சினிமா

நட்சத்திர பட்டாளம்!

கருந்தேள் ராஜேஷ்

மாஸ்டர்‘ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றியும் பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது.

விஜய் சேதுபதி ஏற்கெனவே பேட்ட, இறைவி போன்ற படங்களில் ரஜினி, எஸ்.ஜே. சூர்யா முதலியவர்களுடன் நடித்திருந்தாலும், பேட்டையை விடவும் மாஸ்டரில் விஜய் சேதுபதியின் வேடத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. மாஸ்டர் படமே விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தின் மீதுதான் துவங்குகிறது. இதனாலேயே படத்தில் பவானியின் கதாபாத்திரத்தின் மீது இயல்பாகவே படம் பார்க்கும் நமக்கு ஒரு கவனம் வருகிறது. இது படம் முழுக்கவே தொடரவும் செய்கிறது. அவசியம் மாஸ்டர் படம் விஜய் சேதுபதிக்கு ஒரு பெரிய வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். அவரே சொன்னதுபோல, ‘ஜே.டிக்கு பவானி வில்லன் என்றால் பவானிக்கு ஜே.டிதான் வில்லன்; எனவே இந்தக் கதையில் பவானியும் ஹீரோதான்‘ என்பதே உண்மை. அந்த வகையில், இரண்டு பெரும் ஸ்டார்கள் நடித்திருக்கும் படத்தில் வில்லனுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவதில் தனி ஒருவனைப்போலவே மாஸ்டரும் அமைந்திருக்கிறது.

இந்தியத் திரைப்படத்துறையை எடுத்துக்கொண்டால், இதுவரை இந்தியிலும் மலையாளத்திலுமே மிக அதிகமான ‘மல்டி ஸ்டாரர்‘ படங்கள் வந்திருக்கின்றன. ஒரே படத்தில் நிறைய ஸ்டார்கள் நடிக்கும் படங்களே இவை. தமிழில் இவை அளவு பல ஸ்டார்கள் நடித்த படங்கள் இல்லை என்றாலும், ஓரளவு சொல்லக்கூடிய படங்கள் உண்டு. இத்தகைய மல்ட்டி ஸ்டாரர் படங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழில் எனக்குத் தெரிந்தவரை, தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார்களான எம்.கே. தியாகராஜ பாகவதரும் பி.யு. சின்னப்பாவும் இணைந்து நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால், எம்.கே.டி மற்றும் பி.யு.சியின் படங்களில் பல ஸ்டார்கள் நடித்ததுண்டு. எம்.கே.டியின் ராஜமுக்தி படத்தில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார் (பெரிய நடிகராக அறியப்படும் முன்னர்). ஏ. சகுந்தலா, டி.எஸ். பாலையா, காளி என். ரத்னம், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், டி.ஆர். ராஜகுமாரி, கண்ணாம்பா, டி.ஆர். ராமச்சந்திரன், எஸ். வரலட்சுமி ஆகியவர்கள் தொடர்ந்து பி.யு. சின்னப்பா மற்றும் எம்.கே. தியாகராஜ பாகவதரின் படங்களில் நடித்தே வந்திருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு நடிகர்களின் படங்களை அவசியம் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்று சொல்லலாம்.

இவர்களின் காலத்திலேயே 1948ல் வெளியான ஜெமினி ஸ்டூடியோஸ் எடுத்த ‘சந்திரலேகா‘ பிரம்மாண்டமான மல்ட்டி ஸ்டாரர் படமாக இருந்தது. ரஞ்சன், எம்.கே ராதா, டி.ஆர். ராஜகுமாரி மட்டுமல்லாமல் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், எம்.எஸ். சுந்தரிபாய் ஆகியோர்களும் நடித்த மெகா பட்ஜெட் படம். இந்தியிலும், பிந்நாட்களில் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலுமே வந்த படம். தமிழின் குறிப்பிடத்தகுந்த படங்களில் ஒன்று.

இவர்களுக்குப் பின்னர் மிகப்பெரிய ஸ்டார்களாக மாறிய சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும், ‘கூண்டுக்கிளி‘ என்ற ஒரே படத்தில் இணைந்து நடித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் படம் சரியாகப் போகாததையும் படித்திருப்பீர்கள். எப்படி எம்.கே.டி மற்றும் பி.யு.சி படங்களில் பல நடிகர்கள் நடித்தனரோ, அதேபோல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களிலும் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால் அவர்களில் பலரும் குணச்சித்திர நடிகர்களே. ஜெமினி கணேசன், சிவகுமார், எம்.ஆர் ராதா, எஸ்.எஸ். ராஜேந்திரன் போன்ற மிகச்சில ஹீரோ நடிகர்களே சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் அதேசமயம், மாடர்ன் தியேட்டர்ஸ் தொடர்ந்து எடுத்த துப்பறியும் படங்களில் பல நடிகர்கள் இணைந்து அவற்றை மல்ட்டி ஸ்டாரர் படங்களாக மாற்றியிருக்கின்றனர். ஜெய்சங்கர், அசோகன், ஆர்.எஸ். மனோகர், ரவிச்சந்திரன், தேங்காய் சீனிவாசன் போன்ற ஸ்டார்கள் தொடர்ந்து நடித்தனர்.

இதே காலகட்டத்தில் இயக்குநர் ஸ்ரீதர் சில மல்ட்டி ஸ்டாரர் படங்களை எடுத்திருக்கிறார். அவரது தேநிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் மல்ட்டி ஸ்டாரர் படங்களே. ஸ்ரீதரைத் தொடர்ந்து சித்ராலயா கோபு இயக்கிய சில படங்கள் இப்படி அமைந்தன. காசேதான் கடவுளடாவை மறக்க முடியுமா? பின்னர் சி.வி. ராஜேந்திரனும் இப்படி மல்ட்டி ஸ்டாரர் படங்களை எடுத்தார்.

தமிழகத்தின் திரை ரசிகர்களுக்கு இப்போது தோன்றும் பல மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எழுபதுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்டவையே. குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாஸன் நடித்தவை. ‘அபூர்வ ராகங்கள்‘ (ரஜினி கௌரவ வேடம்) படத்தில் துவங்கி, ‘அந்துலேனி கதா‘ (கமல் கௌரவ வேடம் – அவள் ஒரு தொடர்கதையின் தெலுங்கு ரீமேக்), ‘மூன்று முடிச்சு‘, ‘அவர்கள், ‘16 வயதினிலே‘, ‘ஆடுபுலி ஆட்டம்‘, ‘இளமை ஊஞ்சலாடுகிறது‘, ‘தப்புத்தாளங்கள்‘ (கமல் கௌரவ வேடம்), ‘அவள் அப்படித்தான்‘, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்‘, ‘நினைத்தாலே இனிக்கும்‘, ‘தாயில்லாமல் நானில்லை‘ (ரஜினி கௌரவ வேடம்), ‘தில்லுமுல்லு‘ (கமல் கௌரவ வேடம்) ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தனர். இதன்பின் இந்தியில் அமிதாப் பச்சனுடன் ‘கிரஃப்தார்‘ படம். ஆனால் அதில் இருவருக்கும் ஒரே காட்சி அமையவில்லை. தனித்தனியே நடித்திருந்தனர். இந்தப் படங்கள் பலவும் வெற்றிப் படங்களே. இவற்றின் பின்னர் இருவரும் பிரிந்து நடிக்கத் துவங்கினர்.

எண்பதுகளில் கார்த்திக், பிரபு, சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். ‘சின்னத்தம்பி பெரியத்தம்பி‘, ‘அக்னி நட்சத்திரம்‘ ஆகியவை உதாரணங்கள். மணி ரத்னத்தின் பெரும்பாலான படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிப்பதே வழக்கம். அவரது முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு‘ ஒரு உதாரணம். அதில் முரளி, சத்யராஜ், ரேவதி, சரத்பாபு ராதிகா, நிழல்கள் ரவி முதலியோர் நடித்திருந்தனர். பின்னால் நாயகனில் வேலு நாயக்கரின் வேடத்துக்கு இப்படத்தில் சத்யராஜின் வேடமே காரணம். ‘இதயக்கோயில்‘ படத்தில் மோகன், ராதா, அம்பிகா, ‘மௌன ராகம்‘ படத்தில் மோகன், கார்த்திக், ரேவதி, ‘அக்னி நட்சத்திரம்‘ படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ‘அஞ்சலி‘யில் ரேவதி, ரகுவரன், பிரபு, ‘தளபதி‘ படத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, ஜெய்சங்கர், ஷோபனா, ஸ்ரீவித்யா, அர்விந்த் சுவாமி, கீதா, பானுப்ரியா, ‘திருடா திருடா‘வில் பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், சலீம் கௌஸ், ;இருவர்‘ படத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, தபு, கௌதமி, நாசர், ‘ஆய்த எழுத்து‘ படத்தில் மாதவன், சூர்யா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோல், ‘ராவணன்‘ படத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா ராய், ப்ருத்விராஜ் சுகுமாறன், ‘கடல்‘ படத்தில் கௌதம் கார்த்திக், துளசி, அர்ஜுன், அர்விந்த் சுவாமி, லக்‌ஷ்மி மன்ச்சு, ‘ஓகே கண்மணி‘யில் துல்கர் சல்மான், நித்யா, பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், ‘செக்கச்சிவந்த வானம்‘ படத்தில் அர்விந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ஹைதாரி, ஜெயசுதா என்று, இப்போது ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் இருப்பதிலேயே அதிகமான ஸ்டார்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் (பட்டியல் எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. எடிட்டரின் கவனத்துக்கு). தமிழில் தொடர்ச்சியாக, பல வருடங்களாக இத்தனை ஸ்டார்களை வைத்து இயக்கிக் கொண்டே இருப்பவர் மணி ரத்னமாகத்தான் இருக்கமுடியும்.

சிவாஜி கணேசனை மறுபடியும் எடுத்துக்கொண்டால், அவரது இறுதிக் காலகட்டத்தில் அவரைப் பல நடிகர்களும் தங்களுடன் நடிக்க வைத்து, அவரை மல்ட்டி ஸ்டாரர் படங்களில் உபயோகித்துக்கொண்டனர். படையப்பா இதற்கு ஒரு உதாரணம். ஒன்ஸ்மோர் படமும். தேவர் மகனைக் கூட இப்படிச் சொல்லலாம் என்றாலும், அதில் அவரது நடிப்பு அபாரமாக அமைந்துவிட்டது. எண்பதுகளிலும் இப்படி சில மல்ட்டி ஸ்டாரர் படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். ‘சந்திப்பு‘ அப்படி ஒரு படம்தான். இந்தியில் வெளியான நசீப் படத்தின் ரீமேக். இயக்கியவர், நாம் மேலே பார்த்த அதே சி.வி. ராஜேந்திரன். அதேபோல் பாலாஜி தயாரித்து கே.விஜயன் இயக்கிய ‘விடுதலை‘. இது இந்தியில் வெளியாகி நாடெங்கும் சூப்பர்ஹிட்டான ‘குர்பானி‘ படத்தின் ரீமேக். இந்தியில் அம்ஜத்கான் நடித்த இன்ஸ்பெக்டர் கான் வேடத்தில், இன்ஸ்பெக்டர் ராஜசிங்கமாக சிவாஜி நடித்தார். இவருடன் ரஜினிகாந்த், விஷ்ணுவர்த்தன் மற்றும் விஜயகுமார் நடித்தனர். சிவாஜி நடித்ததிலேயே அபத்தமாக அமைந்த வேடமாக இதைச் சொல்லலாம்.

இவற்றைத்தவிர, தமிழில் இன்னும் சில மல்ட்டி ஸ்டாரர் படங்கள் உண்டு. விசு எடுத்த எல்லா படங்களுமே மல்ட்டி ஸ்டாரர் படங்கள்தான். வி. சேகர் எடுத்த படங்களும் அப்படியே. வசந்த்தும் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எடுத்திருக்கிறார். மணி வண்ணனும். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய ‘ஊமை விழிகள்‘, செந்தூரப்பூவே‘, இணைந்த கைகள்‘ ஆகியவையும் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் மட்டுமல்லாமல், தமிழில் பெருவெற்றி அடைந்து வசூல் சாதனைகள் பல செய்தவை. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ‘மைக்கேல் மதன காம ராஜன்‘ ஒரு மிகப்பெரிய மல்ட்டி ஸ்டாரர் படம் (அதில் கமலே பல ஸ்டார்களாக நடித்தபோதிலும். அப்படியே தசாவதாரம். அத்தனை வேடங்களிலும் கமலே நடித்தார். இது எந்த வகையில் வரும்?). அதே சிங்கீதம் சீனிவாசராவ் முன்னர் எடுத்த அபூர்வ சகோதரர்களும் ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம்.

இதே வரிசையில்தான் கார்த்திக் சுப்பராஜின் ‘இறைவி‘, ‘பேட்ட‘ முதலிய படங்களும், நலன் குமரசாமியின் ‘சூது கவ்வும்‘ படமும், லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்‘, ‘மாஸ்டர்‘ ஆகிய படங்களும் வரும்.

சமீபத்தில் வந்த விக்ரம் வேதா, தனி ஒருவன் ஆகியவை புதிய மல்ட்டி ஸ்டாரர் படங்களுக்கு உதாரணங்கள். அதேபோல், தற்போதைய சூப்பர் ஸ்டார்களான அஜீத், விஜய் ஆகியவர்களில் யாரெல்லாம் மல்ட்டி ஸ்டாரர் படங்களில் நடித்திருக்கிறார்கள் என்று கவனித்தால், அஜீத்தே அதிகமான படங்கள் செய்திருக்கிறார். பாசமலர்கள், ராஜாவின் பார்வையில், கல்லூரி வாசல், உல்லாசம், பகைவன், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் அர்விந்த் சுவாமி, விஜய், பிரசாந்த், விக்ரம், சத்யராஜ், கார்த்திக், அருண் விஜய் ஆகிய நாயகர்களுடனும், தீனாவில் சுரேஷ்கோபியுடனும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மம்மூட்டி, அப்பாஸ், தபு, ஐஸ்வர்யா ராய் ஆகியோருடனும், அசோகா இந்திப் படத்தில் ஷா ருக் கானுக்கு வில்லனாகவும் நடித்திருக்கிறார். மங்காத்தாவில் ஏராளமான நடிகர்களுடன் நடித்தார்.

இதேபோல் மலையாளம், இந்தி ஆகிய படங்கள் பக்கம் செல்லவேண்டும் என்றால் இன்னும் இதேபோல் இரண்டு கட்டுரைகள் தேவைப்படும்., தமிழிலேயே இவ்வளவு மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்றால், மல்ட்டி ஸ்டாரர் படங்களே பெரும்பாலும் எடுக்கப்படும் இந்தியிலும் மலையாளத்திலும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். மம்மூட்டியும் மோகன்லாலும் பல படங்களில் இணைந்திருக்கின்றனர். அமிதாப் பச்சன், சசி கபூர், ரிஷி கபூர், வினோத் கன்னா, ரஜினிகாந்த், கமல்ஹாஸன் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அமீர் கான், ஷா ருக் கான், சல்மான் கான் ஆகியோரும் இப்படிப் பல படங்கள் செய்திருக்கின்றனர். ஹம் ஆப் கே ஹைன் கோன் படம் தமிழகத்திலேயே பிய்த்துக்கொண்டு ஓடியதே?

எப்போதுமே மல்ட்டி ஸ்டாரர் படங்கள் என்றால் மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர் வெளியாகும்போது பாருங்கள் – அது எவ்வளவு கவனம் பெறப்போகிறது என்று. மல்ட்டி ஸ்டாரர் படங்கள் எடுப்பது அவசியம் ஒரு தனிக்கலையே என்று யோசித்தால் தோன்றுகிறது. துவக்க காலத்தில் ஸ்டார்களுக்குள் பெரிய ஈகோ பிரச்னைகள் வந்ததில்லை. ஆனால் போகப்போக ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் உருவாகி, அவர்களை ஒருங்கிணைப்பது பிரச்னையாக மாறிய காலகட்டத்தில், இப்படி மல்ட்டி ஸ்டாரர் படங்கள், பெரிய இயக்குநர்களாலேயே எடுக்க முடிந்தது. இதனால் தமிழில் மல்ட்டி ஸ்டாரர் படங்கள் குறைவு. ஆனால் ஈகோ குறைவாக இருக்கும் இந்தி, மலையாளம் ஆகிய இடங்களில் அதிகமாக இப்போதும் பல நடிகர்கள் இணைந்தே நடிக்கிறார்கள். படங்களும் நன்றாகவே ஓடுகின்றன. ரஜினி கமல் இணைந்து மறுபடியும் நடிக்கிறார்கள் என்ற வதந்தி கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் எழுகிறது. அதேசமயம் இப்படி இரண்டு ஸ்டார்கள் இணைந்தால், படத்தின் பட்ஜெட் உட்பட விற்பனை வரை பல அம்சங்களும் பாதிக்கவும் படுகின்றன. இதையெல்லாம் தாண்டிதான் தமிழில் இப்படிப் படங்கள் எடுக்க யோசிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.

பிப்ரவரி, 2021