சினிமா

தோல்விப் பாடங்கள்

இரா. கௌதமன்

எல்லோருமே வெற்றிப் படங்களை கொடுக்கவே நினைக்கிறோம்.ஆனால் சமயங்களில் அது தவறி தோல்விப் படமாகிறது. வெற்றிப் படத்திற்கான பார்முலாவை எந்த சினிமா விஞ்ஞானியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை’- இது அடிக்கடி நம் சினிமா பிரபலங்கள் உதிர்க்கும் வசனங்கள். உண்மைதான். யாரும் தோல்வியடைய விரும்பி உழைப்பதில்லை.ஆனால் தோல்விகள் தவிர்க்க முடியாதவை. வெற்றிகளை திரும்ப திரும்ப அசை போடவும் தோல்விகளை மறக்கவுமே நாம் அனைவரும் விரும்புகிறோம்.ஆனால் தோல்விகள் மறக்ககூடிய அளவிற்கு மோசமானவையா?

சில நல்ல படங்கள் காரணமேயில்லாமல் தோற்றும் இருக்கின்றன. இன்று வரை நாம் பேசிக் கொண்டிருக்கும் ‘அவள் அப்படித்தான்’ பட இயக்குநர் ருத்ரைய்யாவின் இரண்டாவது படம் கிராமத்து அத்தியாயம் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் போய்விட்டது.அதன் பிறகு அவர் எடுத்த சினிமா முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

இந்தப் படம் தேறவே தேறாது என்று விநியோகஸ்தர்களும், சினிமா பிரபலங்களும் பிரிவியூவில் சொன்ன படங்கள் தாறுமாறாக ஓடியுமிருக்கின்றன. சிறந்த உதாரணம் சேது. பிரிவியூவிலேயே நூறு நாட்கள் ஓடிய படம். படத்தை வாங்க யாருமே முன்வரவில்லை. ஒருவழியாக கஷ்டப்பட்டு படத்தை ரிலீஸ் செய்தார்கள். அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கியது சேது. இதே கதைதான் தங்கர் பச்சானின் அழகிக்கும். படத்தின் முதல் பிரதியை பார்த்த தயாரிப்பாளர் என்னோட பணமெல்லாம் போச்சே என்று தங்கரை அடிக்காத குறை. சுப்ரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்தை பார்த்து செல்வராகவன் ‘என்னோட தம்பியை எப்படியெல்லாம் சினிமாவுல கொண்டுவரணும்னு இருந்தேன்,எல்லாத்தையும் அழிச்சிட்டியே’என்று ரத்தக்கண்ணீர் வடித்தது சினிமாக்காரர்களுக்கு தெரியும்.ஆனால் திருடா திருடி படத்தின் வெற்றி தனுஷை கமர்சியல் ஹீரோவாக்கியது. இப்படி சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களிலிருந்து சாதாரண ரசிகன் வரை இந்த படம் ஓடுமா, டப்பாவுக்குள் சுருண்டு விடுமா என்று சொல்லமுடிவதில்லை.

    சில தோல்விப்படங்களிலிருந்து என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ற முடிவிற்கு வரலாம். முதலாவதாக கதாநாயக பிம்பம். கதாநாயக பிம்பத்திற்கு ஒத்துவராத படம் தோல்வியையே தழுவியிருக்கிறது. எம்.ஜி.ஆர் வெற்றிகரமான நடிகராக ஆனபிறகு கடைசியில் அவர் இறந்துபோவது மாதிரியான கதைகளை ரசிகர்கள் விரும்பவில்லை. பாசம் படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான். ரஜினிக்கும் இதே கதிதான். தளபதி கதைப்படி ரஜினி கடைசியில் உயிர்விட வேண்டும். ரசிகர்கள்  தியேட்டரை துவம்சம் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் ஒரிஜினல் க்ளைமாக்ஸ் மலையாள பதிப்புக்கும்  தமிழில் உல்டா க்ளைமாக்ஸும் வைத்து தப்பித்துக் கொண்டார்கள். அதே போல எம்.ஜி.ஆர் மக்களுக்காக உழைப்பவர்; குரல் கொடுப்பவர். மற்ற கதாநாயகர்கள் போல ஜாலியாக நடித்த தேவர் பிலிம்ஸின் தேர்த்திருவிழா, காதல் வாகனம் இரண்டு படமும் காலி. கதாநாயக பிம்பத்திற்கு சற்றும் ஒத்துவராத, சிவாஜிக்கு ஐந்து காதலிகள் என்ற பாவை விளக்கு படத்தையும் மக்கள் எற்றுக் கொள்ளவில்லை. ஒருவேளை அன்றைய காதல் மன்னன் ஜெமினி இந்த படத்தில் நடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். பாலச்சந்தர் உச்சத்திலிருந்த காலத்தில், சிவாஜியை இயக்கிய படம் எதிரொலி. இவர்கள் இருவரும் இணைந்த ஒரே படம். ரயில் பயணத்தில் தவறுதலாக தன்னுடன் வந்துவிட்ட பணப்பெட்டியை சிவாஜி வைத்துக்கொள்வார், இத்தனைக்கும் குற்ற உணர்ச்சியுடன். அந்த காலகட்டத்தில் சிவாஜியை திருடனாக காட்டுவதா? என்று ரசிகர்கள் படத்தை புறக்கணித்து விட்டார்கள். ஆனால் இன்று திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடித்ததோடில்லாமல், கடைசியில் நேர்மையான போலீஸ் அதிகாரியை சுட்டுவிட்டு அஜித்தும் அர்ஜுனும் சிரிக்கும் மங்காத்தா ஹிட். மக்களின் மாறிவரும் மன நிலைக்கேற்ப விதிகள் மாறிக்கொண்டேயிருக்கிறது. சிவாஜி நெகட்டிவ் ரோலில் நடித்த தூக்கு தூக்கி படம் அவுட்.

     அதேபோல கதாநாயக பிம்பத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படங்களும் பெரிய தோல்வியையே தழுவியுள்ளன. ரஜினியின் பாபா சிறந்த உதாரணம்.ரஜினி இருந்தாலே போதும் படம் பெரும் வெற்றி அடைந்துவிடும் என்று கதையில் கோட்டை விட்டவர்கள் மண்ணை கவ்விய படம். மலையாளத்தில் வெற்றிபெற்ற நல்ல கதையை ரஜினிக்காக சின்னாபின்னமாக்கிய குசேலனும் தோல்வி. கடைசிவரை ‘ நான் இந்த படத்தில் கெஸ்ட் ரோல்தான் செய்கிறேன். பசுபதிதான் கதாநாயகன்’ என்று ரஜினி தொடர்ந்து கதறியதை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை; படத்தின் இயக்குநர் வாசு உட்பட. பெரிய இயக்குநர்களால் குஷ்புவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட கேப்டன் மகள், ஜாதிமல்லி ஒரே நாளில் வெளியாகி மண்ணைக்கவ்வின. குஷ்புவின் மார்க்கெட் டும் காலி. விஜய்யின் சுறா, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், அஜித்தின் அசல் என்று ஒவ்வொரு நடிகருக்கும் தனிக் கட்டுரையே எழுதுமளவிற்கு நீளமான பட்டியல் அது.

    இசைப் படங்கள் மிகப் பெரிய வெற்றிகளை பெறுகிறது என்று எண்ணி பாரதிராஜா எடுத்த காதல் ஓவியம் ஓடவில்லை. மக்களுக்கு படத்தை ரசிக்கத் தெரியவில்லை என்று திட்டி கமர்ஷியல் படம் எடுக்கிறேன் என்று வாலிபமே வா வா என்ற படத்தை எடுத்தார். படம் ஊத்திக் கொண்டது. இப்படி ரசிகர்களின் மேல் பழியைப் போட்டு பாலுமகேந்திரா எடுத்த நீங்கள் கேட்டவையும் தோல்வியே. அன்றைக்கு மிகப் பெரிய ஹிட் ஜோடியான ரஜினி மாதவியை வைத்து பாலுமகேந்திரா இயக்கிய கமர்ஷியல் படமான உன் கண்ணில் நீர் வழிந்தால் அவுட். இந்த வரிசையில் சுகமான சுமைகள் தோல்விக்குப் பிறகு பார்த்திபன் இயக்கிய உள்ளே வெளியே பார்த்திபனுக்கு நிறைய திட்டுகளுடன் வெற்றியை கொடுத்தது.

எப்போதுமே தன்னுடைய காலகட்டத்தை மீறி அடுத்த கட்டத்தில் படம் எடுப்பவர் கமலஹாசன்.வழக்கமான தமிழ் சினிமா மரபுப்படி மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தை பரிதாப உணர்ச்சியுடன் காட்டாமல் லேசான திமிர்தனத்துடன் காட்டிய ராஜபார்வை தோல்விப்படம்.மக்களுக்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே தெரியாத காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதாவுடன் கூட்டுசேர்ந்து விக்ரம் என்ற தோல்வியை கொடுத்தவர். இன்றைக்கு வெளியானால் வெற்றி பெரும் வாய்ப்புள்ள படங்கள் இவை. மகாநதி, அன்பே சிவம், ஹே ராம் என்று இவரின் படங்களை தியேட்டரில் பார்க்காமல் தோற்கடித்து விட்டு டி.வியில் கண்ணீர் வழிய பார்ப்பவர்கள் நம் மக்கள்.

கமலஹாசனை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கமலுக்கும் பெருப்பாலும் ஏழாம் பொருத்தம்தான். கமலினால் ஆளவந்தான் பெரும் நஷ்டம் என்று அப்போதே கதறியவர் தயாரிப்பாளர் தாணு. அப்போது கமலும் சரிகாவும் பிரிந்த நேரம். தாணு அவரின் அடுத்த தயாரிப்பான புன்னகைப் பூவே படத்தில் சரிகாவை ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடவிட்டு கமலை பழி தீர்த்துக்கொண்டார். கே.பாலச்சந்தருக்கும் கமலஹாசனுக்கும் துணையாக இருந்து பல வெற்றிப்படங்களைத் தர காரணமாக இருந்தவர் அனந்து. உலக சினிமாக்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் என்று கமலஹாசனால் சிலாகித்து சொல்லப்பட்டவர். ஆனால் இவர் இயக்கிய ஒரே படமான சிகரம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய ராஜ்கிரணுக்கு மூன்று வெற்றிகளுக்கு பிறகு மாணிக்கம்,பொன்னு விளையற பூமி, பாசமுள்ள பாண்டியரே என்று வரிசையாக தோல்விப் படங்கள்.கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களுக்கு தன்னை பொருத்திக்கொண்டு மீண்டு விட்டார். ராமராஜன் கொடுக்காத ஹிட்டா?  

95 க்குப் பிறகு ஏகப்பட்ட ராசாக்கள், பாட்டுக்காரன்கள் என்று மேதை வரை குட்டிக்கரணம் அடித்துப் பார்த்து விட்டார். ம்ஹும்... அமிதாப் பச்சன் மதிக்கும் மிகப்பெரிய திரைக்கதையாசிரியர் கே.பாக்யராஜ். வரிசையாக ஏழு வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர்.அவருடைய ‘வாங்க சினிமா பற்றி பேசலாம்’ புத்தகத்தில்,தோல்விப் படங்களின் காரணத்தை அறிந்து கொள்ள,ஓடாத படங்களை தேடித்தேடிப் பார்த்ததை குறிப்பிடுகிறார். ஆனால் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரியி’ல் தொடங்கி வேட்டிய மடிச்சு கட்டு, ஞானப்பழம், பாரிஜாதம் என்று இன்று வரை வரிசையாக தோல்விப் படங்கள். டி.ராஜேந்தர் ஒரு தலை ராகம் தொடங்கி என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சபதம் என்று பல ஹிட் கொடுத்தவர். கடைசியாக 92 ல் எங்க வீட்டு வேலன் வெற்றிப் படம். அதன் பிறகு வரிசையாக தோல்விப் படங்கள் வீராசாமி வரை. இந்த வரிசையில் முதலில் வருபவர்கள் பாரதிராஜாவும் பாலச்சந்தரும். மணிரத்னம் தமிழக இயக்குநராக இருந்தவரை அத்தனையும் ஹிட். இந்திய இயக்குநராக அவர் மாறிய பிறகு ஹிட்டான இரண்டு படங்கள் பம்பாயும் அலைபாயுதேவும்தான். கடைசியாக வெளிவந்த ராவணன், கடல் இரண்டுமே மிகப்பெரிய தோல்வி. இன்றைய காலத்திற்கேற்றவாறு இவர்களால் படம் செய்ய முடியவில்லை. அல்லது இவர்களின் ஸ்டைல் மக்களுக்கு அலுத்துவிட்டது.

சினிமாவில் பிள்ளை பாசத்தால் தடுக்கி விழுந்தவர்கள் நிறைய பேர். பாரதிராஜா மனோஜை அறிமுகப்படுத்துவதற்காக மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் என்று பல திறமைசாலிகளின் கூட்டணியுடன் சறுக்கியது தாஜ்மகாலில். விஜய சாந்தியின் மேனேஜராக இருந்து படிப்படியாக முன்னேறி தயாரிப்பாளரானவர் ஏ.எம்.ரத்னம். இந்தியனில் தொடங்கி குஷி, கில்லி என்று பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர்.அவருடைய மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிய எனக்கு 20 உனக்கு 18,கேடி போன்ற படங்களும் ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் சூர்யா மூவிஸை சரிவில் தள்ளின. ஜோதிகிருஷ்ணா செய்த ஒரே நல்ல காரியம் ஷ்ரேயா, தமனா, இலியானா என்ற கவர்ச்சிப் புயல்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது மட்டும்தான்.இந்த தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பம் படம் மட்டுமே இவரது ஒரே நம்பிக்கை. ஆர்.பி.சௌத்ரி அன்றைக்கு பிரபலமான தயாரிப்பாளர். விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் என்று இயக்குனர் பட்டாளத்தையே உருவாக்கியவர். ஜீவாவை கதாநாயகனாக ஆக்குவதற்குள் பெரும்பாடு பட்டுவிட்டார். கடைசிவரை ஜித்தன் ரமேஷை ஒன்றுமே செய்யமுடியவில்லை.விஜய்யின் அடுத்த படமான ஜில்லா தப்பித்தால் உண்டு. கே.டி.குஞ்சுமோன் ஷங்கரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர். சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதலர் தேசம் என்று இவரின் பட்ஜெட்டும் பெரிசு.வெற்றியும் பெரிசு. ரட்சகன் படத்தில் ஆரம்பித்தது இவரின் சோதனை காலம். நிலாவே வா,என்றென்றும் காதல் என்று சறுக்கி கடைசியாக தன்னுடைய மகனை கதாநாயகனாக்கி கோட்டீஸ்வரன் என்ற படத்தை எடுத்தார். ரிலீஸ் செய்யக் கூட முடியவில்லை.

   சொக்கத் தங்கம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, தமிழன் ஆகிய படங்களின் தொடர் தோல்வியினால் ஜி.வி.பில்ம்ஸ் ஜி.வெங்கடேஸ்வரன் 2003 ல் தற்கொலை செய்து கொண்டார்.

வெயில் திரைப்பட வெற்றிக்குப்பிறகு இயக்குனர் வசந்தபாலன் பேட்டி ஒன்றில்,‘தோல்விப் படம் கொடுத்த பிறகு இரண்டாவது படத்திற்கு வாய்ப்பு தேடுவதென்பது புதியதாக முதல் படத்திற்கு வாய்ப்பு தேடுவதை விட கடினமானது.தனித்து விடப்படுவீர்கள்’ என்று சொல்லியிருந்தார். ஆல்பம் என்ற தோல்விப் படம் கற்றுத்தந்த பாடம் இது. அந்த அனுபவத்திலேயே தமிழ் சினிமாவின் அறிய வகையான தோற்றவனின் கதையை வெயில் படத்தில் சொல்லியிருக்கலாம். பாலாஜி சக்திவேலின் கதையும் ஏறக்குறைய இதேதான். முதல் படம் சாமுராய். விக்ரம் நடிப்பில் ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையை சொன்ன காரணத்தினால் மேக்கிங்கில் நன்றாக இருந்தும் ஓடாத படம்.இப்படி அந்த சமயத்தில் முதல் படத்தில் தோற்ற திறமையான இயக்குனர்களை அடையாளம் கண்டு அவர்கள் வெற்றிப் பெற காரணமாக இருந்தது இயக்குனர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ். முதலில் வெயில்,காதல்,இம்சை அரசன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தாலும் அறை எண் 305 ல் கடவுள்,ரெட்டைச்சுழி போன்ற படங்களின் தோல்வியினால் நஷ்டப்பட்டு,போதும் இந்த விளையாட்டு என்று தயாரிப்பை நிறுத்திக் கொண்டார்.

   ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் ஒரே சமயத்தில் உருவாகும். எப்படி மூன்று இயக்குனர்களுக்கு ஒரே மாதிரியான கதை தோன்றியிருக்கும் என ஆச்சர்யப்பட வேண்டாம். பார்சன் காம்ப்ளக்ஸில் அதே டிவிடியை மூன்று இயக்குனர்களும் தனித்தனியாக வாங்கி பார்த்து ரசித் ததன் விளைவு இது. கதாநாயகனும், நாயகியும் காதலில் விழுவார்கள்.வீட்டின் எதிர்ப்பை சமாளிக்க இருவரும் ஏதோ காரணத்தை வைத்து வீடுமாற்றி  உள்ளே நுழைந்து அவர்களின் அன்பைப் பெற்று கல்யாணம் முடிப்பது கதை. பிரவீன் காந்தின் ஜோடி, வசந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார்,கே.எஸ்.ரவிக்குமாரின் என்றென்றும் காதல் மூன்று படத்தின் கதையும் இதுதான். இதில் ஜோடி மட்டுமே கையை கடிக்காமல் போனது.மற்ற இரண்டும் தோல்விப் படங்கள். இதே போல எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் நடிப்பில் வேகம் என்றொரு படமும் ஜே.கே.ரித்திஷ் நடிப்பில் நாயகன் படமும் ஒரே கதையில் வெளியாகி காணாமல் போயின. மக்கள் தெரிந்தோ தெரியாமலோ இதுமாதிரியான முயற்சிகளை தோற்கடித்தே வந்திருக்கிறார்கள்.

      இன்று தமிழ் சினிமாவின் முகம் மாறிவிட்டது. கரகாட்டக்காரன், முதல் மரியாதை மாதிரி முதல் வாரத்தில் கூட்டமே இல்லாமல் ஓடி பின்னர் பிக்கப் ஆவதற்கான சாத்தியமே இனி இல்லை. பெரும்பாலான படத்திற்கு ஆயுட்காலம் ஒரு வாரம் தான். பத்திரிகைகளில் விமர்சனம் படித்து, நண்பர்கள் சொல்லக்கேட்டு படம் பார்க்கப்போனால் தியேட்டரில் படம் ஓடாது. ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்று பாராட்டைப் பெற்ற படங்களுக்கே இந்த நிலை. ஒரு வாரத்திற்குள் போட்ட பணத்தை எடுக்க நிறைய தியேட்டர்களில் வெளியிட்டு ஊரெல்லாம் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறது. தியேட்டர் கிடைப்பதே பெரும் சாதனை. அதுவும் ஒரு வாரத்திற்கு மேல் ஓடிவிட்டால் பெரிய சாதனைதான். இவ்வளவு பிரச்சனைகளிலும் பெரிய ஸ்டார்களின் சம்பளம் உயர்ந்து கொண்டே வருகிறதே என்று கேட்பவர்களுக்கு ஒரு செய்தி. சமீபத்தில் தலைவா பட பிரச்னையை ஒட்டி அதன் தயாரிப்பாளர் டி.வி முன் கண்ணீர் வடித்தது நாம் அறிந்த விஷயம். தலைவா டி.வி.ரைட்ஸ் 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. பேக் அப்.

நவம்பர், 2013