சினிமா

சாலையின் பாடல்...

இரா. கௌதமன்

திருமணத்திற்கு முந்தைய இரவில் ராணியிடம் அவளுக்குக் கணவனாக வரப்போகும் விஜய் இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்கிறான்.

திடீரென்று சூன்ய வெளியில் தள்ளப்பட்ட ராணிக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒரு நாள் முழுக்க அறைக்குள் அடைந்து கிடப்பவள், வெளியே வந்து முன்னரே பதிவு செய்த ஹனிமூன் பயணத்திட்டப்படி பாரிஸுக்கு தனியாகப் போகப்போவதாக சொல்கிறார். பெற்றோரும் சம்மதிக்க, பஞ்சாப் கிராமத்தை மட்டுமே அறிந்த அந்தப் பெண் வெளி நாடு செல்கிறாள். அங்கு சந்திக்கும் விதவிதமான நபர்களால் அவள் வாழ்வு வண்ணமயமாகிறது. 2014 ல் வெளியான இந்த இந்தி ‘குயீன்' படத்தை தற்போது அத்தனை தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார்கள். பயணங்களின் கதைகளும் அனுபவங்களும் என்றுமே சுவாரஸ்யமானதுதானே.

தொழில் நிமித்தமாகத் தினமும் பயணிப்பவர்களின் கதைகள், சாகசப் பயணம் மேற்கொள்பவர்களின் கதை, மத நம்பிக்கையில் மேற்கொள்ளும் யாத்திரை, வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்காக, இயற்கையை அதன் உன்னதமான இடத்தில் கண்டுணர, மனதில் அழுந்தியிருக்கும் பாரத்தை இறக்கி வைக்க, மூச்சுத்திணறும் செக்கு மாடு வாழ்க்கையிலிருந்து ஆசுவாசப் படுத்திக்கொள்ள, காதலி/காதலன்/மகன்/ அப்பா என்று யாரையாவது தேடிச் செல்லும் பயணங்கள் என்று பயண சினிமாவை நம்முடைய பார்வையில் பலவாறாகப் பிரித்துக் கொள்ளலாம். எப்படிப் பிரித்தாலும் பயண சினிமாவின் நோக்கம் நிலக்காட்சிகளின் வழியே, உணர்வுகளின் வழியே நம்மையும் பயணத்தில் இணைத்துக் கொள்வதுதான்.

தமிழில் பயண சினிமாவின் தொடக்கமாக மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி(1966) படத்தைச் சொல்லலாம். ஸ்டூடியோவுக்குள் தமிழ் சினிமா முடங்கியிருந்த காலத்திலேயே பேருந்து பயணம் மூலமாக கைப்பிடித்து வெளியே நம்மை அழைத்துச் சென்ற படம் அது. முதல் காட்சியில் கொலை நடப்பதை பார்க்கும் நாயகி கல்பனா தப்பிச்செல்ல பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக் கொள்கிறார். காதலன் ரவிச்சந்திரனும் அதே பேருந்தில் ஏறிக்கொள்ள, வில்லன்கள் துரத்த, அதன் பிறகான மொத்த கதையும் பேருந்தைச் சுற்றித்தான். கண்டக்டர் நாகேஷ், டிரைவர் கருணாநிதி, பயணிகளாக மனோரமா, பக்கோடா காதர் என்று கலகலப்பான பேருந்துப் பயணம் விறுவிறுப்பான சினிமாவாகியிருந்தது. அறுபதுகளில் இப்படியான படத்தைக் கனவு காணவே பெரும் தைரியம் தேவைப்பட்டிருக்கும். அதைக் கச்சிதமாக செய்து காட்டியிருந்தது இயக்குநர் பீம்சிங்கின் டீம். பயணம்(1977) படத்தில் ஏறக்குறைய இதே மாதிரி கதையை ரயில் பயணத்தில் பொருத்தியிருந்ததும் முக்கியமான முயற்சியே.

இதன்பிறகான பயண சினிமாக்களில் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்(1973) முக்கியமான முயற்சி. வெளிநாடுகளை நம் கண் முன்னே கொண்டு வருதல். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டும் படங்களும் பாடல்களில் வெளி நாடுகளின் அழகை அள்ளிவந்த படங்களும் நிறையவே வந்துள்ளன. ஆனால் ஜனரஞ்சகமான பயண சினிமா வகைமையில் திருடா திருடா(1993) வையும், பையா(2010) திரைப்படத்தையும் முக்கியமானதாகச் சொல்லலாம்.

இரண்டு சின்ன திருடர்கள், வழியில் இணைந்து கொள்ளும் நாயகி இவர்களின் பயணத்தில் ரிசர்வ் பேங்க் பணத்தை கொள்ளையடித்த பெரிய திருட்டுக் கும்பல் என்று ஓடிக்கொண்டே இருக்கும் பயண சினிமா. பி.சி.ஸ்ரீராமின் காமிரா வழியே தென்னிந்திய மலைகளும் சாலைகளும் அழகாகப் பதிவாகியிருந்தது. மணிரத்னத்தின் பாதையைத் தொடர்ந்து லிங்குசாமி, காதலியைக் காப்பாற்ற காதலன் மேற்கொள்ளும் பயணமாக ‘பையா' படத்தைத் தந்தார். தமிழின் ஜனரஞ்சகமான ரோட் மூவிகளாக இவ்விரு படத்தையும் தைரியமாகச் சொல்லலாம். மணிரத்னமும்,கௌதம் மேனனும் பயணத்தை விரும்பும் இயக்குநர்கள். குற்றவாளியைத் தேடி அமெரிக்கா வரை செல்லும் வேட்டையாடு விளையாடு(2006) நல்ல திகில் பயணம்.

 எதிர்பாராமல் மேற்கொள்ளும் பயணங்களின் வழி நம்முடைய பார்வையையும் வாழ்க்கையையும் மாற்றும் பயண சினிமா அன்பே சிவம் (2003). ஒரிசா மழை வெள்ளத்தில் வேறு வழி இல்லாமல் பொதுவுடமைவாதி நல்ல சிவத்துடன் பயணத்தை தொடங்கும் அன்பரசு சென்னை வந்து சேரும்போது வேறொருவராக மாறியிருப்பார். யாரென்றே தெரியாத சிறுவனின் மரணத்திற்காக அன்பரசு அழும்போது அவருடன் சேர்ந்து நாமும் பயணத்தைத் தொடங்குகிறோம். இரண்டு வெவ்வேறு பின்புலத்தில் இருந்து வந்தவர்களை அந்தப் பயணம் சகோதரர்களாக்கி விடுகிறது.

இந்தப் பயண சினிமாக்களைப் பற்றி பேசும் போது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும் படங்கள் ‘Le Grand Voyage' (2004) மற்றும் The Way(2010). தெற்கு பிரான்சில் வசிக்கும் மஜித் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள விருக்கிறார். காரில் செல்வதென்று முடிவுசெய்து மூவாயிரம் மைல் பயணத்திற்கு இளைய மகன் ரோடாவை காரோட்ட அழைக்கிறார். பிரெஞ்ச் கலாச்சாரத்தில் வளர்ந்த ரோடா விருப்பமின்றி தந்தையுடன் பயணத்தைத் தொடங்குகிறார். தலைமுறை இடைவெளி, கலாச்சார இடைவெளி என்று இரண்டு துருவத்தில் நிற்கும் தந்தை மகனின் பயணம் நம்முடைய ஒவ்வொரு குடும்ப சூழலையும் பிரதிபலிக்கும் உலக சினிமா. பல நாடுகளைக் கடந்து வரும் பயணத்தில் பல இடங்களில் அப்பாவுக்கும் மகனுக்கும் முட்டிக் கொள்கிறது. இறுதியாக மெக்காவிற்கு வருகையில் அப்பாவையும் புனிதப் பயணத்திற்கான அர்த்தத்தையும் ரோடா புரிந்து கொள்கிறான். முதன் முறையாக முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக பணத்தைத் தருகிறான். அப்பாவிற்கும் புனிதப் பயணத்தின் நோக்கம் நிறைவடைந்து விடுகிறது. (எஸ்.ராமகிருஷ்ணன் இந்தப் படத்தைப்பற்றி ‘பெரும் பயணம்' என்று விரிவாக எழுதியிருக்கிறார்).

The Way(2010) அமெரிக்கக் கண் மருத்துவரான தாமஸ் அவெரிக்கும் அவரது மகன் டேனியலுக்குமான உறவு சுமூகமாக இருந்ததில்லை. பிரான்சிலிருந்து ஸ்பெயினிலுள்ள சாண்டியாகோவிற்கு புனித நடைப்பயணம் மேற்கொள்ள விழைகையில்  டேனியல் மரணமடைகிறார். மகனின் உடலைப் பெற பிரான்ஸ் வரும் தாமஸ், மகன் விட்டுச் சென்ற புனிதப் பயணத்தை மேற்கொள்ள நினைக்கிறார். இந்தப் பயணத்தில் உடல் எடையைக் குறைக்க வரும் டச்சுக்காரர், புகைப் பழக்கத்தை நிறுத்த வரும் பிரெஞ்சு நாட்டுப் பெண், எழுத்தாளராக விரும்புபவர் ஆகிய மூவரும் தற்செயலாக இணைந்துகொள்ள இவர்களுக்குள்ள முரணும் இசைவும் படத்தை நெருக்கமாக்குகிறது. இறுகிய மனதுடன் மகனின் இழப்பை யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் வேகமாக நடப்பதன் மூலமாகவே எல்லாக் கசப்பையும் வெளியேற்ற நினைக்கும் தாமஸ் பயண முடிவில் மகனை நெருக்கமாக உணர்கிறார்.

இந்தப் படங்களைப் பற்றிப் பேசும்போது நினைவுக்கு வருபவர்கள் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள். இந்து புனிதத் தலங்களுக்கு வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். ஏன் இவற்றில் எதுவுமே பதிவாகவில்லை. சினிமாக்காரர்களிடம் மட்டும் கேட்க வேண்டிய கேள்வி இல்லை இது. ஏனென்றால் மேற்கில் வந்த நல்ல பயண சினிமாக்கள் அத்தனையும் புத்தகங்களிலிருந்துதான் உருவாகியிருக்கிறது. நம்மூரில் பயணம் செய்பவர்களில் எத்தனை பேர் அவர்களின் அனுபவங்களைப் புத்தகமாக்குகிறார்கள்?

தமிழில் உணர்வுப் போராட்டமுள்ள பயண சினிமாவாக மிஷ்கினின் நந்தலாலா(2010)வைக் குறிப்பிடலாம். இரண்டு முதிரா மனங்கள் தாயைத் தேடிப் புறப்படும் பயணம்தான் நந்தலாலா. பயணத்தின் மூலமாக தாய்மையை உணர்ந்து கொள்ளும் இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி. இந்த வரிசையில் காவிரி கரையிலிருந்து சென்னை பிறகு மகளைத் தேடி கொல்கத்தா என்று அலையும் மகாநதி(1994) யும், ஈழத்திலுள்ள அம்மாவைத் தேடி செல்லும் மகளின் பயணமான கன்னத்தில் முத்தமிட்டால்(2002) படமும் உணர்வுபூர்வமான பயண சினிமாக்கள்.

சமீபத்தில் வெளியான மகளிர் மட்டும்(2017) தமிழில் முதல் பெண்களின் பயண சினிமா. ஆண்கள் மட்டும் எப்போது வேண்டுமானாலும் குடும்பப் பந்தத்திலிருந்து சட்டென்று வெளியேறி விடலாம். ஆனால் பெண்களுக்கு குடும்பச்சுமை யிலிருந்து மூன்று நாட்கள் வெளியே வருவதே எவ்வளவு பெரிய சாகசமாக இருக்கிறது என்ற கருத்தை பிரம்மா அழுத்தமாகச் சொல்லியிருந்தார். கல்லூரியில் பிரிந்த மூன்று தோழிகளை மீண்டும் கண்டுபிடித்து அவர்களுடன் சேர்ந்து ஆக்ராவிலிருந்து சட்டிஸ்கர் வனங்களில் மூன்று நாட்கள் அலைந்து திரிந்து தங்களை புதுப்பித்துக் கொள்ளும் படம் இது.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்(2004), பத்து எண்றதுக்குள்ள(2015) ஆகிய இரண்டு படங்களும் நல்ல பயண சினிமாவாக வந்திருக்க வேண்டியது. கதையாக நன்றாக இருந்த இவ்விரு படங்களும் திரைக்கதையிலும் படமாக்கலிலும் கவனம் செலுத்தியிருந்தால் முக்கியமான பயண சினிமாவாக ஆகியிருந்திருக்கும்.

பயண சினிமாக்களைப் பற்றி பேசும்போது தவிர்க்க முடியாத சில படங்கள் இருக்கின்றன. மோட்டர் சைக்கிள் டைரிஸ்(2004) அதில் ஒன்று. எர்னஸ்டோ என்ற 23 வயது இளைஞன் தன்னுடைய நண்பன் ஆல்பெர்டோவுடன் இணைந்து தென் அமெரிக்க நாடுகளைப் புரிந்து கொள்ள பைக்கில் பயணத்தை மேற்கொள்கிறான். அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு என்று நீளும் அந்தப் பயணத்தில்தான் எர்னஸ்டோ, சே குவேராவாக உருவாகிறார். பயணத்தில் முக்கியமாக மச்சு பிச்சுவிலுள்ள இன்கா பழங்குடிகளில் இடிந்த நகரத்தைத் துயரத்தோடு கவனிக்கிறார் சே. நாகரிகம் என்ற பெயரில் மறக்கடிக்கப்பட்ட தொன்மையான நாகரிகங்களைப் பற்றி வரும் இடங்களில் தமிழர்களாகிய நமக்குமான செய்தி இருக்கிறது.

இறுதியாக இன் டு தி வைல்ட்(Into the wild, 2007). போலியான வாழ்க்கையை வாழும் பெற்றோர் களிடமிருந்து விலகி

அமெரிக்காவிலிருந்து அலாஸ்காவை நோக்கிச் செல்லும் இளைஞனின் பயணம். மற்ற சினிமாவிலிருந்து இந்தப் படத்தை வேறுபடுத்திக் காட்டுவது அந்த இளைஞன் வாழ விரும்பும் வாழ்க்கை. இயற்கையின் புனிதத் தன்மையை அதன் மிக அருகில் சென்று உணர விரும்புதல். அத்தனை கட்டுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு விட்டு விடுதலையாகி இயற்கையோடு இணைந்து மரணித்துப் போகும் அந்தப் பயணம், அவனின் கண்களில் தெரியும் விடுதலை உணர்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. சாகச பயணங்களின் உச்சம் இன் டு தி வைல்ட்.

பயண சினிமாக்களில் சில எல்லைகளை மட்டுமே தொட்டுப் பார்த்திருக்கிறது தமிழ் சினிமா.

மே, 2018.