சினிமா

‘GOAT பாடலில் பவதாரிணி குரல் ஏன்? ‘ - யுவன் சங்கர் ராஜா உருக்கம்

Staff Writer

விஜய் நடிக்கும் GOAT படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் அவரது ஐம்பதாவது பிறந்தநாளை ஒட்டி நேற்று வெளியானது. நடிகர் விஜய்- பவதாரணி குரலில் சின்ன சின்ன கண்கள் என்ற அந்த பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி இறந்துவிட்ட நிலையில் அவரது குரலை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி இந்த பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசையமைப்பாளரும் பவதாரிணியின் சகோதரருமான யுவன் சங்கர் ராஜா, பாடல் வெளியானதை அடுத்து இப்பாடல் பதிவு பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

பவதாரணி

“கோட் படத்தின் இரண்டாவது பாடல் எனக்கு மிக முக்கியமானது. இந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியாது. இந்த பாட்டை பெங்களூருவில் கம்போஸ் செய்தபோது நானும் வெங்கட் பிரபுவும் இதை பவதாரிணியை வைத்துப் பாடவைப்போம் என நினைத்திருந்தோம். மருத்துவமனையில் இருந்து அவர் குணமாகி மீண்ட வுடன் இப்பாடலைப் பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் பாடல் கம்போஸ் செய்து ஒரு மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்ட செய்தி கிடைத்தது. இப்படி (செயற்கை நுண்ணறிமூலம்) அவர் குரலை உபயோகிப்போம் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.. என் இசைக்குழுவுக்கு நன்றி. இது ஒரு இனிப்பும் கசப்புமான நிகழ்வு’ என அவர் கூறி இருக்கிறார்.

சின்ன சின்ன கண்கள் பாடலின் ஒரு காட்சியில் விஜய் - சினேகா

யார் குரலையும் செயற்கை நுண்ணறிவுமூலம் உருவாக்கி பாடல்களுக்குப் பயன்படுத்தலாம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் பவதாரிணியின் திடீர் மரணமென்பது இசை ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்திய ஒன்று என்பதால் இந்த பாடல் அனைவரையும் கவனிக்க வைத்தது.

கோட் அறிவியல் புனைவை அடிப்படையாகக் கொண்ட படம். செப்டம்பர் 5 அன்று வெளியாக உள்ளது. சின்ன சின்ன கண்கள் பாடலில் விஜய்- சினேகா தோன்றுகிறார்கள். விஜய் இரட்டை வேடத்தில் தோன்றும் பைக் ரேஸ் காட்சியையும் பிறந்த நாளுக்காக படக்குழு வெளியிட்டது.