சினிமா

சபாவின் மீது யாருக்காவது அக்கறை இருக்கிறதா?

இரா. கௌதமன்

சாதி, மதம், வர்க்கம் என்று பெண்கள் மீதான வன்முறைக்கு எத்தனை சாயம் வேண்டுமானாலும் பூசிக் கொள்ளலாம்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வன்முறை மட்டும் மாறுவதில்லை; காரணங்கள் மட்டும் மாறுகின்றன என்பதை மீண்டுமொருமுறை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது  'A GIRL RIVER: PRICE OF FORGIVENESS என்ற ஹெச்பிஓ ஆவணப்படம். யூ ட்யூபிலும் பார்க்கலாம். ஷர்மீன் ஒபைட் சினாய் என்ற பாகிஸ்தானிய பெண் இயக்குநரின் இந்த படம் 2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாகிஸ்தானில் ஆணவப்படுகொலை செய்யப்படுகிறார்கள் என்கிறது இந்த ஆவணப்படம்.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள நகரம் குர்ஜன்வாலா. இங்கு பத்தொன்பது வயதான சபா என்ற இளம் பெண்ணுக்கு குஷிர் என்பவரை திருமணம் செய்து வைக்கலாம் என்று அவர் குடும்பம் முடிவு செய்கிறது. சபாவும் சந்தோஷமாக இருக்கிறார். நான்காண்டுகள் கழித்து திருமண பேச்சை எடுக்கும்போது சபாவின் மாமா அதை எதிர்க்கிறார். காரணம், மாப்பிள்ளை வீட்டார் தங்களை விட வசதி குறைவானவர்கள் என்பதே. அதற்கு பதிலாக தன்னுடைய மச்சினனுக்கு பெண்ணை கட்டிக்கொடுக்க நிர்ப்பந்திக்கிறார். ஏற்பாடுகளும் நடக்கின்றன.

நான்காண்டுகளாக இவர் தான் கணவர் என்று மனதிற்குள் ஆசையை வளர்த்து வைத்துள்ள சபாவின் விருப்பத்தைக் கேட்பார் இல்லை. ரகசியமாக குஷிருடன் பேசுகிறார் சபா. குஷிரின் குடும்பமும் சம்மதிக்க ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டு வெளியேறும் சபா குஷிருடன் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணம் முடிந்து சில மணி நேரத்தில் சபாவின் தந்தை, மாமாவுடன் உறவினர் பட்டாளம் குஷிரின் வீட்டிற்கு வருகிறார்கள். சபா குடும்ப கௌரவத்தை கெடுத்துவிட்டதாக சொல்லி பஞ்சாயத்து பேசுகிறார்கள். சபாவை தங்களுடன் வருமாறு வற்புறுத்துகிறார்கள். தாங்களே முறைப்படி உறவினர்களை அழைத்து குஷிருடன் திருமணம் செய்த்து வைப்பதாகச் சொல்கிறார்கள். சபா அவர்களை நம்ப மறுக்கிறார். குரானின் மீது சத்தியம் செய்ததும் சபா மனம் மாறி காரில் அவர்களுடன் கிளம்புகிறார்.

வழியில் நதிக்கரை ஓரமாக ஆளரவரமில்லா இடத்தில் கார் நிறுத்தப்படுகிறது. காரிலிருந்து சபாவை வெளியே இழுத்து தள்ளி தாக்கத்தொடங்குகிறார்கள் அவரின் அப்பாவும் மாமாவும். கதறி, கெஞ்சி உயிர்ப்பிச்சை கேட்கும் அந்த இளம் பெண்ணை அவர்கள் மன்னிக்க தயாரில்லை. ஆத்திரம் தீரும் வரை அடித்து உதைத்து முடித்தவுடன் அவரின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் மாமா. உயிர் தப்பும் முனைப்பில் தலையை சபா திருப்ப, துப்பாக்கி குண்டு அவரின் கண்களிலிருந்து கன்னம் தாடை வரை சிதைத்துச் செல்கிறது. சபாவை சாக்குப்பையில் கட்டி அந்த நதியில் வீசிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

நள்ளிரவில் நினைவு திரும்பி ஆற்றிலுள்ள செடி கொடிகளைப் பிடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் கரையேறும் அந்த இளம் பெண், இருட்டில்

தட்டுத்தடுமாறி  இரு சக்கர வாகன வெளிச்சத்தைக் கண்டு அதை நோக்கி செல்கிறார். சாலையைத் தொட்டு ஆள் நடமாட்டமுள்ள பகுதிக்கு வந்து, உதவிக்கு கதறி அழ அங்கிருப்பவர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் சபாவை.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால் முகத்தில் ஆறாத் தழும்புடன் உயிர் பிழைக்கிறார். காவல் துறை அப்பாவையும், மாமாவையும் கைது செய்து

 சிறையிலடைக்கிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் குற்ற உணர்ச்சியே இல்லை. தாங்கள் செய்தது சரியே என்று திடமாகச் சொல்கிறார்கள். சபாவின் தந்தை, குடும்ப கௌரவத்தை குலைக்கும் பெண்களுக்கு இது தான் சரியான தண்டனை என்கிறார்.

அப்பாவும் மாமாவும் செய்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென சபா விரும்புகிறார். அதுவும் குரான் மீது சத்தியம் செய்துவிட்டு அதை மீறியவர்களை தான் எப்படி மன்னிக்க முடியும் என்று கேட்கிறார்.

சபாவின் துயரம் இத்தோடு முடிந்து விடவில்லை. இவர்களை மன்னித்து விடும்படி உறவினர்கள் சபாவையும் குஷிர் குடும்பத்தையும் நெருக்குகிறார்கள். பாகிஸ்தானிய சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண் அல்லது குடும்பம் குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவித்தால் அவர்களுக்கு தண்டனையில்லை.

காவல் துறையினரும் ‘‘குற்றவாளிகளை கைது செய்கிறோம், ஆனால் பாதிக்கப்பட்டவர் மன்னித்து விட்டால் எங்களால் சட்டப்படி எந்த நடவடிக் கையும் எடுக்க முடியாது'' என்று இந்த சட்டத்தைப் பற்றி சலித்துக் கொள்கிறார்கள்.

‘‘தண்டனை அனுபவித்தாலும் சில ஆண்டுகளில் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள். அப்படி வந்த பிறகு உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள், என்ன இருந்தாலும் நாம் எல்லோரும் நல்லது கெட்டதுக்கு உறவினர்களை சார்ந்துதான் இருந்தாக வேண்டும். மன்னிக்கவில்லை என்றால் உறவினர்களை இழந்து விடுவீர்கள்'' என்று பேசிப்பேசி குஷிர் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிறார்கள். மனதிற்குள் அவர்களை மன்னிக்க தயாராக இல்லை என்றாலும் வாழ வந்த குடும்பத்தின் நிர்ப்பந்தத்திற்கான அரை மனதாக ஒப்புக் கொள்கிறார் சபா. ‘‘பாகிஸ்தானின் சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இல்லை. சில ஆண்டுகளில் குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அவரை கொலை செய்ய முயற்சிப்பார்கள், சட்டம் சபாவிற்கு பாதுகாப்பை கொடுக்காது'' என்று அவரின் வழக்கறிஞர் ஜமாலும் சொல்கிறார்.

வழக்கு நடைபெறும் நாள் அன்று, நீதிமன்றத்திற்கு செல்கிறார் சபா. அவருக்குத் தெரியாமலேயே வழக்கறிஞரை மாற்றியிருக்கிறார்கள். சபா, மன்னித்து விட்டதாக வாக்குமூலம் அளித்த அடுத்த நாளே இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

 நீதி மன்றங்கள் தபால் நிலையங்கள் போல செயல்படுகின்றன என்கிறார் வழக்கறிஞர் ஜமால்.

விடுதலையாகி வெளிவரும் சபாவின் தந்தை, ‘நானும் அவளை மன்னித்து விட்டேன், அவளும் என்னை மன்னித்து விட்டாள். ஆனால் இந்த சம்பவத்தினால் எங்கள் குடும்ப கௌரவம் காக்கப்பட்டுள்ளது' என்று இறுமாப்புடன் சொல்கிறார்.

சபாவோ, ‘கணவரின் குடும்பத்திற்காக அவர்களை மன்னித்திருக்கிறேன். மனதளவில் அவர்களை நான் என்றுமே மன்னிக்க மாட்டேன்' என்கிறார்.

உண்மையில் சபா என்ன நினைக்கிறார் என்று எவருக்காவது அக்கறை இருக்கிறதா என்ன?

மார்ச் 2021