அங்காடித் தெரு, வெய்யில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் வசந்த பாலனுடன் நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி நடத்திய நேர்காணலின் இரண்டாம் பகுதி.
”அங்காடித் தெருவின் க்ரவுடு டப்பிங்கிற்காக திருநெல்வேலி சென்றிருந்தேன். அங்கு ஜெயமோகன் வந்திருந்தார். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் எப்படி நடக்கும் என்பதை இரவு முழுக்க பேசிக்கொண்டு இருந்தார். காலையில் ஜெயமோகன் கிளம்பிவிட்டார். எனக்கு டப்பிங் போக மனசில்லை.. நாடகமே மனத்துக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.
எனக்கு ரொம்ப நாளாகவே கே. விஸ்வநாத் போன்று படம் எடுக்க ஆசை இருந்தது. அவர் குருமாதிரி எனக்கு. அவருடைய சலங்கை ஒலி, சங்கராபரணம் போன்று இசை, நாட்டியக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்ட் ஃபிலிம் பண்ண ஆசை. இதை ஜெயமோகன் பேச்சு மேலும் அதிகப்படுத்தியது. பின்னர் சங்கரதாஸ் சாமிகள், கே.பி. சுந்தராம்பாள், எஸ்.ஜி. கிட்டப்பா ஆகியோரது வாழ்க்கை கதைகளைத் தேடி தேடி படிக்கிறேன். நாடகம் தொடர்பாக கிட்டதட்ட இருபது இருபத்தைந்து புத்தகங்கள் படித்து முடித்துவிட்டு, ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். இதற்கு நிறைய நடிகர்கள், கிட்டதட்ட பதினைந்து கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை அப்படியே தயாரிப்பாளரிடம் சொன்னால், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்ற தயக்கம் இருந்தது. அங்காடித் தெரு படத்துக்குப் பிறகு உடனே எடுக்க இருந்த படம் காவியத் தலைவன்.
அங்காடித் தெருவின் வெற்றியைத் தொடர்ந்து சித்தார்த்திடம் கதையை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்றவர், தயாரிப்பாளர் சசியிடம் சொல்கிறேன் என்றார். சசிக்கும் இந்த கதை பிடித்திருந்தது. பட்ஜெட் எல்லாம் பேசி, அதன் பிறகுதான் படப்பிடிப்புக்குச் சென்றோம்.
முதலில் இந்தப் படத்தில் சூர்யா, விக்ரம் நடிப்பதாக இருந்தது. ப்ராஜெக்ட் உறுதியானதும் பிருத்விராஜ் நடிப்பது உறுதியானது. அவர் நடித்த எல்லா காட்சிகளும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை. அவர் நடித்து நிற்பார் ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவே கைதட்டும்.” என்கிறார் வசந்தபாலன்.