சினிமா

கணவனைச் சுடலாமா?

இரா. கௌதமன்

ரகசிய தகவல் கிடைத்தது.... இந்த வசனத்தைப் பல திரைப்படங்களில் பல இடங்களில் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படியான ரகசிய தகவல்கள் எப்படி பெறப்படுகின்றன? அதுவும் பகை நாட்டின் ராணுவ ரகசியங்களை ஒற்றறிதல் அவ்வளவு எளிதான காரியமா என்ன?  இந்தப் பணியில் என்ன விதமான ஒற்றர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள்? ஒற்று வேலைக்காக அவர்கள் கொடுக்கும் விலை என்ன? இப்படியான பல கேள்விகளுக்குப் பதிலாக வெளிவந்திருக்கிறது அலியா பட் நடித்த ‘ராஸி' திரைப்படம்.

ஜேம்ஸ் பாண்ட் பட கதை போலிருக்கிறதே என்று இதழோரம் மென்முறுவல் பூப்பவர்களுக்கு ஒரு தகவல், ராஸி திரைப்படம்‘ காலிங் ஷெஹ்மத்' (Calling Schmat) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஹரிந்தர் சிக்காவின் இந்த நாவல் ஒரு உண்மைக் கதை. எட்டு ஆண்டுகள் உழைப்பில் உருவான அவரின் முதல்நாவலும் கூட.

கார்கில் போர் சமயத்தில் ராணுவ அதிகாரியாக பணிபுரியும் சிக்கா, சக ராணுவ அதிகாரி ஒருவரை சந்திக்கிறார். அவருடைய தாய் 1970 சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் போரின் போதுசெய்த சாகச செயலை அவர் சொல்லக்கேட்கிறார். பின்னர் அவரின் தாயாரைச் சந்தித்து முழுக்கதையையும் தெரிந்துகொண்டு நாவலை உருவாக்கியிருக்கிறார் சிக்கா. பாகிஸ்தான் ராணுவ குடும்பத்திற்குள் நுழைந்து தகவல் சேகரித்த அந்த வீரப் பெண்மணியை அவ்வளவு எளிதாக பேச வைக்க முடியவில்லை. வீட்டு வாசலில் ஒரு நாள் முழுக்க காத்திருந்தே அவரை சம்மதிக்க வைத்திருக்கிறார் சிக்கா.

காஷ்மீரில் கல்லூரி படிப்பிலிருக்கும் செஹ்மத்கான் (அலியாபட்) அவருடைய அப்பா உடல் நிலை சரியில்லாததால் ஊருக்கு வருகிறார். அப்பாவிற்கு கேன்சர் என்பது முதல் இடி; அப்பாவின் உளவாளி இடத்தை நிரப்ப செஹ்மத் தன்னிச்சையான தேர்வு என்பது இரண்டாவது இடி. 1971 ல் கிழக்கு பாகிஸ்தானில் பிரச்னைகள் முற்றியிருந்த சமயம். தாய் நாட்டிற்காக விரும்பியே களத்திலிறங்குகிறார். பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி குடும்பத்தில் மருமகளாகப் போய்ச்சேருகிறார். அப்பா, இரண்டு மகன்கள் என்று குடும்பமே ராணுவ குடும்பம். கதைக் களனை மிகத் தெளிவாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் மேக்னா குல்சார். பாகிஸ்தான் மீது வெறுப்பைக் கக்காமல் நடு நிலையுடன் கையாளப்பட்டிருக்கிறது. வழக்கமான இந்திய சினிமாக்களில் காட்டப்படும் பாகிஸ்தான் ராணுவ காட்சிகள் இல்லை அவை. அவர்களுடைய அன்பும், செஹ்மத் மீது அவர்களின் பரிவையும் பார்க்கும் போது நமக்கு அவர்கள் மீது பரிதாபமே வருகிறது. உளவாளிக்கான பயிற்சிகளில் சற்றும் சினிமாத்தனம் இல்லாத காட்சிகள் படத்திற்கு பலம்.

பாசமான குடும்பத்தில் உளவாளியாக செஹ்மத். அந்த வீட்டின் மருமகளாக ஒன்றவே முடியாத தவிப்பிலிருப்பார். மதில்மேல் பூனை முக பாவனைகளில் ஏற்படும் தவிப்பை அலியா பட்

சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அலியா பட்டின் திரை வாழ்வில் ராஸி மிக முக்கியமான படம். செஹ்மத்துக்கும் அவருடைய கணவர் இக்பாலுக்கும் இடையேயான காதல் முகிழும் தருணம் கவித்துவமானது. ஒவ்வொரு தகவலை திரட்டுவதும் அதை இந்தியாவிற்கு தெரிவிப்பதும் திகில் நிமிடங்கள். காஸி நீர் மூழ்கிக் கப்பல் மூலமாக இந்திய கடற் பரப்பில் பாகிஸ்தான் நிகழ்த்தவிருந்த தாக்குதல் திட்டத்தை சரியான சமயத்தில் தெரிவித்து அதை முறியடிக்க உதவுகிறார். தான் நேசிக்கும் கணவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட வேண்டிய அவசியம் வருகிறது.

ராஸியைப் பார்க்கும் போது உடனடியாக நமக்கு நினைவில் வரும் தமிழ்ப் படம் ‘ அந்த நாள்(1954). வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கி சிவாஜி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த படம். இந்தியாவில் முதன் முதலில் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் இல்லாமல் வந்த படம். அகிரா குரசோவாவின் ‘ராஷமோன்' திரைப்பட பாணியை கதை சொல்லும் முறைக்குப் பயன்படுத்தியிருப்பார். கொலைக்கான காரணத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களில் பார்வையில் சொல்ல புலனாய்வு அதிகாரியான ஜாவர் சீத்தாராமன் ( படத்தின் கதையும் அவர்தான்) உண்மையைத் தேடி கண்டடைவது சுவராஸ்யமாக படமாக்கப்பட்டிருந்தது. 1950 களில் ஆங்கில பட பாணியில் கருப்பு வெள்ளையில் வித்தியாசமான காமிரா, லைட்டிங் அமைப்புடன் வெளியான இந்தப் படம் ஏவிஎம் நிறுவனத்திற்கு தோல்விப் படமாகத்தான் அமைந்தது என்று தமிழ் சினிமா வரலாறு புத்தகத்தில் அறந்தை நாராயணன் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேடியோ என்ஜினியரான சிவாஜி முதல் காட்சியிலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார். சுட்டது யார் என்ற புலனாய்வின் வழியே கதை விரிகிறது. சொத்துப் பிரச்னை, நடன மங்கையுடனான தொடர்பு என்று சந்தேக வலையில் பலரும் விழ, யாரும் எதிர்பாராத திருப்பமாக மனைவி பண்டரிபாய் கையாலயே சுடப்பட்டு இறந்திருப்பார் சிவாஜி.

இரண்டாம் உலகப்போரின் போது தன்னுடைய திறமையை மதிக்காத இந்தியாவை பழிவாங்கும் எண்ணத்துடன் ஜப்பானின் உளவாளியாக மாறியிருப்பார் சிவாஜி. தேச நலனில் அக்கறைக் கொண்ட பண்டரிபாய் கணவனுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க வேண்டிய கட்டாயம்.

இரண்டு படத்திலும் நாட்டின் நலன் மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தை விட 1954 ல் கணவனை மனைவி துப்பாக்கியால் சுட்டார் என்பது சினிமா என்ற ஊடகத்தில் புரட்சிகரமான முயற்சி.

ராஸி படத்தில் செஹ்மத் இரண்டு கொலைகளைச் செய்கிறார். ஆனால் கணவனை கொல்ல நினைப்பதில்லை. கணவன் கொல்லப்படுவதற்கு காரணமாகிறார். அவர் இறந்த பிறகு அதற்காக வருத்தப்படவும் செய்கிறார்.

நாட்டிற்காக யுத்த முனையில் செய்யப்படும் தியாகங்கள் மட்டுமே தியாகங்கள் அல்ல, முகம் தெரியாத பலரின் தியாகங்களால் தான் நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்று ஒரு கடற்படை அதிகாரி உரையுடன் தொடங்குகிறது ராஸி படம்.

செஹ்மத்தின் உளவாளி வேடத்தை அறிந்து கொதிக்கும் அவரது மாமனாரான ராணுவ அதிகாரியிடம் கணவன் இக்பால் சொல்லும் வசனம் மனதிற்குள் சுழன்றுக் கொண்டே இருக்கிறது.

‘அவளைத் திட்ட வேண்டாம். நாம் நம்முடைய நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதைப் போல அவள் அவளுடைய நாட்டிற்கு விசுவாசமாக இருந்திருக்கிறாள்'.

ஆகஸ்ட், 2018.