிகையர் திலகம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு. கங்கா சந்திரமுகியாகவே மாறிய மாதிரி கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாகவே மாறி விடுகிறார். மறுபுறம் துல்கர் சல்மான் இயல்பான நடிப்பினால் ஜெமினி கணேசனாக உலா வர, கச்சிதமான திரைக்கதையிலும், அந்த கால ஸ்டியோவை கண் முன் கொணர்ந்ததிலும் படம் நிறைவு கொள்கிறது. ஆனால் படத்தில் காட்டியிருப்பது போலவே சாவித்ரியை தேடிச் செல்லும் தெலுங்கு பத்திரிகையாளரின் கோணம் தான் இந்தப் படம். தமிழ்த் திரை உலகில் சாவித்ரியின் சாதனைகளோ, தமிழ்த் திரைப்பட உலகினர் உடனான காட்சிகளோ படத்தில் இல்லை. தமிழ் சாவித்ரியை இனிமேல் தான் யாராவது இங்கிருந்து எடுக்க வேண்டும்.

இதைவிட முக்கியமான சர்ச்சையாக ஜெமினியின் பாத்திரப் படைப்பு ஆகியிருக்கிறது. சாவித்ரிக்கு மது பழக்கத்தை ஜெமினிதான் கற்றுத் தந்தார், ஜெமினிக்கு அவரது அதீத புகழ் மீது பொறாமை இருந்தது என்பது போன்ற காட்சிகள் தவறானவை என ஜெமினியின் மகளான கமலா செல்வராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் சொல்லாமல் விட்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. இயக்குநர் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே காட்ட விரும்பியிருக்கிறார். சாவித்ரியின் பிம்பத்தை குலைக்கும் விதமான இருண்ட பக்கங்களை அவர் படத்தில் சித்தரிக்க விரும்பவில்லை. நடிப்பில் சிவாஜியுடனே போட்டி போட்டவர், தயாள மனம் கொண்டவர் என்று புகழ் பாடுவது தான் உண்மையான வாழ்க்கைப் பதிவா? வழக்கமாக சினிமாவில் நாயகனுக்கு எதிர் கதாபாத்திரம் தேவைப்படும். அந்த வகையில்  சாவித்ரியின் அத்தனை சரிவுகளுக்குமான காரணமாக எதிர் கதாபாத்திரமாக ஜெமினியின் பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறதா?

இதற்கு முன் இந்தியாவில் வெளியான உண்மை மனிதர்களின் கதைகள் எப்படி கையாளப் பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்து விடலாம்.

 வரலாற்று நாயகர்களை படமாக்குவதில் சிறப்பாக அமைந்த படமாக ரிச்சர்ட் அடன்பரோவின் காந்தி (1982) படத்தைச் சொல்லலாம். காந்தியைப் போன்ற மிகப் பெரிய ஆளுமைகளை கையாளும் போது எதைச் சொல்லது, எதை தவிர்ப்பது என்பது மிகப் பெரிய சவால். வரலாற்றுப் படங்களின் காட்சி தரத்தினை முடிவு செய்வது படத்தின் பட்ஜெட். காந்தி படத்தின் காட்சி அமைப்புகள் சிறப்புற அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். இது இந்தியரைப் பற்றிய ஆங்கிலப்படம்.

படத்தின் தொடக்கமே தென்னாப்பிரிக்காவில் ரயிலிலிருந்து காந்தி வெளியே தள்ளப்படும் சம்பவம். அங்கிருந்து இந்தியா வருவது, பெரும் தலைவர்களை காட்சிகளினூடே அறிமுகப் படுத்திக் கொண்டே ஜாலியன் வாலாபாக், உப்பு சத்யாகிரகம் என்று வரிசையாக அடுக்கியிருப்பார். காந்திக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு. உள்ளுக்குள் முகமது அலி ஜின்னாவுடனான கருத்து மோதல்கள் என்று விறு விறுப்பாக செல்லும்.

ஆனால் அம்பேத்கர் பாத்திரமே படத்தில் இல்லை. மாறாக அம்பேத்கர் (2000) படத்தில் சிறு வயதிலிருந்தே அவர் அனுபவிக்கும் தீண்டாமைக் கொடுமை கதையை நகர்த்துகிறது. இரண்டாம் பகுதி முழுவதுமே காந்திக்கும் அம்பேத்கருக்குமான பிரச்னைகளே முக்கியமாக பேசப்பட்டிருக்கிறது. காந்தியின் உண்ணாவிரத போராட்டத்திற்காக அம்பேத்கர் தன்னுடைய கோரிக்கைகள் சிலவற்றை தளர்த்திக் கொள்கிறார். ஆனால் காந்தி படத்தில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கரைப் பற்றி ஒரு காட்சி கூட இல்லை. தவிர்க்கப்பட்டிருக்கிறது... அவ்வளவு தான்.

தமிழில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட  பயோபிக்  கப்பலோட்டிய தமிழன்(1961) படம் எனலாம். கச்சிதமான வரலாற்றுப் பதிவாக இல்லாமல் தமிழ் சினிமாவின் மிகை உணர்ச்சிப் படமாக அமைந்தது மட்டுமே படத்தின் குறை. ஆனால் வ.உ.சியின் கப்பலை மக்கள் கை விட்டது போல படத்தையும் கை விட்டு விட்டார்கள்.

வரலாற்று நாயகர்களை சினிமா பதிவாக்குவதே தன்னுடைய பணி என்பது போல இயக்குநர் ஞான ராஜசேகரன் வந்தார். பாரதி(2000) மிகச் சிறப்பான படம். பாரதியாரின் பாடல்களை படத்தில் அழகாக இணைத்து ஷியாஜி ஷிண்டேவை பாரதியாகவே மாற்றியிருப்பார். ஆனால் பாரதி, பெரியார் (2007), ராமானுஜன்(2014) படங்கள் மிகக் குறைவான பட்ஜெட்டில் உருவானவை. படம் தொடங்குவதற்கு முன்பே இதற்கான வரவேற்பு இவ்வளவு தான் இருக்கும் என்று கணக்கிட்டு கச்சிதமான பட்ஜெட்டில் உருவானவை. அதனால் காட்சி அமைப்புகளில் பட்ஜெட் வறுமை தெரியத்தான் செய்யும். ஆனால் பெரியாரின் பேரைச்சொல்லி ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்யும் கழகங்கள் அவரைப் பற்றி சிறப்பான வரலாற்று பதிவு வேண்டும் என்று பெரிய பட்ஜெட்டில் தரமான படத்தை எடுத்திருக்கலாமே?

காமராஜ்(2004) படம் முக்கியமான வரலாற்றுப் பதிவு. கிங் மேக்கர் காமராஜரின் வாழ்க்கைச் சம்பவங்கள் கவனத்தோடு பதியப்பட்டிருந்தது. 67 தேர்தல் சமயத்தில் ரேஷன் கடைகள் முன்பு கால் கடுக்க நின்ற மக்கள் அடுத்த காட்சியில் வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டு திமுக வை வெற்றி பெற வைத்ததை படத்தில் வைத்ததை விமர்சனமாகவே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் பார்வையிலிருந்து திமுகவின் மீதான கடும் விமர்சனத்தோடுதான் காமராஜ் படம் அமைந்துள்ளது.

சம்பல் கொள்ளைக்காரி என்றழைக்கப்பட்ட பூலான் தேவியின் வாழ்க்கைப் படம் பண்டிட் குயின்(1994), சேகர் கபூர் இயக்கத்தில் வெளியானது. தனி மனிதனின் வாழ்க்கையை எந்த சாய்வுமின்றி அணுகிய படம் இது. உயர் சாதியினரால் கொடுமைப்படுத்தப்பட்டதும், அவர்களை பழி வாங்கியதுமான நடந்த விஷயங்களை சம நிலையோடு சொல்லப்பட்ட சினிமா. இந்த வகையில் வீரப்பனைப் பற்றிய வன யுத்தம் படம் சறுக்கியிருந்தது. அது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. தமிழில் இந்த வகையில் சரியாக எடுக்கப்பட்ட படம் சீவலப்பேரி பாண்டி(1994). ஜீனியர் விகடனில் சௌபா தொடராக எழுதிய இந்த உண்மைக் கதை ராஜேஷ்வர் சிறப்பாக திரைக்கதை அமைக்க பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். சாதிய பிரச்னையை பின்புலமாகக் கொண்ட கதையை நேர்த்தியாக கையாண்டதால் படமும் நன்றாக வந்திருந்தது. பிரச்னைகளும் எழவில்லை. மலையூர் மம்பட்டியான்(1983) மம்பட்டியானின் புகழ் பாடும் சினிமாவானது வருத்தமான விஷயம்.

 நிஜ தனி மனித போராட்டங்களையும், சவால்களையும் படமாக்குவதை மயூரி(1984) படம் தொடங்கி வைத்தது. பரத நாட்டிய கலைஞரான சுதா சந்திரன் விபத்தில் காலை இழந்து பின் ஜெய்ப்பூர் கால் பொருத்தப்பட்டு மீண்டும் நடனமாடி வெற்றி பெற்ற கதையில் அவரையே நடிக்க வைத்திருந்தார்கள். செல்லுலாய்ட்(2013) முதல் மலையாள சினிமாவை உருவாக்கிய தமிழரான ஜே.சி. டேனியலின் கதை. மலையாளத்தில் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் தமிழில் வெளியான சுவடே இல்லாமல் வந்து போனது. தனி மனிதனாக மலையைக் குடைந்து பாதை உருவாக்கிய நிஜ மனிதனின் கதையாக  மாஞ்சி(2015) சிறப்பாக உருவாக்கப் பட்டிருந்தது. சாதாரணர்களின் வாழ்க்கையையும் படமாக்க முடியும் என்று நிரூபித்திருந்தது.

இந்தியில் வெளிவந்த பாக் மில்கா பாக்(2013) படம் விளையாட்டு வீரர்களைப் பற்றிய பயோபிக் படங்களுக்கான சிறப்பான உதாரணம். ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் சில வினாடிகள் வித்தியாசத்தில் மில்கா சிங் பதக்கத்தை இழந்தார். அவர் திரும்பி பார்க்காமல் ஓடியிருந்தால் பதக்கம் கிடைத்திருக்கும் என்று இன்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஏன் திரும்பி பார்த்தார் என்பதற்கு பின்னால் உள்ள கதை தான் படம். நான் லீனியர் முறையில் மூன்று தளங்களில் நகரும் அட்டகாசமான சினிமாவாக வந்திருந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியைப் பற்றிய அன் டோல்ட் ஸ்டோரியும்(2016), குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்(2014) படமும் சுவராஸ்யமாக உருவாக்கப்பட்ட நிஜ மனிதர் படங்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரைப் பற்றிய சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்(2017) படம் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சினின் வாழ்க்கை இந்திய சராசரி குடும்பங்களிலிருந்து விளையாட்டு துறைக்கு வர விரும்புபவர்களுக்கு ஊக்கமளிக்கும் வெற்றிக்கதை. ஆனால் படமாக்கியதில் அவ்வளவு சொதப்பியிருந்தார்கள்.  அதிகம் அறியப்படாத மல்யுத்த வீரர் போகாட் அவருடைய மகள்களை மல்யுத்த வீராங்கனைகளாக்கிய டங்கல்(2016) மற்றுமொரு சிறந்த பயோபிக் படம். அமீர்கான் &திவாரி கூட்டணியின் உழைப்பிற்கு பலனாக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் படம் வசூல் மழை பொழிந்திருக்கிறது.

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் கதைகளை எடுப்பவர்கள் கூட தொழிலதிபர் கதையை எடுக்க முனைய மாட்டார்கள். சுவராஸ்யமாக எடுக்க முடியுமா, மக்களுக்குப் புரியுமா என்ற கேள்விகள் தடுத்து விடும். ஆனால் திருபாய் அம்பானியின் கதையை குரு(2007)வாக சிறப்பான முறையில் கையாண்டிருந்தார் மணிரத்னம். குருவுக்கு முன்பாகவே மும்பையின் வரதராஜ முதலியார் வாழ்க்கையைத் தழுவிய நாயகன்(1987) படத்தையும் எம்ஜிஆர், கலைஞர் அரசியலைத் தழுவிய இருவர்(1997) படத்தையும் வெற்றிகரமாக எடுத்திருந்தார் மணிரத்னம். இந்தியில் பால் தாக்கரே வாழ்க்கையைத் தழுவி சர்க்கார்(2005) படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். ஆனால் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படங்களை பயோபிக் படங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.

தற்போது இந்தியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை ‘ ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் அனுபம் கெர் நடிப்பில் தயாராகி வருகிறது. ‘ பால் தாக்ரே' படத்தில் நவாசுதீன் சித்திக் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னாள் ஆந்திர முதல்வர்கள் என்.டி.ராமாராவ் படமும், ஒய்.எஸ்.ஆர் படமும் தனித்தனியாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் தடகள வீரர் மாரியப்பனின் கதையை தனுஷ் எடுக்க விருக்கிறார். டிராபிக் ராமசாமி படத்தில் இயக்குநர் சந்திரசேகர் நடித்து வருகிறார்.

 எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் பற்றிய பட வேலைகளும் நடந்து வருவதாக செய்திகள் கசிகின்றன. நல்ல ஆரோக்கியமான சினிமாக்களாக அனைத்தும் வரும் என்று நம்புவோம்.

நிஜ கதைகளுக்கான முக்கியமான பிரச்னை படத்திற்கு வரும் எதிர்ப்புகள். உண்மையைச் சொல்லப்போனால் யாராவது ஒரு தரப்பு போராட கிளம்பி வருவார்கள். பட்ஜெட், வசூல் பிரச்னைகளைத் தாண்டி படம் எடுப்பவர்களை அச்சுறுத்தும் விஷயம் இது தான். வரலாற்றை அவரவர்கள் அவர்களுக்கான தரவுகளின் அடிப்படையில் பதிவு செய்வது ஜனநாயகம். எதிர்ப்பவர்கள் சரியான வரலாற்றுப் பதிவுகளே வராமல் போவதற்கு காரணமாகிறார்கள்.

நடிகையர் திலகம் படம் போல நாணயத்தின் ஒரு பக்கமாக மட்டுமே படமாக வரலாம். மற்றொரு பக்கமான ஜெமினி வாழ்க்கை படமாகும்போது நாம் வேறொரு சாவித்ரியைப் பார்க்க நேரலாம்.  

ஜூன், 2018.