சமந்தா 
சினிமா

சமந்தாவை சிறையில் அடைக்கணுமா... ஏன்..ஏன்?

Staff Writer

ஹைட்ரஜன் பெராக்சைடு தொடர்பாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக ஊடகத்தில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக அவர் பதில் அளித்துள்ளார்.

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அப்படி, தனது ஸ்டோரி பகுதியில், 'நெபுலைசர்’ கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அத்துடன் “ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.

சமந்தாவின் இந்த பதிவு சமூக ஊடகத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக எக்ஸ் தளத்தில் லிவர் டாக் என்ற மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக சாடியிருந்தார்.

“பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமூகத்தில், பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு அபராதமோ அல்லது சிறைத் தண்டனையோ விதிக்கப்படும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை.” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவைத் தொடர்ந்து பலரும் சமந்தாவின் பதிவுக்கு கடுமையான முறையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

ஹைட்ரஜன் பெராக்சைடு பொருத்திக் கொண்டுள்ள சமந்தா

இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு சமந்தா 3 பக்க அளவில் பதில் அளித்துள்ளார்.

அதில் “கடந்த சில ஆண்டுகளாக, நான் பலவகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. எனக்குப் பரிந்துரைக்கப்பட்ட அனைத்தையும் நான் முயற்சித்தேன். இந்த பரிந்துரைகள் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களிடமிருந்து வந்தவை. என்னைப் போன்ற ஒருவருக்கு முடிந்தவரை தனிப்பட்ட ஆராய்ச்சி செய்த பிறகு இந்த சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இது மிகவும் விலை உயர்ந்தவை. நான் அவற்றை வாங்குவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டசாலி என நினைக்கும் வேளையில், முடியாதவர்களைப் பற்றியும் நான் அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கிறேன். நீண்ட காலமாக, வழக்கமான சிகிச்சைகள் என்னை குணப்படுத்தவில்லை. மற்றவர்களுக்கு அந்த சிகிச்சைகள் பலனளித்திருக்கலாம். அதன் காரணமாக மாற்று சிகிச்சைகளை ஆராய ஆரம்பித்தேன். பல சோதனைகளுக்குப் பிறகு எனக்கு பிரமாதமாக வேலை செய்யும் சிகிச்சைகளைக் கண்டறிந்தேன். அதைத்தான் மற்றவர்களுக்கு பயனளிக்க முடிந்தால் பயனளிக்கட்டுமே என்றுக் கூறினேன்.

டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தகுதி வாய்ந்த மருத்துவரால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், ஒரு ஜென்டில்மேன் அவரும் ஒரு டாக்டர் என நினைக்கிறேன். அவர் என்னை கடுமையாக விமர்சித்துள்ளார். அவருக்கு என்னை விட அதிகம் தெரிந்திருக்கலாம். அதில் சந்தேகமில்லை. அவருடைய உன்னத நோக்கத்தை நான் உறுதியாக நம்புகிறேன். இருப்பினும், அவர் தனது வார்த்தைகளால் மிகவும் என்னை கஷ்டப்படுத்திவிட்டார். குறிப்பாக என்னை சிறையில் அடைக்க என்று பரிந்துரைத்தார்.

நான் ஒரு பிரபல நடிகையாக இருப்பதால், என்மீது அவருக்கு என்ன வன்மமோ தெரியவில்லை. இந்த விஷயத்தை நான் நேரடியாக டீல் செய்யாமல், அந்த மருத்துவரையும் எனக்கு மருந்துகளை பரிந்துரைத்த மருத்துவரையும் நேரடியாக விவாதிக்க வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும்.” என்று நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.