விஜய்சேதுபதி 
சினிமா

கதை திருட்டு சிக்கலில் மஹாராஜா!

Staff Writer

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பாராட்டைப் பெற்ற மஹாராஜா படத்தின் கதை திருடப்பட்ட கதை என்று தயாரிப்பாளர் மருதமுத்து கூறியுள்ளார்.

குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி நடிப்பில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் மஹாராஜா. படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும், 10 நாள்களில் ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மஹாராஜா படத்தின் கதை, திருட்டு கதை என்ற குற்றச்சாட்டுக்குள் சிக்கியுள்ளது. தயாரிப்பாளர் மருதமுத்து என்பவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிபோது கூறியதாவது:

தயாரிப்பாளர் மருதமுத்து

“மஹாராஜா படத்தின் கதை முழுக்க முழுக்க நான் வாங்கி வைத்திருந்த கதையிலிருந்து திருடப்பட்டது. 2020இல் என்னிடம் சொல்லப்பட்ட கதை. இந்த கதையை குறும்படமாக எடுக்க நித்திலன் சுவாமிநாதனிடம் பணம் கொடுத்தேன். அவரும் சிறப்பாக குறும்படத்தை எடுத்திருந்தார்.

இந்த கதையை அத்தியாயம் -1 என்ற தலைப்பில் எடுக்க இருந்தேன். அதற்காக கே.எஸ். ரவிக்குமார், சார்லி, அப்புக்குட்டி, சென்றாயனிடம் கால்சீட் வாங்கி வைத்திருந்தேன். மழை காரணமாக நடக்கவில்லை.

இந்த திரைப்படத்தை நான் எடுப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், மஹாராஜா படத்தைப் பார்த்தேன். முழுக்க முழுக்க அது என்னுடைய கதை. இதுதொடர்பாக பாக்யராஜ், பாரதிராஜாவை சென்று சந்தித்து முறையிட்டேன்.

இது பதிவு செய்யப்பட்ட கதை. அதற்கான ஆதாரத்தை வைத்துள்ளேன். கதை எழுதின ஆசிரியரிடம் விலை கொடுத்து வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. அம்மு அபிராமியிடம் கதை சொல்லியிருக்கிறேன். நாயகி ரக்‌ஷனா. இதற்கான ஆதாரம் உள்ளது.

இதற்கு முன்னர் தங்கவேலு என்ற படத்தை தயாரித்துள்ளேன். அது இன்னும் வெளியாகவில்லை. ” என்று கூறிய தயாரிப்பாளர் மருதமுத்து, நித்திலனை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இவரின் இந்த குற்றச்சாட்டு குறித்து நித்திலன் பதில் சொல்வாரா என்று பார்ப்போம்.