ஏழை பணக்காரன் என யாராக இருந்தாலும், அவர்கள் பணத்தால் படும் பாட்டை, பேசும் திரைப்படம் தான் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக் நடிப்பில் வெளிவந்துள்ள டக்கர்.
பணக்காரன் ஆக வேண்டும் என நினைக்கிறார் நாயகன் சித்தார்த் (குணசேகரன்). பணம் தரும் பிரச்னையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என விரும்புகிறார் நாயகி திவ்யான்ஷா கௌஷிக் (லக்கி). பணம் இருவரின் வாழ்க்கையிலும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்த, எதேச்சையாக இருவரும் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு அவர்களின் பிரச்னைக்கு தீர்வு சொல்லியதா? இல்லையா? என்பதே மீதி திரைக்கதை.
சித்தார்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகியிருக்கும் படம் என்பதால், டக்கர் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதேபோல், இயக்குநருக்கும் இது முக்கியமான படம். 2014-க்கு பிறகு அவருடைய இரண்டாவது படமாக இது வெளியாகி உள்ளது.
பணத்தால் வரும் பிரச்னைகளை பேச வேண்டும் என நினைத்த இயக்குநர், அதற்கேற்றவாறு கதை தேர்வையும், திரைக்கதை உருவாக்கத்தையும் அமைத்திருக்க வேண்டும். இரண்டிலும் புதுமையே, தனித்தன்மையே இன்றி படத்தை உருவாக்கியுள்ளார். காதல், கவர்ச்சி என இளைஞர்களைக் கவரக் கூடிய விஷங்கள் இருந்தும், சொதப்பியிருக்கிறார்கள். ‘இயக்கத்தில் இது அட்டகாசம்’ என்று எதையும் சொல்ல முடியாது.
சித்தார்த் நடிப்பில் மாற்றம் எதுவும் இல்லை. அதே ஓவர் டோஸான நடிப்பு தான். அவர் ஏற்று நடித்த குணசேகரன் கதாபாத்திரம், தியேட்டரை விட்டு வெளியே வரும்போதே மறந்துவிடும் அளவுக்கு உள்ளது. லக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யான்ஷா கௌஷிக் பட்டையைக் கிளப்புகிறார். யதார்த்தமான நடிப்பு அவருடையது. கொஞ்சம் கவர்ச்சியை குறைத்திருக்கலாம் புண்ணியவதி!. யோகி பாபு, முனிஷ்காந்த் செய்யும் நகைச்சுவைகள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மற்ற புதுமுக நடிகர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையே படத்தை ஓரளவு தாங்கி பிடிக்கிறது. ‘நிரா நிரா’ பாடல் மட்டுமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு பயணக் கதைக்கு ஏற்ற நியாயத்தை செய்கிறது.
டக்கர், நொண்டி ஆட்டம்!