தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வெளிநாட்டில் படப்பிடிப்பா, கூப்பிடு குட்வில் மோகனை என்கிறார்கள்.
இதுவரைக்கும் 250க்கும் மேற்பட்ட படங்களின் வெளிநாட்டுப் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்துகொடுத்திருக்கும் மோகன், சென்னைக்காரர். அவரிடம் வெளிநாட்டு ஷூட்டிங் பற்றிப் பேசினோம்.
‘‘விமான நிலையத்தில் 90களின் ஆரம்பத்தில் வேலை பார்த்தேன். அப்போது திரைத்துறையினருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. பின்னர் குட்வில் என்ற ட்ராவல் ஏஜென்சியில் பணியாற்றத் தொடங்கியபோது தெலுங்கு திரைக்குழுவினருக்கு விமான டிக்கெட்டுகள் எடுக்க உதவி செய்ததில் எனக்கு நல்ல அறிமுகம் ஏற்பட்டது!
அதன் பிறகுதான் வெளிநாட்டில் ஷூட்டிங் எடுக்க உதவி செய்யற வேலையையும் செய்யலாமேன்னு தோணிச்சு. ஆறு மாத போராட்டத்துக்குப் பின்னால் முதன் முதலாக இயக்குநர் கிருஷ்ணவம்சி இயக்கிய ‘அந்தப்புரம்' பட வாய்ப்பு வந்தது. அதுக்கு மற்றவங்க கொடுத் ததை விட ஏழு லட்சம் ரூபாய் பட்ஜெட் குறைவாய் கொடுத்திருந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்க நீல வண்ண கடலில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் எல்லோருக்கும் பிடித்துப் போய்விட்டது. அந்தப் படத்துக்கு ஜெமினி டி.வி,யும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் அந்தத் தொலைக்காட்சியில் இந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் போட்டுக்காட்டி எல்லோரையும் திரும்பிப்பார்க்க வெச்சிட்டாங்க.
அப்போதான் இன்னொரு படத்துக்கு மலேசியா, தாய்லாந்தில் ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்காங்க. அதை ஏற்பாடு செய்யும் பொறுப்பேற்ற கே.கே.டி.சிவராம் சாருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் என்னைக் கூப்பிட்டு நீ இதைச் செஞ்சிடு என்று சொன்னார். நான் அதுவரை வெளிநாடே போனது இல்லை. இருந்தாலும் கொஞ்சம் தயக்கத்துடன் சரின்னு சொல்லிட்டேன். மலேசியாவில் ஏற்பாடு செய்துவிட்டு, தாய்லாந்தில் தொடர்புகள் பிடித்து அப்படியே பாங்காக் போய் இறங்கினோம். எனக்குச் சின்ன வயதில் ஜேம்ஸ்பாண்ட் நடித்த ‘தி மேன் வித் த கோல்டன் கன்‘ படத்தில் வரும் தீவு பிடித்திருந்தது. அங்கே போகணும்னு விசாரித்தோம். பாங்காக்லேர்ந்து விமானம் ஏறி ஒருமணி நேரம் பயணம். ஒரு கிராமத்தில் இறங்கி அங்கிருந்து கார்ல போகணும்னாங்க. அப்படிப் போய் நாங்க பார்த்த லொகேஷன் புக்கெட். முதன் முதலா புக்கெட் தீவுக்குப் போய் படம் எடுத்தது நாங்கதான்!
அந்தப் படம் முடிந்த கையோடு ஒரு தயாரிப்பாளர் கூப்பிட்டு என்னோட மிருகராஜு படம் சிரஞ்சீவி நடிக்கிறார் அது பண்ணுங்க என்றார். அதில் ஹீரோயின் சிம்ரன். அந்த படம் எடணிண்t ச்ணஞீ tடஞு ஞீச்ணூடுணஞுண்ண் என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்து எடுக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் எடுத்த படம். தயாரிப்பாளர் அதே காடு, அதே படத்தில் நடித்த சிங்கம்தான் வேண்டும்; அதில் நடித்த துணை நடிகர்கள் குழுதான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். ஹாலிவுட் படத்தில் நடித்த சிங்கம் அல்லவா? அது மிகவும் பிஸியாக இருந்தது. ஒருவழியாக அதை ஒப்பந்தம் செய்து கொடுத்து டர்பன் பக்கத்தில் அதே காட்டில் படப்பிடிப்பு நடக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தேன். படப்பிடிப்பில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமும் ஏற்பட்டது. சிரஞ்சீவி ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருப்பார். சிங்கம் வந்து அவர் மீது தாவும். உயரமாக இருப்பதால் தப்பிப்பார். ஒரு குறிப்பிட்ட உயரம் போதும் என்று தீர்மானிக்கப்பட்டு அவர் அமரவைக்கப்பட்டார். சண்டைப்பயிற்சியாளர் கடைசி நேரத்தில், இல்ல.. இல்ல.. இது ஆப்பிரிக்க சிங்கம். அதிக உயரம் தாவும். இப்போ ஒரு டம்மி வெச்சி தாவ விடுவோம் என்று சொல்லி செய்து பார்த்தார்கள். அதேமாதிரி சிங்கம் அந்த டம்மியை அடித்து வீழ்த்தி விட்டது. பிறகு சிரஞ்சீவி இன்னும் அதிகமான உயரத்தில் அமர வைக்கப்பட்டார்.
பின்னர் நிறையப் படங்கள். அப்போதெல்லாம் வெளிநாடு போனால் பஸ்ஸில் பயணம் செய்து சாலையிலேயே படப்பிடிப்பு எடுத்துகொண்டு வருவார்கள். பேருந்து நிலையத்தில் நடனம் ஆடவா அவ்வளவு தூரம் போகவேண்டும்? அதை மாற்றி நாடுகளுக்குள் இருக்கும் சிறப்பான இடங்களுக்குக் கூட்டிப்போய் படம் எடுக்க வைப்பதில் நான் கவனமாக இருந்தேன். ஐரோப்பாவில் ஆஸ்திரியாவுக்கு முதல் முதலில் நான் தான் கூப்பிட்டுப்போனேன்... அங்கு மட்டும் இதுவரை 45 படங்களுக்குப் படப்பிடிப்பு ஏற்பாடு செய்துள்ளேன்.
தமிழில் பிரசாந்த் நடித்த அப்பு, குட்லக், விஜய் நடித்த திருப்பாச்சி போன்ற படங்களுக்கு வேலை பார்த்திருக்கிறேன். தமிழ்ப் படங்களில் குறிப்பாக அஜீத் படங்களில் பணியாற்ற விருப்பம் உள்ளது.
என் பார்வையில் சினிமா படப்பிடிப்புக்கு சிறந்த 5 இடங்கள்:
1 டிரோல், ஆஸ்திரியா
2 டர்பன் அருகே உள்ள காடுகள், தென் ஆப்பிரிக்கா
3 கோல்ட் கோஸ்ட் , ஆஸ்திரேலியா
4 புக்கெட் , தாய்லாந்து
5 குயீன்ஸ்டவுன், நியூசிலாந்து
நான் இதுவரை படப்பிடிப்புக்குக் கூட்டிச் செல்லாத ஒரு இடம் அலாஸ்கா. நல்ல இடம். இதுவரை அங்கே படப்பிடிப்பு நடத்தும் வாய்ப்பு உருவாகவில்லை,'' என்கிறார் மோகன்.
மே, 2018.