கோ. தனஞ்செயன் பேசுகிறார்... 
சினிமா

ஒரு சமயத்தில் ஒரு படம் மட்டும் செய்யுங்கள்!

கற்பகவிநாயகம்

நான் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு, 1979 இல் சினிமா அனுபவம் ஏதும் இல்லாமல் இங்கு வந்தேன். முதலில் தோல் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வந்தேன்.

 அமைச்சராகவும், சத்யா மூவிஸ் பட தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகள் செல்வியும் நானும் சந்தித்து விரும்பித்  திருமணம் செய்து கொண்டோம். ஆர்.எம்.வீ, அமைச்சராக பிசியாக இருந்ததால், என்னை சத்யா மூவிஸை, பகுதி நேரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அதை ஏற்றுக் கொண்டு கணக்குகள், தயாரிப்பு செலவு இவற்றை எல்லாம் பார்த்து வந்து கொஞ்சம் கொஞ்சமாக இத்தொழிலைக் கற்றுக் கொண்டேன். படிப்படியாக சினிமா என்னை ஈர்த்து இழுத்துக் கொண்டது. நான் தோல் கம்பெனி வேலையைக் கைவிட்டு முழுக்க சினிமாத் துறையில் இறங்கிவிட்டேன். ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் சார் பண்ணிய ராணுவவீரன், எனக்கு சத்யா மூவிஸில் முதல் படம். அப்போது சத்யா மூவிஸில் கதை இலாகா இருந்தது. பல்வேறு கதாசிரியர்களைக் கதை சொல்லச் சொன்னோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த கதையை முத்துராமன் சார் ரஜினியிடம் சென்று சொன்னார். மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என்று சொல்லி ரஜினி கதையை ஒத்துக் கொண்டதும், நாங்கள் மற்ற டெக்னீசியன்களை முடிவு செய்தோம். எஸ்.பி.எம் சார் மிகப் பல வெற்றிப் படங்களைப் பண்ணியவர். அவரிடமிருந்து புரொடக்சன் பிளானிங் பண்ணுவது எப்படி என்பதை இந்தப் படத்தின் மூலம் கற்றுக் கொண்டேன். மறு நாள் இரண்டு சீன் எடுக்க வேண்டும் என்றால் முதல் நாள் மாலையே அவற்றைக் குறித்து அக்குவேறு ஆணி வேறாக விவாதிப்பார் அவர்.  பக்கா பிளான் போடுவார். பிளானை மறுநாள்
சிறப்பாக முடித்துவிடுவார்.

அப்போது நாச்சியப்பன் என்பவர், ஏ.எல்.எஸ்.இடம் (கண்ணதாசனின் அண்ணன்) வேலை பார்த்து வந்தார். அவர் பாக்கியராஜ்
சாரை என்னிடம் அறிமுகப்படுத்தி ஒரு கதையைச் சொல்ல வைத்தார். அந்தக் கதை எனக்கும் என் தந்தைக்கும் (வீனஸ் கோவிந்தராஜன்) மிகவும் பிடித்துப் போனது. அக்கதைதான் நானும் நாச்சியப்பனும் சேர்ந்து தயாரித்த 'அந்த 7 நாட்கள்'. பாக்கியராஜ், திரைக்கதையை கூடுதல் மெருகேற்ற மேலும் 4 மாதங்கள் எடுத்துக் கொண்டார். அவரும் நாச்சியப்பனும் சேர்ந்து ரூ.13
லட்சத்துக்கு பட்ஜெட் போட்டனர். திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தை எடுத்த பாக்யராஜ், கிளைமாக்ஸ் திருப்தியாக வரவில்லை என நிறுத்தி விட்டார். பாரதிராஜா சாருடன் அமர்ந்து ஒரு மாதம் விவாதித்தார். என்னை அழைத்து கிளைமாக்சை விளக்கினார். ரொம்ப ரொம்ப அற்புதமாக இருந்தது.  கிளைமாக்சை சேர்த்து முடித்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டினோம். காட்டிய உடனே ஒவ்வொரு ஏரியாவாக வாங்கிச்
சென்றனர். அது ஒரு தீபாவளி நேரம்.

ரஜினி சார், கமல் சார் படம் எல்லாம் வந்தது. இந்தப் படத்தையும் அதே சமயத்தில் ரிலீஸ் செய்யலாம் என விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். நாங்கள் கதை மேல் நம்பிக்கை வைத்து வெளியிட்டோம். படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதற்குக்காரணம் இதன் திரைக்கதையும் கிளைமாக்சும். சென்னை ஆனந்த் தியேட்டரில் முதல் காட்சியைப் பார்த்தேன். படம் முடியும்போது ஜனங்கள் எல்லோரும் திரைக்கு முன் வந்து நின்று கைதட்டினார்கள். இத்தனைக்கும் பாக்யராஜ் சார்க்கு நடிப்பில் இதுதான் முதல் படம். அப்போது விநியோகஸ்தர்கள் எல்லோரும் வந்து, ''சார் எங்களுக்கு குறைந்த விலையில்தான் படம் கொடுத்தீங்க. படம் ரொம்ப நல்லா போயிருக்கு'' எனச் சொல்லி, கூடுதலாக ஒரு தொகையைத் தந்தனர்.

சத்யஜோதி தியாகாரஜன் உரையின்போது...

அதைத் தொடர்ந்து பல படங்கள் எடுத்தோம்.
சத்யஜோதி பிலிம்சில் கமர்சியல் மட்டுமல்லாமல் ரொமாண்டிக் கதை, குடும்பக் கதையும் பண்ணலாம் என முடிவெடுத்தோம். அப்போது மணிரத்னம் எனக்கு பாலு மகேந்திராவை அறிமுகம் செய்தார். அவரிடம் மூன்றாம் பிறையின் முழுத் திரைக்கதையையும் கேட்டேன். இந்தக் கதைக்கு கமல் சார் சரியாக வருவார் என்று பாலு சொன்னார். அந்தக் காலகட்டத்தில் கமல் சார் கமர்சியலா சகலகலா வல்லவன் மாதிரி படங்களைப் பண்ணிக் கொண்டு இருந்தார். அவரிடம் தயக்கத்தோடுதான் அணுகினோம். அவர் முழுத் திரைக்கதையையும் வாங்கிப் படித்தார். ''நல்லாருக்கு. பண்ணலாம். ஆனால் கொஞ்சம் கிளாஸா இருக்கு. இருந்தாலும் பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டு அவரே ஸ்ரீதேவியிடம் பேசி சம்மதிக்க வைத்தார். பாலுமகேந்திரா, தான் போட்டுக் கொடுத்த பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தார். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால், அப்போதெல்லாம் முழு ஸ்கிரிப்டையும் ரெடி பண்ணிவிட்டு, டைரக்டரும் நாங்களும் ஒரு ஃபேமிலியாக இருந்து பட்ஜெட்டை போட்டுவிட்டுதான் ஷூட்டிங்குக்கே போவோம். அந்தளவுக்கு தொழில் நன்றாக இருந்தது. அதே போல் விநியோகஸ்தர்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, படத்துக்கு பூஜை போட்ட அன்றே அட்வான்ஸ் தந்தனர். படம் ஒவ்வொரு ஷெட்யூல் போகும்போதும் எங்களுக்குப் பணம் அனுப்பினர். நாங்கள் கடன் கேட்டு வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே வரவில்லை. நெகடிவ் பைனான்சும் (கந்து வட்டி) அப்போது போடவில்லை.

எல்லாம் மாறிவிட்டது. இப்போ ஏரியா எல்லாம் உடனே போவதில்லை. விநியோகஸ்தர்கள், ஹைப் என்ன, மீடியா டிரென்ட் என்ன என்று பார்க்கிறார்கள். பாட்டு நல்லா வந்திருக்கா என்று பார்க்கிறார்கள். ஒன்றிரண்டு பாட்டுகள் நல்லா வந்திருந்தால்தான் மார்க்கெட்டிங் செய்ய முடிகிறது.

முன்பு தயாரிப்பாளரிடம் டைரக்டர் வந்து கதை சொல்லி எல்லாவற்றையும் முடிவு செய்தோம். இப்போதோ டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்டிடம்தான் கதையை சொல்லுகிறார். ஆர்ட்டிஸ்ட்டே தயாரிப்பாளரையும் டெக்னீசியன்களையும் முடிவு செய்கிறார்.

நான் நிறைய சின்னப் படங்கள் எடுத்திருக்கிறேன்.  இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் ஆகிய படங்களை கதையை நம்பித்தான் எடுத்தேன்.  கதிரின் முதல் படமான இதயத்தை எடுத்து முடித்து விநியோகஸ்தர்களிடம் போட்டுக் காட்டினோம். அவர்கள் ''படம் ரொம்ப கிளாஸாக வந்திருக்கு. ஓடாது'' என்றனர். எனவே இதை நாங்கள் சொந்தமாக வெளியிட்டோம். இதன் திரைக்கதைதான் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. தயவுசெய்து ஸ்கிரிப்டில் இன்வால்வ் ஆகுங்க. முழு திரைக்கதையையும் கேளுங்க. படமாக்கி போஸ்ட் புரொடக்சன் போவதற்கு முன் இரண்டு தடவையாவது படத்தைப் பாருங்க. உங்கள் அபிப்பிராயத்தை டைரக்டரிடம் சொல்லுங்க. டபுள் பாசிட்டிவை பாருங்க. உங்களுக்கு அப்போதான் நம்பிக்கை வரும். அதன் மூலம் உங்கள் பிராடக்டை நம்பி தைரியமாக மார்கெட்டிங் பண்ணலாம்.

(BOFTA திரைப்பட கல்லூரி சார்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் நடத்திய திரைப்பட தயாரிப்பு - விநியோகம் - வியாபாரம் - விளம்பரம் பற்றிய பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளர்
சத்யஜோதி தியாகராஜன் பேசியதிலிருந்து ஒரு பகுதி)

செப்டெம்பர், 2019.