குற்றத்தை மறைக்க மனிதனின் நினைவுகளைத் துணைக்கு அழைக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையே மெமரீஸ் திரைப்படம்.
மலைப்பகுதி ஒன்றில் மயக்க நிலையிலிருக்கும் வெங்கி(வெற்றி) சந்தர்ப்ப சூழலால் தான் செய்யாத குற்றத்தை தான் தான் செய்தேன் என ஒப்புக் கொள்கிறார். இதன் பின்னணியில் மெமரி மேப்பிங் செய்யவல்ல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். ஒருகட்டத்தில் நம்மை திட்டமிட்டு கொலை வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என உணரும் வெங்கி அதிலிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒரு மனிதனின் நினைவுகளை அழித்துவிட்டு புதிய நினைவுகளை அவனுக்குள் புகுத்தி வேறு ஒருவனாக 17 மணிநேரம் வரை வைத்திருக்கலாம் என்பதை சற்று குழப்பம் நிறைந்த திரைக்கதையோடு பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்கும் படி திரைக்கதை உருவாக்கியுள்ளனர் இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன்.
படத்தில் சில எதிர்பாராத திருப்பங்களை வைத்து படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்துள்ளனர். இருந்தும் படம் முழுவதும் ஒரு குழப்பமான நிலை சுற்றி சுற்றி வருவதையும் தவிர்க்க முடியவில்லை. சில காட்சிகள் ரிப்பீட்டாக வருகிறது.
நடிகர் வெற்றி இப்படத்திலும் ஒரு வித்தியாசமான திரைக் கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திற்கு ஏற்றவாறு முகபாவனை மற்றும் உடல் மொழியில் வித்தியாசம் காட்டியுள்ளார் வெற்றி. படத்தில் இரண்டு நாயகிகள் டயானா, பார்வதி ஆகியோர். இருவரும் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கின்றனர். சிறிது நேரமே வந்தாலும் ரமேஷ் திலக் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். இவருடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரிஷ் பேரோடி கதையின் கடைசியில் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இவரின் கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு உதவி புரிந்துள்ளது. மற்றும் மனோகர் உட்படப் பலர் அவரவருக்கான வேலையை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
அஜயன் பாலா எளிமையான வசனங்கள் எழுதி கதைக்கு பலம் சேர்த்துள்ளார். அதேபோல், மிகச் சவாலான பணியான படத்தொகுப்பைச் செய்துள்ளார் சான் லோகேஷ். சற்று குழப்பம் நிறைந்த திரைக்கதையை பார்வையாளர்களுக்கு புரியும் படி காட்சிகளைக் கோர்த்துள்ளார். இசையமைப்பாளரான கவாஸ்கர் அவினாஷ், த்ரில்லர் படங்களின் நாடியே பின்னணி இசை என்பதை உணர்ந்து பின்னணி இசை அமைத்துள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்தால் நல்ல அனுபவத்தை தரலாம் மெமரீஸ்.