தலைவர் 171 போஸ்டர் வெளியீடு 
சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

Staff Writer

ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் அப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் பரிசு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியானது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் 171-வது பட அறிவிப்பை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தை எழுதி இயக்குபவர் லோகேஷ் கனகராஜ். அனிருத் இசை அமைக்கவிருக்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் படத்தின் இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.