மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை சைக்காலஜிக்கல் த்ரில்லரில் அம்பலப்படுத்திய திரைப்படம் வாட்ச். கடந்த ஆண்டு வெளியான அத்திரைப்படத்திற்கு, விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர இருக்கிறது.
வெளியிட்டு பணிகளில் மும்முரமாக இருந்த அப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் அசோகனை தொடர்பு கொண்டு பேசினோம், “நான் அடிப்படையில் ஒரு கார்டூனிஸ்ட். டெக்கன் கிரானிக்கல், டைம்ஸ் பத்திரிகையில் வேலைப் பார்த்திருக்கிறேன். அனிமேஷன், ஸ்டோரி போர்டு, விஎப்கஸ் எல்லாம் தெரியும். அது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறேன். படங்களை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாட்ச் திரைப்படம் எடுத்தேன்.
வாட்ச் குறைந்த முதலீட்டில் எடுத்த படம் என்றாலும் நிறைய பேரின் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் வாட்ச் -2 பாகத்தை உருவாகியுள்ளேன். தமிழ் சினிமாவில் முதல் முறையாக, இந்த படத்தின் ஆடியோ 9.1 டிஜிட்டல் சவுண்டில் அமைக்கப்பட்டுள்ளது.” என்றவரிடம் படத்தின் கதைக்களம் பற்றிக் கேட்டோம்.
face blindness என்ற கான்செப்ட் வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். அதாவது, நான் உங்களைப் பார்த்திருப்பேன், உங்களுடன் பழகி இருப்பேன். எனக்கு ஏற்பட்ட விபத்தினால், உங்களைப் பார்க்கும் போது எனக்கு வேறு ஒரு மனிதர் தெரிவார். ஆனால், உங்களின் பெயர், உங்களுடைய பழக்க வழக்கங்கள் மட்டும் எனக்கு நினைவில் இருக்கும். இந்த விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக முதல் பாகத்தில் வரும் நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் வர மாட்டார்கள். ஒரே கதாபாத்திரத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
வாட்ச் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று ‘கூர்ந்து கவனிப்பது’. இரண்டாவது ‘நேரம்’. கூர்ந்து கவனிப்பது முதல் பாகத்திலும், நேரம் இரண்டாம் பாகத்திலும் காட்டியுள்ளேன். இது வித்தியாசமான திரை அனுபவமாக இருக்கும் என்றார்.
”எங்கள் குடும்பத்தில் யாரும் சினிமாவில் இல்லை. நான் தான் முதன் முதலில் சினிமாவில் இருக்கிறேன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும். துறை சார்ந்த நுணுக்கங்களை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. முதல் படத்தில் அதைக் கற்றுக் கொண்டேன். இரண்டாம் பாகத்தின் வெளியீட்டில் அப்படியான தவறுகள் நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன்” என்றார்.