லியோ படத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த நேரு உள்விளையாட்டு அரங்கம் 
சினிமா

லியோ இசை வெளியீட்டு விழா ரத்தாக என்ன காரணம்?

Staff Writer

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது விஜய் ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அவ்வப்போது படம் குறித்த புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்தன.

லியோ அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடியே, இதற்கு காரணம் என்று சமூக ஊடகத்தினர் கருத்துகளை தெரிவித்தாலும்; அது இல்லை என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர்.

“லியோ படத்தின் இசை வெளியீட்டு வரும் சனிக்கிழமை நடைபெறும் என படக்குழு அறிவித்தாலும், நிகழ்ச்சி நடைபெறும் இடமான நேரு உள்விளையாட்டு அரங்கம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரங்கத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அரங்கை முன்கூட்டியே தர முடியாது என்றும் அப்படிக் கொடுத்தாலும் ஓரிரு நாள்கள் மட்டுமே தரமுடியும் என்று அரங்க நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

விஜய் போன்ற பெரிய ஹீரோக்களின் மேடையை அலங்கரிக்க ஓரிரு நாட்கள் பத்தாது என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்தது” என்கிறார் அந்த பத்திரிகையாளர்.