சினிமா

தங்கலான், கங்குவா... ஞானவேல் ராஜாவுக்கு புதிய சிக்கல்!

Staff Writer

தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கங்குவா படத்தை வெளியிடும் முன்பும் ரூ.1 கோடி டெபாசிட் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல முக்கிய பிரமுகர்கள் பணம் கொடுத்து வைத்துள்ளனர். இந்த பணத்தை அவர் பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே அவர் மரணமும் அடைந்து விட்டார்.

இவரது சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்துவருதோடு, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் பெற்றவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.

அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013ஆம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க கோரி சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஞானவேல் ராஜா -

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், தங்கலான் படத்தை வெளியிடும் முன், ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், அதன்பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் எனவும் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல, அடுத்த படமான கங்குவா படத்தை வெளியிடும் முன் ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram