கார்ப்பரேட் நிறுவன சட்ட ஆலோசகர், விளம்பரமாடல், நாடக நடிகை, இப்படி பல திறமைகளைக் கொண்டவர்தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் இவர் மாதவன் ஜோடியாக நடித்த மாறா ஓடிடியில் வெற்றி பெற்று இவருக்கான வரவேற்பு கூடியிருக்கிறது. அவரிடம் பேசியதிலிருந்து.
‘‘இன்றுநான் தமிழில் பிரபல நடிகைகளின் வரிசையில் இருப்பது நினைத்து பார்த்தால் ஆச்சர் யமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது எல்லாம் இறைவனின் கருணை. எங்கோ பிறந்து, எங்கோ படித்து, எங்கே புகழ் பெற்று இருக்கிறேன்.
நான் பிறந்தது காஷ்மீரில். என் அப்பா இந்திய ராணுவத்தில் தரைப்படை அணி அதிகாரியாக இருந்தவர் என் அம்மா அங்கு ஒரு ஸ்கூல் டீச்சர் ஜம்மு&காஷ்மீரில் முகாமிட்டு இருந்த போது அதன் அருகில் உள்ள உதயப்பூர் என்ற இடத்தில் இருந்த ராணுவ மருத்துவ மனையில் செப்டம்பர் 29ஆம் நாளில் பிறந்தவள் நான்.
எங்கள் குடும்பம் ராணுவ குடும்பம் என்பதால். ராணுவ முகாமில் உள்ள நகரங்களில் மாறிக்கொண்டே இருந்தது என் தந்தைக்கு ஒவ்வொரு முகாமாக மாற்றம் நடந்து கொண்டே இருந்தது. சூரத்கார் (ராஜஸ்தான்) போபால், தர்சுலா (உத்தரகாண்ட்) பெல்காம். அசாம் என்று பல இடங்களில் வாழ்ந்திருக்கிறோம்.
செகந்தராபாத்தில் உள்ள ஆர்.கே.ஸ்கூலில் 12 ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு பெங்களூரு வந்து சட்டம் படித்து வழக்கறிஞரானேன்.
பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்திற்கும்.பிரான்ஸ் கம்பெனி ஒன்றிலும் சட்ட ஆலோசகராக இருந்தேன். அப்படியே மாடலிங் செய்து வந்தேன்.என் தோழியுடன் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தேன்.
சின்ன வயதில் இருந்தே சினிமா கனவு எனக்குள் இருந்தது அதற்கான முயற்சியாக நாடகங்கள் எனக்கு பயன்பட்டன.
2015 இல் வந்த கோகினூர் மலையாள படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டேன் அதில் எனக்கு இரண்டாம் நாயகி வேடம். அதன் பிறகுதான் லூசியா என்ற கன்னடப் படத்தின் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டைரக்டர் பவன்குமார் இயக்கிய யூடர்ன் படத்தில் கதாநாயகி வேடத்தில் நடித்தேன். படம் மிகப்பெரிய வெற்றியுடன் ஃபிலிம்ஃபேர் விருதும் எனக்குக் கிடைத்தது. என்னை திரும்பி பார்க்க வைத்தன.
2017 ல் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை படத்தில் சிறிய வேடம் தான் என்றாலும் உடனே ஓகே சொன்னேன். இந்தியாவே கொண்டாடும் இயக்குநர் மணிரத்னம், ஏ. ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஒரே ஒரு சீன் வந்தாலும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.அதற்காக உடனே ஓகே என்று நடித்தேன்.
அடுத்து ‘இவன் தந்திரன்' விக்ரம் வேதா படங்கள். மாதவன் எனக்கு பிடித்த நடிகர். அவருடன் விக்ரம் வேதாவில் ஜோடி. இந்த இரண்டு படங்களின் வெற்றியும் என் நடிப்பும் பேசப்பட்டது.அடுத்தடுத்து தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் என பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
தமிழ் வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று மாதவன் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார்.
எனக்கு ஹிந்தி, ஆங்கிலம், கன்னடம் நன்றாகப் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன்.
அஜித் மிகப் பெரிய மனிதர்.அவரை போல ஒரு நடிகரைப் பார்க்க முடியாது. அவர் ஷீட்டிங் ஸ்பாட்டில் நுழைந்ததும் பணிபுரியும் பண்ற அனைவருக்கும் குட்மார்னிங் சொல்லி விட்டு தான் அன்றைய வேலையை தொடங்குவார் எல்லாரிடமும் வித்தியாசம் பார்க்காமல் ரொம்ப நட்புணர்வுடன் பழகுவார். இது அவரிடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
என்னை பார்க்கும் நிறையப்பேர் ஒன்றைச் சொல்வார்கள். நான் கொஞ்சம் கீர்த்தி சுரேஷ் சாயலிலும். கொஞ்சம் சிம்ரன் சாயலிலும் இருக்கிறேன். என்கிறார்கள் அதைக் கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இருவருமே பேசப்படும் பெரிய நடிகைகள் தானே. அவர்களைப் போல நானும் பேசப்பட வேண்டும் தான் என்று உழைக்கிறேன்,'' என்று சொல்லும் ஷ்ரத்தாவுக்கு அடுத்து சென்னையில் சொந்த வீடு வாங்கி, இங்கிருந்தே தெலுங்கு. கன்னடம். மலையாளம் இந்தி என சென்று நடித்து வர வேண்டும் என்று ஆசை இருக்கிறதாம்!
பிப்ரவரி, 2021